உடைந்துருளும் சில்லுகள்
ஒவ்வொன்றும் அதனதன் சுவடுகளை
தனக்கான இருப்பிடத்தில்
நிலைக்கச் செய்து
உருகுகின்றன வெப்பச்சூட்டில்..
கானல் நீராய்
என்னுள் இழையும்
மர்ம நூலொன்றின் நுனியினைப்
பிடித்தவண்ணம் யாருமற்ற அச்சாலையைக்
கடந்து கொண்டிருக்கிறேன் நான்..
அந்த நாழிகையினில்
விழிகள் நிறைக்க
பாதங்களைப் பதம்பார்த்து
என்னுடன் பிணைகிறது
வேள்விகளின் தீயொன்று..
பிணைப்புகளைத் தாண்டி
என்னைத் தீண்டும்
கோட்பாடுகளின் நகைப்புகள்
சாலையின் நீளத்தையும் அகலத்தையும்
ஒன்றிரண்டு காததூரம் அதிகரிக்கின்றன..
காற்றோடு கலந்து
அக்கரையைத் தொடுகையில்
என் நிர்வாணத்தை மறைக்க
தேவையென கொய்யப்படுகின்றன
சில தீத்துகள்கள்..
- தேனு
நன்றி வல்லினம்,
http://www.vallinam.com.my/issue31/poem2.html
இயல்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete