Monday, December 5, 2011

ஒரு பிஞ்சு கைப்பிடி இரவின் வண்ணச் சாயம்



அடர்தூறலுடன் நின்றுபோன
மழை இரவின் பிம்பம்
இருள் தூரிகையினால்
வெளிர்நிறங்கொண்டு தீட்டப்படுகிறது
என்கிறாள் தேவதை யாழினி..
.
இரவிற்கும் மழைக்குமான
ஒரு குறுகிய கைக்குலுக்கல் மூலம்
அபகரிக்கப்படும் நிலவுகள்
அவள் உறக்கங்கள் பற்றிய குறிப்பொன்றை
தங்களகத்தே மறைக்கின்றன..
.
அது பொய்யாகவோ மெய்யாகவோ
கட்டவிழ்க்கப்படும் வேளை
அவை லயிக்கும் கனவுகளில்
நிரந்தரமாய்
இளமஞ்சள் நிறத்தைக் கக்கி நிற்கிறது
படுக்கையறை மின்நிலவு..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5013

Monday, November 28, 2011

எல்லையிழந்த வார்த்தைப் பறவைகள்


வாலறுந்த வார்த்தைகள் உயர
பறந்து கொண்டிருக்கின்றன..

காற்றோடு உறவாடும்
ஒற்றைவழிப் பாதையின் வழிபோக்கப்
பார்வையாளன் என்னை
ஈர்க்கும் அவற்றின் வீரிய விசையை
அவ்வளவாகச் சொல்ல முடிவதில்லை..

தன்னிச்சையாக உடைபடும் நீர்க்குமிழ்களின்
கருமையானதோர் சாரலில்
என் காகிதக் கற்பனைகள் எரிய ஆரம்பிக்க
விடத்தின் ஓரிரண்டு துளி மை..

எல்லையற்றத் தனிமை இடறி
பாதங்கள் நின்று விட
வாலறுந்த வார்த்தைகள் இன்னும்
உயர பறந்து கொண்டிருக்கின்றன..

- தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4996

Monday, November 21, 2011

வரையப்படும் அகால மௌனம்


அடுக்கு மாடி குடியிருப்பின்
பளிங்குக் கற்கள் தோறும்
செதில் செதிலாக
வரையப்பட்டு நீர்க்கிறது
கண்ணீர்த்துளிகளின்
ஒப்புதல் மௌனம்..
கரைந்திடும்
மின்வளையங்களுடன்
மௌனமாய் கடத்தப்படும்
மின்மினிகளைக் கண்டு
உரக்கச் சிரிக்கின்றன
பளிங்குச்சுவரின் வண்ணத்துப்பூச்சிகள்..
- தேனு
 
நன்றி கீற்று,

Tuesday, November 15, 2011

நரகத்தின் உத்தமம்



இரவின் விளிம்பினில்
தொடர்ந்து வரும்
வாலறுந்த கனவுகள் மூன்று
என்னை மீறி
வெவ்வேறு திசை நோக்கி நகர்கின்றன..

முதல் திசையில்
வெண்ணிறத்தில்
ஒற்றை மலருடன் பெண்ணொருத்தியும்,
இரண்டாம் திசையில்
பழுப்பு நிற கண்களுடன்
கூன் விழுந்த மிருகமொன்றும்,
மூன்றாம் திசையில்
உடல் முழுதும் வரிகளுடன்
சர்ப்பமொன்றும்
விரைகின்றன..
நான்காம் திசையின்
கரு நிற பெருவெளியில்
வியர்த்தெழுந்து
விழிக்கிறேன்..
என்னை நோக்கி நகர்கிறது
மரண வாயில்...

 - தேனு

நன்றி வல்லினம்
http://www.vallinam.com.my/issue34/poem8.html

Tuesday, October 11, 2011

இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்


வெண்ணிற இரவுகளைக்
கைகளில் சேகரித்து
யாரும் கானவியலாதொரு
தேசம் நோக்கி ஓடினேன்..

யாருமற்ற அவ்வெளியில்
சாம்பல் மலர்களாலான மழை
பெய்து கொண்டிருக்க
தோளில் உருபெற்ற வலி
மெல்ல மெல்ல பயணித்து
விரல்கள் வழி இரவுகளை நனைக்க
சில்லிட்டது எனக்கு..

குளிர்ந்து விட்ட கைகளில்
நடுங்கிய இரவுகள்
மெல்ல உடல்பெருத்து
விடியல்களாய்
பூப்பெய்து கொண்டிருந்தன..

 - தேனு

நன்றி திண்ணை,

Friday, October 7, 2011

தனித்துவிட்ட அகதி ஒருத்தியின் பாதச்சுவடுகள்

 


உடைந்துருளும் சில்லுகள்
ஒவ்வொன்றும் அதனதன் சுவடுகளை
தனக்கான இருப்பிடத்தில்
நிலைக்கச் செய்து
உருகுகின்றன வெப்பச்சூட்டில்..

கானல் நீராய்
என்னுள் இழையும்
மர்ம நூலொன்றின் நுனியினைப்
பிடித்தவண்ணம் யாருமற்ற அச்சாலையைக்
கடந்து கொண்டிருக்கிறேன் நான்..

அந்த நாழிகையினில்
விழிகள் நிறைக்க
பாதங்களைப் பதம்பார்த்து
என்னுடன் பிணைகிறது
வேள்விகளின் தீயொன்று..

பிணைப்புகளைத் தாண்டி
என்னைத் தீண்டும்
கோட்பாடுகளின் நகைப்புகள்
சாலையின் நீளத்தையும் அகலத்தையும்
ஒன்றிரண்டு காததூரம் அதிகரிக்கின்றன..

காற்றோடு கலந்து
அக்கரையைத் தொடுகையில்
என் நிர்வாணத்தை மறைக்க
தேவையென கொய்யப்படுகின்றன
சில தீத்துகள்கள்..

 - தேனு

நன்றி வல்லினம்,
http://www.vallinam.com.my/issue31/poem2.html

Wednesday, August 31, 2011

நான் எனும் முடிவு


ரத்த மணம், எச்சில் வீரியம்
பின்னிப் பிணைந்து
கிளர்ந்தெழுப்ப
மரணத்தைச் செலுத்தியபடி
கணக்கிடுகிறேன்
மிச்சமான உயிர்களின்
நாடிகள் அனைத்தையும்..

மயான விதிகள்
காக்கப்படும் ஓரிடத்தில்
என்னுள் தெறித்து விழும்
புன்னகையை
எப்படி முயன்றும்
மறைக்க முடியவில்லை..

கண்ணாடி சில்லுகளுக்குள்
உறைந்திருந்த செந்நீரை
அகால தாகம் தீர
தின்றுத் தீர்த்தும்
அடுத்து நிகழ்வதற்கு இழைகிறது
சலனமற்று விரியும்
மரணப் புன்னகை..
.
கவனம்...
பாதையில் நிசப்தத்துடன்
மிச்சப்பட்ட உயிர்களின் ஓலம்..

 - தேனு

நன்றி அதீதம்

Sunday, August 28, 2011

ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்


மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக
அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில்
ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது
வெயில் நுகருமொரு
சொற்ப மரநிழல்..

நிழல் துப்பிய குளிருணர்வில்
புத்தகங்கள் ஒன்றொன்றும்
காந்தப்பிணைப்புடன் இறுக்கமடைய,
கிழிசல்கள் வழி
எழுத்துக்கள் சில
வெப்பமொழியில் ஏதேதோ
பிதற்றத் துவங்கின..

என் விரல் நீவிய புத்தகமொன்று
தான் தானாகவும்
தானே மீதமாகவும் இருக்க,
அட்டைப்படத்தில் நிறைந்திருந்தனர்
சிறுமிகள் சிலர்…
அழுக்குச் சீருடையுடனும்
நாணயச் சிரிப்புடனும்..

– தேனு

நன்றி திண்ணை,
http://puthu.thinnai.com/?p=2064 

Friday, July 29, 2011

உயிர்ப்பூக்களின் மெல்லிய இதழ்கள்


வெயில் முளைத்திடும்
அடிவானத்தின் விளிம்பினில்
விளக்கொளியைத் தேடி மரிக்கின்றன
விட்டில் பூச்சிகள் சில..

மரித்திட்ட பூச்சிகளின்
சாம்பல் துளிகளில்
உயிர்ப்புகளைப் பூசினாற்போல்
உயிர்த்தெழுகிறது விடியல் பூவிதழொன்று..

மணக்கும் அப்பூவிதழில்
மௌனித்திருந்தது,
இருப்பிற்கும் இறப்பிற்கும்
இடையில்
மெல்லியதோர்  ஊடல்மொழி...

காலங்களறியாது
நீர்க்குமிழ்களின்  வண்ணத்தில்
தன்னைத்தானே வரைந்து
நிதர்சனமாய் நகைத்து நிற்கிறாள்
வெப்பச் சிறகுகளுடன் சிறுமி யாழினி...



 - தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4503

Monday, July 4, 2011

ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..



வானெங்கும் கருந்திரள்கள்
நிறைத்திடும்
இரவொன்றின் நேர்க்கோட்டில்
அசையும் வளைவுகளென
நெளிகின்றன இதயத்துடிப்புகள்..

நெற்றி வகிடின் இறுக்கத்தினில்
செவ்வானம் ஒன்றை
எழுதிடச் சொல்லி நிற்கையிலே
அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில்
சிறகு விரிக்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள் சில..

வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க
ஆயிரம் இருப்பினும்
ஒற்றை வெட்கம்
சூடும் உன்னழகினை
யாதென்று எழுதி வார்க்க?

ஒவ்வொரு வார்த்தையையும்
கோர்த்தெடுத்து உறக்கத்திற்கு
பதில் உரைக்கிறேன் நான்..
நிலாக்களைச் சிதறடித்து
விளக்குகளைத்
தனிமையின் இருப்பில் விட்டு
அருகருகே அமர்ந்திருக்கிறோம்,
இரு இணை விழிகளில்
ஒற்றைக்காதலுடன்..

- தேனு

நன்றி திண்ணை
http://puthu.thinnai.com/?p=1701

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15322:2011-06-26-10-25-02&catid=2:poems&Itemid=265
 

Tuesday, June 28, 2011

மிட்டாய் இரவுகள்


மிட்டாய்கோப்பையைத்
தொக்கிக் கொண்டு நிற்கிறது
அந்தவொரு கரடி
என் படுக்கையறை மேசை மீது...

 
மிட்டாய்களை நிரப்பிடும் கோப்பையில்
துகள் துகளாய் பிரித்தெடுத்து
என்னையும் நிரப்பி நகைக்கிறது
மௌனம் கதைக்கும் இதழ்கள்..


காத்திருப்புகள் அதீதமாகும் பட்சத்தில்
மிட்டாய்கோப்பையை
இறுக மூடிக் கொண்டு
பாராமுகமாய் திரும்பிக் கொள்கிறது..


புறக்கணிப்பிற்குப் பிறகான
இரவுகள் முழுதும்
மிட்டாய்கரடி கனவுகளுடனே
நிரம்புகிறது எனக்கு...

என் கையோடு
பிசுபிசுத்து விடுகின்றன
கோப்பை நிறைக்கா
மிட்டாய்கள் சில..


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4286

பிரதிபிம்ப பயணங்கள்



விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் 
என்னை விலக்கி 
அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. 
. 
அவன் யார்? 
என்னைக் காணும் வேளைகளில்
பிறக்கும் குறுநகைப்பிற்கான
தகிக்கும் அர்த்தங்கள் யாது?
எனக்கும் அவனுக்குமான
இடைவெளியின் அலைவரிசை ஒப்பந்தங்கள்
உண்மையில் உரைப்பது என்ன? 
அவன் என்னைத் தீண்டுகையில் 
பிரதிகள் இடம்மாற்றப்படுவதை 
இதழ்களும் செவிகளும் 
உணர மறுப்பதேன்? 
. 
இவ்வாறான எனக்காய் உதிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 
அவனிடம் இருப்பில் இருப்பது 
வெளிப்படையான மௌனம் மட்டுமே..

அவன் மௌனத்தின் உச்சரிப்பினில் 
சகலமும் லயித்திருக்க… 
அவனுக்கான சிறகுகள் எனக்கும் 
எனக்கான எண்ணங்கள் அவனுக்கும் 
இடம் மாறியிருந்ததன…

தற்சமயம் மௌன சிறகுகளுடன் 
பயணித்துக் கொண்டிருக்கிறேன் நான், 
எனக்கு 
கருமையாகத் தெரிகிறதில்லை 
சிறகுகளின் நிறம்…
  
– தேனு 

நன்றி திண்ணை,
http://puthu.thinnai.com/?p=384

Friday, May 20, 2011

வரையப்படும் ஊடக சிறகுகள்




இலகுவாய் தன்னிலை மறந்து
ஓர் சிட்டுக்குருவி
தன் வண்ண சிறகுகள்
விரித்துப் பறந்து கொண்டிருந்தது,
மேசை மீதான புத்தகத்தின்
அட்டைப்படத்தில்...



தலை சாய்த்து விழிக்குமென்
பார்வை செவிகளுக்கு மட்டுமென
சிறகுகள் படபடக்கும்
மெல்லியதோர் சங்கீத நாதம்
நிறைகிறது...




மின்னல் பிம்பங்கள் என்னுள்
நெளியும் தருணம்
மெலிதான முறையில் ஒரு ஊடகம்
அரவமின்றி வகுக்கப்பட,
அறையில் ஆராவாரமற்று
என்னை வெறித்தபடி நிற்கிறது
ஒற்றை மரம்...



மேசை மீதான
புத்தகத்தின் அட்டைப்படத்தில்
வண்ணச் சிறகுகளுடன் நான்...



 -  தேனு


நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14662:2011-05-16-17-00-51&catid=2:poems&Itemid=265

Tuesday, May 17, 2011

ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்


வார்த்தைக்கூடை நிரம்ப
பலவண்ண பொய்களுடன்
வெளியேறுகிறேன்
காலைவெயில் நுகரும்
வியர்வையுடன்...
.
ஒவ்வொரு பொய்
துழாவியெடுத்து
சூடிக் கொள்ளும் வேளையிலும்
கண்ணீர்த்துளிகளுடன்
என் கற்பனை தோட்டத்தில்
ஒரு மலர் உதிர்கிறது...
.
நிலவு நீண்டிடும்
இருளினை அள்ளிப் பருகி
நாளின் இறுதியில் நுழைகிறேன்,
நிர்வாணமாய் நிற்கிறது
அருமை தோட்டம்..
.
மறுநாள் வியர்வை நுகர
நான் வெளியேறுகையில்
தோட்டம் நிரம்ப
வண்ண மலர்கள் பூத்துச்
சிரித்திருக்கின்றன..

- தேனு

நன்றி திண்ணை,

Tuesday, May 10, 2011

இரட்டை ரோஜா இரவு


சத்தமாக
ஒரு உரையாடல்
மௌனித்திருந்த வேளையில்,
இரு உடல்களுடன் தனிமை நாற்றமும்
அறை முழுக்க
கட்டவிழ்க்கப்பட்டிருந்தது..
.
மௌனித்திருந்த உரையாடலின்
முன்குறிப்பு
ஒற்றை இரவிலோ,
ஒற்றை கவிதையிலோ
நிச்சயமாக நிறையாது எனக்கு..
.
பார்வைகளில் பரிமாறப்படும் ஒரு மன்னிப்பில்
நான் நானாகவும்
அவள் நானாகவும் ஒன்றிணைய
அறையின் விளக்குகள்
வெள்ளை நிறத்தில் மழை பொழிவதைப்
விரிவாகச் சொல்வதற்கில்லை...
காதல் என்னும் ஒற்றை சொல்
போதுமானது..
.
பிறகான மிச்ச இரவில்
எங்களுக்குள்ளான இடைவெளியை
நிரப்பிடுகின்றன,
ஒன்றோடொன்று புணரத்துவங்கிய
விழிகளும் விரல்களும்..

 - தேனு

நன்றி திண்ணை ,

Thursday, May 5, 2011

மீனின தேவதை


அழகிய நீர்த்தேக்கமொன்றில்
தங்க மீன்கள் சில
அலைகளென சிலாகித்துக் கிடந்தன..
ஒவ்வொன்றாய் வெளியெடுத்து
இதழ் பதித்து தனக்கான நீர் ஜாடியில்
விட்டுக்கொண்டிருந்தாள் சிறுமியொருத்தி..
மௌனம் பேசிய
தேவதை  நிற மீனை
இறுதியாக விடுத்ததும்
தன்னை மறந்து
ரசனைகளின் இளவரசியாய்
நின்றிருந்தாள்..


அடுத்த சில நிமிடங்களில்
நீர்த்திவளைகளுக்கு மத்தியில்
ஆச்சர்ய விழிகளுடன்
தங்க நிற நுகர்வுச்செதில்கள்
அவளுக்கு வெளிவர
துவங்கியிருந்தன..


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4268
 

Monday, May 2, 2011

இருப்பினைப் பருகும் மொழி


நான் நானாக இருப்பதில்லை..
உணர்வுச் செதில்களில்
உதிரத்தின் சுவை
நிரம்பிடும் வேளைகளில்
நான் மறக்கப்படுகிறேன்..

மிச்சம் வைத்திருக்கும்
சுவை நரம்புகள்
பசியின் எச்சிலை
திரட்டி விழுங்கத்
துவங்கி விட்டன..

எண்ணச் சாளரங்கள் வழி
உட்புகுத்த சதைபடிந்த
கூரிய நகங்கள்
மட்டுமே இருக்க என்னை மீறிய
ஒரு தாகத்தில் தத்தளிக்கிறேன்..

பின்னிருந்து என் கழுத்து
இழுக்கப்படுவதாய்
சந்தேகித்து உணர்வதற்குள்
கொல்லப்படுகிறேன் நான்..
என் சடலம் முன்னமர்ந்து கோடரியுடன்
விம்மி அழுபவளை
ஒன்றும் செய்யாதீர்கள்...
அவள் பெயர் தமிழ்..
சில சமயங்களில் நான்
நானாக இருப்பதில்லை..

 - தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31104302&format=html

Friday, April 29, 2011

கூண்டிற்கருகில் கிளிகள்



விடியல் அழகில்
என்னிடம்
செய்தித்தாளினை
விழிவிரித்து கதைக்க
சுதர்சன் தாத்தா அங்கில்லை..


சில தேக்கரண்டி அன்பைக்
கலந்து
அதிசுத்தமான அய்யங்கார் காபியை
ஆற்றிக் கொடுக்க
மங்களம் பாட்டியும்தான்..


மௌனம் பேசும்
அக்குறுகிய அடுக்களையையும்
கம்பீர நாற்காலியையும்
வெறித்தபடி
அமர்ந்திருக்கிறேன் நான்..


காலையில் இருந்து
வெற்று சுவருடன்
கதைத்துக் கொண்டிருக்கிறது
வானவில் அலைவரிசை...
நேற்று மாலை
செய்தித்தாள்களின்
குண்டுவெடிப்பு
தலைப்புச் செய்தியை..


- தேனு

நன்றி உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4244

Wednesday, April 27, 2011

காய்த்துப் போன பிஞ்சு விரல்கள்



வீடு விட்டு வீடு
விட்டுப் போன உறவுகள்
வனப்புடன் நிலைத்திருக்கின்றன
அவளது நினைவுகளில் மட்டும்..
அக்கரை விட்டு இக்கரை..

நீளும் நாட்களின் அசுத்தங்கள்
மத்தியில்
மெல்லியதோர் ஓலத்துடன்
பம்பரமாய் சுழல்வது
அவளுக்கே உரித்தான சங்கதி
என்பதில்
ஐயமேதும் இருப்பதில்லை..


