Saturday, June 30, 2012

துவங்கும் உரையாடல்களின் மையப்புள்ளி



உரையாடல்களின் மறதியில்
இழுபடுகின்றன புள்ளிகளற்ற கோடுகள்...

கோடுகளின் அழுத்தமான விவாதத்தில்
வார்த்தைகளைக் கோர்க்க
முழுதாய் மனமின்றி
புன்னகைக்கிறது வரைமௌனம்...

மௌனத்தின் அர்த்தங்களையும்
வார்த்தைகளின் அனர்த்தங்களையும்
மொழிபெயர்க்க மறந்து
பாதியாய் சிக்கலில் நிற்பதில்லை
கோலக்கோடுகளின் நீளங்கள்..

இரைந்திடும் வண்ணப்பிழைகளை
உறைநிமிடங்களில் இழைக்கிறது,
விடியலின் நொடித்துளிகளால்
வெளியிடப்படும் ஒற்றை மன்னிப்பு..

அடுத்து, எழுத்து மழை பெய்யத் துவங்குகிறது
கோலத்திற்குள் நெளியும் புள்ளிகளாய்...

- தேனு 

நன்றி உயிரோசை

Monday, June 25, 2012

உயிர்ப்பின் மீள்சிறகுகள்

வானவில்லின் வனத்திலிருந்து
சிறு சிறு வண்ணத்துளிகளைப் பறித்து

சிற்பம் தொடுத்துக் கொண்டிந்தவளிடம்
மீள்வருகை சாத்தியமா என்றேன்...
நட்சத்திரங்கள் சிரித்திருக்கும்
வண்ணக்கசிவின் உருவமற்ற சிற்பங்களில்
கனா தழும்பும் முத்தங்களால்
உயிர்க்காற்றை உட்புகுத்தத் துவங்கி இருந்தாள்
யாழினி..


- தேனு
நன்றி உயிரோசை

துளிர் நிமிடங்களின் இலை


திரையிட்டு மூடிய சாளரக்கம்பிகளைத்
தழுவிச் செல்கிறது
காற்றோடு பாயும் மௌனம்..
சாளரத்து மலர்க்கொடியின் கைகளில்
சிக்கிக்கொண்டு தவிக்கும்
ஒற்றை இலைச்சருகை 
இலகுவாய் காப்பாற்றத்
தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றன 
தொலைகாட்சி மின்கம்பிகள்...

- தேனு

நன்றி உயிரோசை,

சுழல்களாலான ஒரு இரவுக்குவியல்

கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் உடலைத்
தழுவத்தகுந்த விஷப்பறவையொன்றை
இரவிற்காக மட்டும் வளர்த்து வருகிறேன்..
தூக்கம் களைந்தெழும் எந்தவொரு இரவிலும்
முன்னிரவில் நடந்தேறியவைகளை
நகங்களில் படிந்திருக்கும் கறையைக்
கொண்டு யூகிக்கிறது பறவை..
நிதம் ஒலிக்கும் கூக்குரலை
ரசிக்கவரும் வேடர்கள் 
அமுதம் கொண்டு என்னையும் பறவையையும் 
கொலை செய்ய முயல்கின்றனர்..
விஷத்தின் உருவம்கொண்டு
சுழல்வியூகம் படர்த்தி அமுதப்படுக்கையில்
மலர்ந்துவிடுதல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்..
தொடர்ந்து வந்த நாட்களில் என்னறைமுழுதும்
மரித்துப்போய் நிரம்பியிருக்கின்றன
அபிமன்யுக்களின் நிழல் பிம்பங்கள் மட்டும்..
 - தேனு

நன்றி உயிரோசை,

பட்டாம்பூச்சி சிறகுகள் நிறைந்த வனம்


**
உயிர் சிறகுகள் விரித்திருக்கும்
பட்டாம்பூச்சிகளை சேகரித்த
வெளிர்வண்ண குடுவையுடன்
தனிமையின் வனத்தில்
பயணிக்கிறாள் விழிகளற்றவள்..
கடக்கும் இலையற்ற மரம் ஒன்றிற்கு
ஒவ்வொரு பட்டாம்பூச்சியென
வெளியெடுத்து சின்னாபின்னமாக்கி
வனமெங்கும் பிய்த்தெறிகிறாள்..
*
வண்ணங்கள் தூவி தாழப் பறக்கும் பூவொன்று
அடர்வனத்தினூடே பயணிக்க
பிய்த்தெறியப்பட்ட ஒவ்வொரு அங்கமும்
புதுவண்ண பட்டாம்பூச்சியாக
சிறகுகள் விரிக்கின்றன...
வான்முழுதும் பட்டாம்பூச்சியாய் நிறைந்தபிறகு
இலையற்ற மரங்களில் தாவி தாவி
வனத்தைக் கடக்க துவங்குகிறார்கள்
கைகோர்த்தபடி பூவும் அவளும்...
**
 தேனு
நன்றி கீற்று,

Sunday, June 17, 2012

வீழ்ந்து மீளும் வார்த்தைகளின் வன்மக்கீற்றுகள்



சிரித்திருக்கும் என்னையும் என் பொறுமையையும்
முழுதாய் விழுங்க விழிகள் சிவந்து காத்திருக்கும்
வன்மத்தின் வீரிய வார்த்தைகளை
சுற்றமற்ற சுவர்களை நோக்கிச் சிதறடிக்கிறேன்..

சிதறிப் போகும் ஒவ்வொரு வார்த்தையும்
பயணிக்கும் தொலைவை மறந்து
வேகச்சிறகுகளைக் கொண்டு வெட்டி வீழ்த்துகின்றன
முன்நிற்கும் சுவர்களின் ஏதும் விளங்கா குறுநகைப்பை..

ஆசுவாசமாகியிருந்த தருணம்
என்னை நோக்கி விதியின் கூரிய வாட்களை ஏவிடத்
துவங்கியிருந்தன சுவர்களின் கீறல்களும்
வெளிறிப் போன வீக்கங்களும்...

உடலெங்கும் சிவக்கத் துவங்கிய
சில நொடிகளில் வெளியேறத் தவிக்கின்றன,
என்னுளிருந்து என்னை மீறிய
மேலும் ஓரிரு வார்த்தை துணுக்குகள்..

- தேனு


நன்றி உயிரோசை 

செரித்துப் போகும் சொற்களின் பயணம்




சொற்களை மட்டும்
செரித்துக் கொண்டிருக்கிறது மனம்..

நுகர்வுக்குழாய் வழி
பயணித்த நெருப்புச்சொற்கள்
மெதுவானதொரு உணர்வுப் பிழம்புகளை
வன்மைச் சாயம்பூசி உள்ளிறக்குகின்றன..

மனதின் இயல்பிற்கு எதிராய்
இயங்க துவங்கியிருந்த சொற்கள்
மெல்ல என் இதயத்தின் துவாரங்களைத்
துழாவித் துழாவிக் கண்டு கொள்கின்றன,
இதயச் சுவர்களின் மென்மையை உடைத்தபடி..

தனிமை அமிலத்துளிகளை
மெய்மறக்க உருவாக்கிச் சில சொற்களை மட்டும்
செரித்துக் கொண்டிருக்கிறது என் மனம்..
 
- தேனு

நன்றி உயிரோசை 

உயிர்க்கும் நான்குச்சுவர் உலகம்


**
காற்றில் ஊடுருவும் காலங்களை
நேற்று இன்று என மொழிப்பெயர்த்து
நகரும் இரவிடம்
முணுமுணுப்பாய் சில உயிர்ப்புகளைக்
கதைத்துக் கொண்டிருக்கிறாள் யாழினி..

*
வண்ணத்துப்பூச்சி சிறகின் அறையொன்றில்
மழையாதலின் சாத்தியங்களை
பொம்மைகளுக்குப் பூசிக் கொண்டிருக்கிறாள்,
நாளை பூக்கும் நட்சத்திரங்களுக்காய்
அவள் மட்டும்..
**

- தேனு

அப்பியிருக்கும் இருளின் நிறம்



உணர்வுகளின் வண்ணங்களை
ஓவியமாக்க முற்படும் பொழுதுகளில்
தாழ்வென்னும் நிறத்தைப் பெறுகிறாள்
நிறங்களுடன் பேசுபவள்...
தாழ்வின் நிறம் பற்றிய
புதிரொன்றின் விளிம்பில் சிக்கியவள்
நிறமற்ற கடலிடம் பதில் கேட்டு நிற்கிறாள்..
அவளை நனைத்துக் கொண்டிருந்த
ஒளிர்கடல்
தாழ்வு நிறங்களடர்ந்த கதைகள்
ஒவ்வொன்றாய் சொல்லத் துவங்குகிறது..
விழியும் செவியும் தழும்ப
கதைகள் சொல்லிக்கொண்டிருந்த கடல்
அவளை விழுங்கும்
புறக்கணிப்பின் ஒரு பெருங்கதையை
சொல்லி பின்னோக்கி நகர,
நுரை துப்பிய கரையில் மௌனித்திருக்கின்றன
வழிமறந்த பாதச்சுவடுகள் இரண்டு..

- தேனு 

நன்றி உயிரோசை 

சுயம் மறக்கும் மையத்தின் அடர் வியூகம்..



 
தனித்திருந்த பொய்யின் மையப்புள்ளியை
ஒரு சிதறலின் பூவிதழ் வனத்திலிருந்து
தொடங்குகிறேன்..
 
மையத்தின் கால்கள் மரத்து
மிரட்சி மிகும் சமயங்களில்
முடிவுறா பயணத்திற்கு
பாளப்படிம அடையாளங்களென
இடப்படுகின்றன காற்புள்ளிகள்..
 
தற்காலிக கார்புள்ளிகளால் இணைக்கப்பெற்ற
தோல்வியின் அடர்சாலையில்
இருபுறமும் மர்மப்புன்னகை துளைகளை
மெய்வண்ணப்பசை கொண்டு
நட்டு வைக்கிறேன்..
 
ஒன்றன் பின் ஒன்றாக ஓய்வற்று நீண்டுகொண்டிருக்கும்
மௌனத் துளைகளின் சக்கர வியூகத்தில்
மெல்ல தொலைந்திருக்கிறது வனம்..

- தேனு 

நன்றி உயிரோசை 

விடம் பரப்பும் உலகின் பிம்பம்

விடம் பரப்பும் உலகின் பிம்பம்
மழைத் துளிகளாலானதொரு குளத்தில்
இரு மீன்குஞ்சுகள்
இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன..
வெயில் தவறவிட்ட பொழுதுகளை
உண்ணுமவை
வண்ணமய ஊடகத்தின் வழி
வெயிலுலகுக்குப் பயணிக்கின்றன..
உயிர்வாயு விடமாய் மாறிவர
இறக்கும் தருவாயில் குளத்திற்குச் செல்ல
தவமிருந்து காலச்சிறகுகளை
பெற்றது ஒரு மீன்குஞ்சு..
இரவு மிருகம் விழித்திருக்க
அச்சிறகுகளை வெட்டி நட்சத்திரங்களின் வழி
குளத்தை நோக்கிப்
பயணிக்கிறது மீனாய் மாறத் துவங்கிய
மற்றுமோர் மீன்குஞ்சு..

- தேனு 

நன்றி உயிரோசை 

மரணத்துளிகள் சிந்தும் புறக்கணிப்பின் மௌன இரவு...

புறக்கணிக்கப்பட்ட வெள்ளை கொடிக்கயிறின் மேனியெங்கும்
உலர்ந்திருந்த சிகப்புச் சாயம்
ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகுதிர்ப்பை
வரைந்து வைத்திருக்கிறது...

யாருமற்ற மௌன இரவில்
கயிறின் இறுக்கம் மெலிதாய் வீரியப்பட
உயிரின் சிறகுகள் கொண்ட
ஒரு நரம்பு உதிரத்தில் நனைந்து
சிறகடிப்பதை காண்பதற்கில்லை..

தனித்திருந்த விலா எழும்பின் சலனத்துளி
இறுகப்படும் உயிரின் மையத்தில்
வெறும் காகிதங்களையும்
வார்த்தைகளையும் நிரப்பி
உதிரும் நரம்புகளின் உரையாடல்களுள் நுழைகிறது..

மௌனத்தின் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு இரவிலும்
மெலிதான ஓர் மரணவார்த்தை
அரவமின்றி வாசிக்கப்படுகின்றது....


- தேனு


நன்றி உயிரோசை

விளிம்புகள் தீட்டும் நவீனத்தின் காகிதங்கள்


காலங்கள் வழியே பயணிக்கும் மழையை
கண்டபடி சிரித்திருக்கிறான் ஆணொருவன்..
ஒவ்வொரு நாளும்
பருவத்தின் நாட்களை கண்டுவர
வெகு இயல்பாய்
மழையில் பயணிக்கிறான்...
சிறகுகளால் கதைக்கும் வனக்குருவி ஒன்றை
தோளில் சுமந்தபடி
இழந்துபோன குழந்தைத் தன்மைகளை
வண்ணத்துப்பூச்சிக் கணக்காய் ரசிக்கத் துவங்குகிறான்..
பருவம் ஒவ்வொன்றையும்
குறிப்பெடுத்து திருத்தி
தனது நேற்றான தன்னுடனே நண்பனாக
மீண்டும் வாழத் துவங்குகிறான்...
பின்னொரு நாளில்,
நிகழுலகில் தன்னுடல் மரித்ததை
மழை கதைத்தவுடன் அடர்வண்ணமாய்
நுழைகிறான்,
நவீன ஓவியமொன்றிற்குள் ..

- தேனு

நன்றி உயிரோசை,

மழை உரையாடல்களுக்குப் பிறகான சலனத்துளிகள்



*
மழை ஓய்ந்த இரவினில் ஒற்றை சலனம்
வெகு இயல்பாய் கீழிறங்கி விடுகிறது...

நேற்று பெய்யாமலும்
இன்று பெய்தும் போன உரையாடல்களுடன்
மெலிதாய் நீளுகின்றன
நாளை பெய்வதற்குண்டான சாத்தியங்கள்..

பயணிக்க மறந்ததான உணர்வுச் செதில்கள்
உராய்ந்து செல்லும் அடர்நிமிடத்தில்
மௌனமாய் படர்ந்த தளமென
உறைந்து விடுகின்றன எண்ணங்கள்...
தளர்வைக் குறிப்பிட்டெழுதும் பொழுதுகளில்
ஒற்றை நிலையில்லா நினைவுகளுக்கான
கீழ் நோக்கிய பயணம்
தாழ்வீர்ப்பு விசை தந்திரம் என்பதில்
இழுபட்டு நீர்க்கிறது சலனம்..

மழைக்கு பிறகான தளிரிலையின் விளிம்பு
வெகு இயல்பாய் ஒற்றை சலனத்தை
கீழிறக்கி விடுகிறது...

- தேனு,

நன்றி உயிரோசை,

இறுகப்பற்றிக் கொள்ளும் ஓர் இருப்பின் சிறை


**
மௌனவண்ணம் பூசப்பட்ட கண்ணாடிக் குடுவையில்
என்னை அடக்கி வைத்திருக்கும் சுயமற்றவள்
அடர்வனம் நோக்கி
நாட்கள் வழியாக பயணிக்கிறாள்..
  
சுற்றி நெளியும் காற்று முழுதும்
உதிரச் சிவப்பின் சுவாசமாக
மாறிக் கொண்டிருப்பதை கண்டு
நாட்காட்டியின் வேகத்தைக் கூட்டுகிறாள்..
  
மெலிதான ஓர் இறுக்கத்தின் வெம்மையை
உணர்ந்ததும் சட்டென்று குடுவையை
நீளும் பாதையிலேயே விட்டு
முன்பின் உணர்வின்றி ஓடியவளைக்
கண்டேன் என நகர்கிறது இருள்..
   
விடுதலைக் கனாக்களென்னும்
நிறமற்ற நீர்க்குமிழ்களால் நிறைந்து வழிகிறது
கண்ணாடிக் குடுவை..
*

 - தேனு

நன்றி உயிறோசை,