Friday, May 25, 2012

மெலிதாய் வீழும் வெயிலின் பயணச்சிறகு..


வெம்மையின் நகர்வை
உள்வாங்கியபடி
வார்த்தைகளுடன் பயணிக்கிறேன்.

முகமற்ற இருள் வழியும்
மெல்லியதோர் கைகுலுக்கலில்
வெம்மையின் உதிர்கோடுகள்
வியூகம் புரிந்தனவாய் நீள்கின்றன..

சமத்துவ நிழல் குழைத்து
வண்ணமிடும் பிரிவுத் தோரணையின்
விரிவுடன்
ஒருவண்ண பட்டாம்பூச்சி வனத்தில்
மிகத் துல்லியமாய் மறைகிறாய்..

மௌனப்பூக்கள் வீழ்கின்ற சாலையில்
இருப்பின் வலிகளைச் சுமந்து
சொல்லின் இல்லாமுகவரி நோக்கி
ஊர்ந்து கொண்டிருக்கின்றன,
இணக்கம் களையப்பட்ட சுவடுகள்..

இருளை நோக்கி நகரும் வெம்மையின் பயணம்
ஒரு நத்தையின் நகர்வை
ஒத்திருக்கின்றது..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5300