இக்கரை..
காய்த்துப் போய் தேய்ந்தொழுகும்
ரேகைகளின் ஊடே
வெள்ளைநோட்டுக்களின் வாசம்..
விழிநீரில் கரைந்திட்ட
நிம்மதி முடிச்சுகள்
அனிச்சையாக கிளறப்படுதல்
அவள் குற்றமல்லவே..

அக்கரை...
அஞ்சலில் வந்துசேரும்
அந்நோட்டுக்களில்
துளி துளியாகச் சொட்டிக் கொண்டிருந்தது
சிறிதும் நெடியற்ற
அவளது வியர்வை..

 - தேனு

நன்றி இளமை விகடன்,

Monday, April 25, 2011

கதைக்கும் சுவர்ப்பூச்சுகள்


அழகொழுகும் குட்டி தேவதை,
நீ நிறைத்திருக்கும்
சுண்ணாம்புச் சுவரின்
சித்திரக் கிளிகள்
இசைத்துக் கொண்டிருக்கின்றன..
.
காவலுக்கென
மின்னல் தோரணங்களை
இதய கிளைகளில்
கட்டிவிடும் யதார்த்தம்
உன்னால் மட்டுமே வாய்க்கும்..
.
மௌனமாய்
அக்கிளிகளுக்குள் நடந்தேறும்
கதை மொழிதலும்
கவிதை மொழிதலும்
இரகசியம் என்று
விரல் வைத்து இதழ் குவித்தாய்,
நினைவிருக்கிறது..
.
இரகசியங்களை அவிழ்க்காமல்
நீ தலையாட்டிப் போகையில்
மெல்லியதோர் நகைப்புடன்
இனிக்கிறது
உன் முகத்தில்
பச்சை சிறகுகள் படபடக்கும்
ஒற்றை செவ்வந்தி...


- தேனு

 நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311042414&format=html

Monday, April 18, 2011

பின்னிரவின் ஊடலில்...


இருளோடு சல்லாபிக்க
என்னிடம்
விடை பெற்றுக் கொண்டது,
அந்தவொரு விட்டில் பூச்சி
முறையான முன்னிரவில்..
.
எனக்கேற்ற மௌனத்துடன்
வருகை பதிவேடு இன்னமும்
காலியாக கிடந்தது,
அவன் வரும் நிமிடம்
எதிர்நோக்கி..
.
மல்லிகை மணத்துடன்
என் தனிமைக்குள் நுழையும்
ஒருசில எழுத்துக்கள்
ஆசை தீர உதிர்த்திடும்
எங்களுக்குள்ளான
சின்னச் சின்ன ஊடல்களின்
சிங்காரங்களை...
.
சீண்டிவிட்டு மறைந்திட்டான்
மீண்டும் ஒளியைத்
தன்வசம் இழுத்துக் கொண்டு
அவ்விருளுக்குள்...
கண்ணாமூச்சி ஆட்டம்,
எனக்கும் பிடித்தம்தான்
அவனுடன் விளையாட..
.
விளையாடிய களைப்பில்
தணல் தூண்ட நிலவை
அழைக்கிறேன்,
அணைப்புகளற்று இன்று
குளிர்கிறதாம்,
பின்னிரவின் சிலிர்ப்புகளுடன்
நடுங்குகிறது என் தேகம்..


- தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31104176&format=html

Thursday, April 14, 2011

இழப்பின் உள்தோற்றம்


நிர்வாண மழை நிற்கும்
தெருவினில்
ஏக்கத்துடன் மறைகிறாள்
அவ்வப்போது
பரிச்சயமான சிறுமியொருத்தி..

என்னென்று உற்று நோக்க
முறைப்புகள் மட்டுமே பதிலாய்...
நனைகிறாயா என்றவுடன்
நகைத்து விட்டு
மழையோடு கதைக்கிறேன் என்கிறாள்..

உறுத்தும் விழிகளினூடே
உட்புகுந்த மறுகணம்
தனிமை அடைத்த
நாற்சுவர்களுக்குள் நான்,
யூகிக்க விட்டு வைக்கவில்லை
மணித்துளிகள்..

செவிகளைக் கூராக்க
ஒரே குரல்தான்..
விசும்பலாகவும், ஏளன நகைப்பாகவும்
அக்குரல்
மிச்சப்பட்டிருந்த அச்சத்துடன் துரத்துகையில்,
"க்ரீச்" ஒலியுடன்
கதவுகள் திறக்கப்பட
ஓடுகிறேன் நான்..

"என்னப்பா செய்யுது?"
என் வியர்வையைத்
துடைத்து விட்டு கேட்கிறாள்
சிவந்த விழிகளுடன்
என் 6 வயது மகள்..

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14127:2011-04-14-07-48-09&catid=2:poems&Itemid=265

Monday, April 11, 2011

சாரல்களின் மெல்லிசை



மழை பயிற்றுவிக்கும்
பேச்சுத்துளிகள்
சில யுகங்களை
கடந்திருக்கும் யதார்த்தம்
நமக்கு மட்டுமே உட்பட்டது..
.
சாரலில் மயங்கியிருந்த
உன் மடிமீது
துயில் கொள்கின்றன
சொடுக்கப்படும்
என் விரல்கள்..
.
நிலவுகளை அள்ளித் தெளிக்கும்
உன் கரங்களில்
என்னை முழுதாய்
ஏந்திக் கொள்ளும்
அழகினையும் கற்றுத்தான் வைத்திருக்கிறாய்..
.
நிதம் நமக்கான
குறிப்புகளின் வெற்றிடத்தை
நிரப்பி விடுகின்றன,
அள்ளியெடுத்துக் கதைக்கப்படும்
ஒன்றிரண்டு வண்ணக்கவிதைகள்...
.
வெட்கத்தோடு நூலிழையில்
பின்னப்படும் தென்றல்..
அது வீசும் உன் முகவரியில்
இப்படித்தான் ஒருசில சாரல்கள்
காதல் நுகர்கின்றன...

இசை மழைகிறது... மழை இசைகிறது...

- தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041010&format=html

Tuesday, April 5, 2011

பழியின் நுழைவாயில்



நிலவொழுகும் நள்ளிரவில்
கள்ளிச்செடி முட்களின்
குருதி வண்ணம்
மேனியெங்கும்
புள்ளிகளாய் வழிந்து கொண்டிருந்தன..

விவேகம் விலக்கப்பட்டு
வேகம் மட்டுமே உருவமாய்
தொடர்கிறது
கனத்துப் போன உயிரொன்றின் பயணம்..

அவ்வேகம்
இன்றுவரை துளியளவும்
எதிர்படாததாகவே
தெரிவதில்
வியப்பொன்றும் இருக்கவில்லை..

இதோ தென்பட்டு விட்டது
அதற்கான புற்று வளை..
பெருமூச்சுகள் தீர்ந்திட
சிறு துவாரம் வழி
நுழைந்தும் விட்டாகியது..

அடுத்த சில நொடிகளில்
கையில் கடப்பாரையுடன்
துரத்தியவன்
வெள்ளை நுரை
கக்கி கீழ் விழுந்தான்..

நீலம் பாய்ச்சி
நரகத்தின் விளிம்பில்
அவனை உட்புகுத்தி
அருகிருந்த புதருக்குள்
சற்றும் அரவமின்றி
மறைந்தது
மற்றுமொரு அரவம்..


- தேனு

நன்றி கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13976:2011-04-05-08-10-44&catid=2:poems&Itemid=265

Monday, April 4, 2011

நின்றாடும் மழை நாள்


மழை துவங்கும் நாளொன்றில்
இரகசியமாகச் சிலாகித்து
லயித்திருந்தேன்
தேநீர் கோப்பையுடன்..
.
சன்னல் கம்பிகளோடு
ஒத்திருக்கும் மழைத் துகள்கள்
ஒய்யாரமாய் விழுந்திடும்
என்னறையில்
அழையா விருந்தாளியென
தனிமையின் மீள்வருகை..
.
கோப்பை வெறுமையைக்
கவிழ்க்க மனமின்றி
தொலைத்த தருணங்களைப்
பிரசுரிக்க
இறுக்கம் தளர்த்தி வைக்கிறேன்
மூன்று கால் நாற்காலியில்..
.
மழை நிறங்களை
இரசிக்கும் பட்சத்தில்
துளி துளியாய் சாரலைத்
தேக்கி வைக்கும்
தேநீர் கோப்பையின் யுக்தி
உணர்ந்திட்டது போலும்
மெல்ல மூடிய சன்னல்...
.
மழையின் மிச்சத்தில்
கண்டுணரா பிரதிகளாக
நிகழ்வதை மறந்து
இறந்த காலத்தின் உச்சத்தில்
துயில் கொள்கிறோம்
நானும்,
நெற்றி பரப்பின் ஒரு துளி சாரலும்...
.
 - தேனு

நன்றி திண்ணை

Tuesday, March 29, 2011

இருளும் தருணங்களில்..

 
 
உராய்வுகளும் மோகங்களும் மேலோங்கி
காதல் தொலைந்திருந்து
நானும் என்னவளும் துழாவிய நாட்கள்..
எண்ணிக்கை சற்று அதீதம்..

என் விரல் இடுக்குகளில்
இடைவெளியிட்டு கோர்த்து
வீணை மீட்டும் அவள் விரல்கள்...

விழிகளுக்கருகில் கோலமிட்டு
அவள் மயிர்கீற்றுகளில்
சுருள்படும் குறும்புத்தனம் மிக்க
சுழற்சிகள்..

அவள் ஒற்றை விரலும் என் நெற்றியும்
ஒன்றிப்போக
அவளிடும் திருநீறு..

காதோரம் குறுகுறுக்க
இதழ் குவித்து
மெலிதான மூச்சுக்காற்றோடு
அவளுதிர்க்கும்
எனக்கென்று அவளிட்ட செல்லப் பெயர்..

மீண்டெழுந்து மீட்டு வர
எத்தனப்பட்டு அவள் செய்யும் சில...
மனதோரம் ரம்மிய ரீங்காரமிட்டு
துளிர்விடும் காதல் மடுக்கள்..
அம்மடுக்கள் மீது
ஏறுக்கான கம்பீரத்துடன்
நானும் என் காதலும்.. 
 
 - தேனு

நன்றி நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/03281106.asp

Monday, March 28, 2011

அவள் நிறையும் கிறுக்கல்கள்


வந்து நிற்கும்
நினைவுகளுக்கெல்லாம்
விடையெனவும் தடமெனவும்
ஆங்காங்கே கிறுக்கப்படும் எழுத்துக்களில்
அவ்வளவுமாய்
அவள்தான் நிறைந்திருக்கிறாள்..
.
நாளுக்கொன்றாய்
நாளைக்குமொன்றாய்
விடுபடும் வார்த்தைக்கோர்வைகள்
பலருக்கு கவிதையாகவே
புலப்படுவது
செயப்பாட்டு விந்தையே..
.
அவைகள் வளுக்கான
என் கிறுக்கல்கள்தான்
என்பதில் ஆணித்தரமென
நிற்பதிலிருக்கும்
உணர்வுப் போராட்டம்
சொல்லி மாளாது..
.
வெண்ணிற தாளினமே,
தூது போ!
தனிமையில் சந்தித்து
என் மனதை
விட்டுவா என்னவளிடம்.....
.
அவளால் மட்டும்
வெறுக்கப்படும்
என் வெற்றுக்கிறுக்கல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து
மரித்துக் கொண்டிருக்கின்றன,
ஆறாம் விரலிலிருந்து விடுபட்டுக்
கரையும்
கண்ணீர் புகையென...
 
 - தேனு


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103276&format=html

Friday, March 25, 2011

விழிநீர் நனைக்கும் புன்னகை

Skethcing by my friend Vaishnavi...
Thanks Vaishnavi..


தாள்கள் ஒவ்வொன்றாய்
நிரப்பப்படுகையில்
அழும் வார்த்தைகளின் விசும்பல்கள்
இரவுகளில் மட்டுமே
சில சுற்றுகள் பெருகக்கூடும்..
.
நனையும் கையேடிற்கான
ஆறுதல் மொழி
மௌனம்தான்
என்பதில் மிச்சப்பட்டு
மெலிதாய் இழைகிறது
எனது எழுதுகோல் சாயம்...
.
பிரிவின் வீச்சத்தில்
தெறித்து விழும் புன்னகை,
ஓர் நூற்றாண்டு சோகத்தை
 உள்ளடக்கிய வரிகள்,
கண்ட நொடியில் விளங்கிடாது
அவற்றின் வீரியம்..
.
விளங்கும் வேளையில்
தனிமை குளவிகள்
கொட்ட கொட்ட
ஏற்றுகிறேன் உணர்வுகளை
அதற்கென அலங்கரிக்கப்பட்டதோர்
தற்கொலை விளிம்பினில்...


 - தேனு

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13772:2011-03-25-08-36-44&catid=2:poems&Itemid=265


Tuesday, March 22, 2011

கருநிற பிரதிவாதிகள்


ஒவ்வொருவரின் கீழும்
ஊர்ந்து வருகிறது
ஓர் கரிய உருவம்..
.

செய்வதையே மீண்டும்,
மீண்டும் வந்து செய்தும்
மெலிதாகக் கசிந்து
நடப்புகளுக்கு ஏற்றாற்போல்
அடலாய் விரிவடையும்...
.
நடந்தேறும் எந்தவொரு
பிழையினிற்கும் அதற்கும்
இருப்பில் உள்ள உறுதிப்பத்திரம்
சில நேரங்களில் இயலாமை
காரணமாகவும்
இறுகச் செய்யப்படலாம்...
.
காலங்கள் நகர நகர
அவைகளின் விரிவாக்கம்
சற்றே அச்சுறுத்தும்...
.
அவற்றுக்கான
இரகசியங்கள் ஓர் வேற்றுலகில்
காக்கப்பட்டு
ஆர்ப்பரிப்புகள் ஓங்கியெழும்
கணத்தினில்
ஒவ்வொன்றாக கைகோர்த்து
இருள் கப்பி வானளாவும்
பிம்பமென உருவெடுக்கக் கூடும்...
.
அதற்குக் கீழேயும்
ஊசலாடியவாறு நிற்கும்
கரியதாய் ஓர் பிரதி..

 - தேனு

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13715:2011-03-21-14-18-19&catid=2:poems&Itemid=265

Monday, March 21, 2011

அந்தவொரு மழை நாள்



முன்மொழிக்குப் பிறகான நாளொன்றில்
துளி துளியாய் எதிர்பார்ப்புகள்
சொட்டிக் கொண்டு
சூடேற்ற,
இருவண்ண வானவில் சாரலுடன்
மெய் சிலிர்த்திருந்தோம்..
.
அவளுக்கான என் மௌனமும்
எனக்கான அவள் மௌனமும்
சிலாகித்துக் கொண்டிருந்தன
மழையின்
மெல்லியதோர் இசையோடு..
.
சிலாகிப்புகளின் நெருக்கம்
மென்மேலும் இறுகிக் கொண்டே
இரண்டு இணை அதரங்களுக்கான
இடைவெளியாம்
ஓர் புள்ளிக்குள் ஒடுங்கி விடும்...
.
பின்னணியில்
காதல் மின்மினிகளின்
வியூகமென
மின்வளையங்கள் மீட்டும்
அழகானதோர் வண்ண இசை...

- தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311032013&format=html

முன்மொழி means Proposal (Translation on few requests)

Tuesday, March 15, 2011

எஞ்சிய மௌனத் துளிகள்



முட்டுச்சந்தின்
அந்தவொரு தேநீர்க்கடையில்
கிடத்தப்பட்டிருந்தன
எச்சில் கோப்பைகள்..
.

கோப்பைகள் வழியே
மிளிரும் ஒளிப்பிரிகைகளுக்கும்
தயக்கத்துடன்
மிச்சப்பட்டிருந்த தேநீர்த்துளிகளுக்குமான
இடையில் நீளும் மௌனங்கள்..
.
பார்வைகள் குறுக்கப்பட்டு
மீண்டும் விரிக்கப்படுவதேனோ
சிற்சில விழிகளுக்கு
மட்டுமிட்ட விதியென
நிற்கிறது யூகம்..
.
மிளிர்ந்திடா துளிகள்
ஒவ்வொன்றாய் பிரிக்கப்பட்டு
ஒரே கோப்பையினுள்
சேமிக்கப்பட,
ஒரு கணத்தில்
நிரம்பி வழிந்தது..
.
துடிப்புமில்லை, துள்ளலுமில்லை!!
நிரம்பி வழியும்
அதுவுமொரு எச்சில் கோப்பை...

நன்றி உயிரோசை
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4100

Monday, March 14, 2011

நீ, நான் மற்றும் அவன்


ஆழிகள் கண்டறியா
அமிழ்ந்திருக்கும் தெப்பமென
நனைகூந்தல்...
அந்தவொரு கணத்தில்
சுற்றம் அனைத்தையும் தவிர்த்து
முன்னிலையில் நிறுத்தப்பட்டிருந்தன
காதலும் காமமும்...
.
இன்னதென்று பிரித்தறியாதபடி
படர்ந்து விட்டிருந்த யாக்கைகள்
சீராய்ப் பாடும் தென்றலுக்கு
சற்றே ஊடுருவும் சலிப்பை
வாரி வாரி வழங்கி,
உராய்தலுக்கான வீரியத்தில்...

உச்சி நுகர்ந்திடும்
அந்த எச்சில் ஈரம்
காய்ந்திட்டதாய் துளியும்
விட்டுவைக்கவில்லை நினைவுகள்..
.
உயிரணுக்கள் உயிர்த்தெழும்
அந்நொடிப்பொழுதிலும்
இதிகாசங்கள் நவில்ந்திட்டு
செருக்குடன் தள்ளி நிற்கிறான்
கவிதையெனும் மூன்றாமவன்!!


 - தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103137&format=html

Thursday, March 10, 2011

நிரம்பி வழியும் பின்னிரவு


இருண்டவெளி நர்த்தனம்
நிதம் அரங்கேற்றும்
பின்னிரவினை அடக்க
வழிகள் அறியாதாம்
முன்னிரவு...
.
கடலும் கரையும்
சிலாகிக்கும் அச்சில நொடிகள்
நமக்குள்ளேயும்
நடந்தேறும் மர்ம முடிச்சுகள்
சற்று யதார்த்தத்திற்கு
மீறியவைதான்!!
.
மூன்றாம்பிறை நாற்காலியில்
அமர்ந்து
ஒவ்வொரு மணித்துளியிலும்
இருளின் அரங்கேற்றவேளையினைத்
துழாவித் துழாவித்
தோற்றெழுகிறோம்...
வா! வா!
புரிந்து வகுப்போம்
ஓர் மெல்லிய ஊடகம்...
.
கடல் - கரை - நிலவு
நீ - நான் - இரவு...
மத்தியில் நம்மோடு
இழைந்துருளும் காதல்...

 - தேனு


நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13486:2011-03-10-10-09-56&catid=2:poems&Itemid=265

Tuesday, March 8, 2011

இரையும் பறவைகள்

 
 
இறக்கும் தருணத்திலோர் பறவை..
வெட்டுண்ட சிறகுகள் ஆங்காங்கே
குருதி கலந்த குப்பைகளுள்...
ஒவ்வொன்றாக கண்டெடுத்து
ஒட்டுவிக்க முயற்சிப்பதை
என்னவென்று குறித்து வைக்க?
.
மீளாது அதற்கான பாசத்துடன்
இணைப்பறவையின் அல்லாடல்கள்...
யுத்தம் தெளிக்கும் அந்நிமிடங்கள்...
நிச்சயமாக வசப்படமாட்டா
ஓரிரு வரிகளின்
உணர்த்தப்படலில்!!
.
அடை காத்த முட்டைகள்
நச்சுப்படிகங்களாக மாறியதற்கான
காரணிகள் யாதாகும்?
அலசப்பட நேரமில்லை..
இறக்கும் தருணத்தில் பறவை இரண்டு...

 - தேனு
 
நன்றி உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4072

Monday, March 7, 2011

ஒப்பனை அறை பதிவுகள்




வட்ட வரையியாம் வாழ்க்கை..
அது இழைத்திடும் ஒப்பனைகள்
துவக்கத்துடன் இறுதியுறும்
இடமென்றும் ஒன்றுதான்..
.
அசல்களின் துணைக்கால்களென
மாதிரியின் பயன்பாடு
யூகிக்கப்படும் நுனிவரையில்
எனும் கணிப்பு
அவளுக்கு மட்டும் புதிதா என்ன?
.
மறதிகளின் கிழட்டுக்கூட்டம்
பொய் வண்ணமிழைத்து
ஆட்டுவிக்கும் பொம்மையென
வழிகின்றன துளிகள் சில..
.
விழிநீர் விலக்கிட
தன்னிலை மறைத்து
மூன்றாம் கரமொன்று
நீண்டிட..
கலையப்படத் துவங்கியிருந்தன
அவள் மறைபட்டிருந்த
நிலையற்ற ஒப்பனைகள்..

- தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103067&format=html

Saturday, March 5, 2011

வெள்ளை நிறத்தொரு வண்ணத்துப்பூச்சி


உனக்காகவென சேகரிக்கப்பட்ட
வண்ணத்துநிலவுகள்...
அவை லயித்திருக்கும்
அந்தவொரு மாலைப்பொழுதில்
வெள்ளை ரோஜாவாய் நீ...

நிர்வாணமாகின
வண்ணங்களைத் துறந்திட்டு
நிலவுகள் யாவும்...
.
சகிப்பதற்கில்லையாம்..
உன் ஒவ்வொரு அங்கமும்
வெள்ளை நிர்வாணப்படுதல்..

அங்கங்கள் ஒவ்வொன்றும்
வண்ணங்களால் அலங்கரிக்கப்படுவதற்கான
சுகம்..
ரசித்தபடி சிறகடிப்பதில்
கொள்ளை பிரியம்
அவ்வெள்ளை நிலவுகளுக்கு...
.
அவைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
வெள்ளை நிர்வாணத்தின்
மொத்த அழகினிற்கும்
ரசிகன் நானென்பது..

 - தேனு

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13360&Itemid=139

Thursday, March 3, 2011

பின்னிரவு சாயங்கள்...



வெண்ணிறத் திரை
மெலிதாக ஊடுருவப்பட்டு
சாளர கட்டங்கள் வழி
இரவுக்கீற்றுகளிடும்
சலனமற்ற நர்த்தனம்..

.
நிதம் என் உறக்கங்கள்
என்னுடையதாக இருப்பதில்லை..
என்னைத் தழுவியும் இருக்கவில்லை..

.
பின்னிரவு மீதான
நிதர்சன சந்தேகங்கள்..
என்னை அயர்த்தி
என்னவளுக்கும் பின்னிரவுக்குமான
நடப்புகள் பற்றி..

.
தன்மான மயிர்
உந்தித் தள்ள
விழிகள் சிவந்தும்
தொடர்கிறது
என் யூகத்திற்கான கண்காணிப்பு..

.
இன்றும் நடந்தேறுகிறது
அவள் அதரங்களுடனான
அழகியதோர் பிணைப்பு..
நிம்மதி நாடிகள்
துளிர்த்திட..
அது பின்னிரவுடன் அல்ல!!


 - தேனு


நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13208:2011-02-24-08-55-01&catid=2:poems&Itemid=265

Tuesday, March 1, 2011

உரிமையின்மை தொடக்கம்


இருள்சூழ் வீடு
சுருண்டு கிடந்தன
அகமும் புறமும்!

அன்னையா?
வளர்க்கத் தெரியுமா?
வளர்த்தால் போதுமா?
வினாக்கள் வலுத்து
மருகி சீற்றம்..

வசையினது விசை
சற்று ஆழமாக...
கருகும் மலர்கள்
துடிப்பு தொடர்ந்தது!!

அன்று
பிடியாது கூட்டுடனே
பயணிக்க எத்தனித்தேன்
.
இன்றோ
அத்தொடர்பயணம்
தடங்களுடன் தயக்கம்..

சுரக்க மறுத்ததில்லை
அதரங்கள் துடிக்கின்றன
மெய்யுரைக்க,
சுரக்கவே இல்லை!!!

என்றுமன்றி இன்று
கால் சலங்கை
கனலாக உறுத்தியது

 - தேனு

நன்றி வார்ப்பு,
http://www.vaarppu.com/view/2392/

Monday, February 28, 2011

விதியெனும் கடிகைக்கருவி


பிறகென்றும் வாய்த்திடா நாளொன்றில்
நிறுத்தப்பட்டிருந்தன
கைக்கடிகை முட்கள்..
.
கடிகை வட்டங்களைப்
பெயர்த்தெடுத்து
அவ்வட்டங்களில் சதுக்கங்களை
இழைத்து வைத்து தேடுகிறேன்..
எனது சிற்சில மூலக்கூறுகள்
அடைத்திட யத்தனப்பட்டு..
.
வட்டங்களில் சதுக்கங்கள்
ஒவ்வொரு விதத்தில் கோண
அடைத்திட வகையின்றி
கலைத்து மீண்டும்
இழைக்கிறேன் முதலிலிருந்து..
.
விளிம்புகளை சற்று பின்னிறக்கி
பக்கவாட்டில் என்னைப் பார்த்து
கொக்கரிக்கின்றன
முட்கள் ஒன்றோடொன்று
பிணைந்திட்டு..

 - தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311022710&format=html

Tuesday, February 22, 2011

என்று தணியும்?


பாலின வேற்றுமைகள்
இறைவனது அரங்கேற்றம்...
வேற்றுமைக்கான வாழ்வியல் நியதிகள்???
ஓர் வர்க்கம் அதீதம்
இயற்றியிருக்கக் கூடும்..
.
எந்நேரமும் எவ்விடமும்
பாதுகாப்புக்கான கோபக்கோர்வைகள்
மென்மை மறைபட...
.
பற்றியெரியும் உடல் வேட்டங்கள்...
வகையென பேருந்து உரசல்கள்..
அறிமுகமற்ற எண்கள்..
நீண்டு மிரட்டும் அழைப்புகள்..
.
கிட்டும் வேளைகள்..
உடைகள் ஊடுருவப்படும்
உதிர்பூக்களின் தேகங்கள்..
பிய்த்து பிடுங்கும்
கொன்றுண்ணி கழுகுப்பார்வைகள்...
.
சுதந்திர மண்தான்..
கேலிக்காட்படுத்தப்படக் கூடிய
சுதந்திர மண்தான்..
.
என்று தணியும்
இத்தரமற்றுத் திரியும்
மாயக்கருமங்கள்??

 - தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102209&format=html

Wednesday, February 16, 2011

உருள்படும் பகடைக்காய்கள்



சன்னல் தென்படுகிறதா?
இருள்படிந்த அகம்
எண்ண அலைகளால்
ஊடுருவப்பட்டு
ஏதோ ஓர் புள்ளிக்கு அப்பால்
ஒதுக்கப்பட்டிருந்தது..

சிதறுண்ட கண்ணாடி
துண்டங்களின் சேர்க்கை
குறுக்கு மறுக்குமான பிரதிபிம்பம்
எது அசல் நான்?
எது நகல் நான்?
புரிபடா தெளிவுகள் வழி
ஓடிக் கொண்டிருந்த கலக்கங்கள்..

இலட்சிய பாதைகள்,
அவைகள் எட்டுத்திக்கிலும்
அதில் எது எனது(கள்) என்ற
தேடலின் தொடர்ச்சி...

வார்க்கப்பட்டு வளர்க்கப்படும் எனது(கள்)
மெய்யாகவே எனது(கள்)தானா?
அவசியங்கள் அனாவசியமாய்
தவிர்க்கப்பட்ட
ஆசன ஏற்றம் உசிதமன்று...
கூரியம் மழுங்க
புரட்டப் படுகின்றன
வாழ்க்கைச் சக்கரங்கள்!!!


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102138&format=html

Monday, February 14, 2011

காதல் பிணைப்பினிலே



நீர்ம திரையின் மறுபக்கம்
வெட்கம் மீதான சேர்க்கையுடன்
ஏறத்தாழ அவளது முழுமுகமும்..


வழிந்தோடும் விருப்புகள் வழி
இழையோடி நின்று
அவ்விமைகளிடும் தாளங்கள்..
என்னவென்று யூகிக்க
நேரமிட்டு வைப்பதன்றி
விரல்கள் ஒவ்வொன்றாய்
விடுபட..


இடறி சிதறுண்ட
விண்மீன்கள் சில
சட்டென அவள் முகத்தில்
ஒருசேர குடிகொண்டன
நாணத்துடன்..


என்னையும் மீறி
ஏதோ ஓர் புள்ளிக்குள்
காதலித்து நான் கிடக்க
முகமூடியைக் களைத்தெறிந்து
படர்ந்து கொண்டாள்..
சற்று மயக்க நிலையில்
இறுக பிணையப்பட்டு நான்..


சாரலென உள்ளூர சிலிர்க்க விட்டு
நகைத்தபடி நின்றிருந்தன,
அவளுக்கென்று நான்
மீதமாக்கி வைத்திருந்த
ரசனைகள்...


நன்றி காட்சி
http://kaattchi.blogspot.com/2011/02/blog-post_14.html#more

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12966%3A2011-02-13-11-32-15&catid=2%3Apoems&Itemid=265

"கீற்று" தளத்தில் தலைப்பு - அம்மாலைப் பொழுதினிலே.. I thought that it got rejected in Keetru, so sent it to Kaatchi.. but got published in both the sites..

Friday, February 11, 2011

என்னவள் அழைத்திருந்தாள்...



நள்ளிரவில் சிணுங்கியது
தலையணையின் கீழ் கைபேசி!!

என்னவள்தான் அழைப்பில்...
ஒரு வார்த்தை உதிர
கனிரசம் வழிய
'காதலிக்கிறேன்'
எவ்விடமும்
ஒவ்வொரு முறையும்!

'ஒரு கவிதை சொல்லேன்'
ஓர் செல்ல சிணுங்கல்
'நீ' என்கிறேன்!!!
'ச்சீ' மீண்டும் சிணுங்கல்!
இரவின் இருளோடு
நீண்ட உரை
கைபேசிகளுக்கே வெளிச்சம்!!!

முடித்த மறுநிமிடமே
அவளோடு கூடி
என்னை ஒதுக்கியிருந்தான்
நித்திரை சண்டாளன்!!!

கோபத்துடன்
தவிர்க்கப்பட்ட தலையணையும்!!
மீதமிருந்த உறக்கங்களும்!!

நன்றி கூடல்

http://www.koodal.com/poem/tamil/kavithai.asp?id=1467&c=1&title=valentine-s-day-special-my-dear-s-call&author=thenappan

Monday, February 7, 2011

இரவுக்காதல்



மெய்யோடு இழைந்துருளும்
அவ்விருளுக்கான நிசப்தத்துடன்
நடந்தேறும் காதல் களியாட்டம்...
.
கருங்கம்பளம் பரப்பி
வெண்ணிற மலர்கள் இருப்பில் கிடத்தி
முன்னிரவிற்கான தூது அனுப்பப்பட்டது
நிலவுக்காதலனுக்கு...

ஊடல் தேய்ந்து கூடலும்
கூடல் தேய்ந்து ஊடலும்
மாற்றங்கள் நிதர்சனம்...
.
கம்பளத்துக்குள் விழுங்கப்பட்டு
மாதம் இரு நாள்..
காதலனும் காதலியும்
எப்படி கூடுவர்?
இரகசியம் வெளிப்பட
பற்பல கவிதைகள் வழி
இன்றும் விடை தேடி நான்..

ஊடல்கள் ஊருக்கே
பிறைகளாக வெளிச்சப்பட்டு
முகம் திருப்பும் காதலனின்
பொய்க்கோபம் தீர
என்னென்ன தூதனுப்புகிறாள் காதலி?
ஆயுள் குறைந்த இவ்வூடலும்
கூடிப் பிணைந்திடும் இறுக்கம்தான் இங்கே..

எத்தனை காலம் கழியினும்
எத்தனை காதல் வருமினும்
இளமை மிளிரும் இரவுப்பெண்ணிற்கான
காதல் வனப்புகள்
என்றும் அழகுதான்...

நன்றி திண்ணை

Thursday, February 3, 2011

ஒரு கவிதை உருவாகிறாள்



எண்ணச் சிதறல்
தலைவிரி கோலத்தோடு
நிர்வாண வார்த்தைகள்
.
தொடுக்கப்பட்டு
வெட்கத்தால் இழுபடுகிறது
கோர்வை!!!

சிக்கல் கலைத்து
பின்னி எடுக்கையில்
அரங்கேற்றத்திற்கு ஆயத்தம்
எந்தன் கவிதை காதலி....
.
அதர ரேகைகள் தெறித்து
ஒரு வசீகரப் புன்னகை
விடுபட
நிசப்தத்துடன் விடுதலை....
இருட்டறையில் அடைபட்டிருந்த
கற்பனை கருக்கள்!!



நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311013013&format=html