Monday, November 28, 2011

எல்லையிழந்த வார்த்தைப் பறவைகள்


வாலறுந்த வார்த்தைகள் உயர
பறந்து கொண்டிருக்கின்றன..

காற்றோடு உறவாடும்
ஒற்றைவழிப் பாதையின் வழிபோக்கப்
பார்வையாளன் என்னை
ஈர்க்கும் அவற்றின் வீரிய விசையை
அவ்வளவாகச் சொல்ல முடிவதில்லை..

தன்னிச்சையாக உடைபடும் நீர்க்குமிழ்களின்
கருமையானதோர் சாரலில்
என் காகிதக் கற்பனைகள் எரிய ஆரம்பிக்க
விடத்தின் ஓரிரண்டு துளி மை..

எல்லையற்றத் தனிமை இடறி
பாதங்கள் நின்று விட
வாலறுந்த வார்த்தைகள் இன்னும்
உயர பறந்து கொண்டிருக்கின்றன..

- தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4996

Monday, November 21, 2011

வரையப்படும் அகால மௌனம்


அடுக்கு மாடி குடியிருப்பின்
பளிங்குக் கற்கள் தோறும்
செதில் செதிலாக
வரையப்பட்டு நீர்க்கிறது
கண்ணீர்த்துளிகளின்
ஒப்புதல் மௌனம்..
கரைந்திடும்
மின்வளையங்களுடன்
மௌனமாய் கடத்தப்படும்
மின்மினிகளைக் கண்டு
உரக்கச் சிரிக்கின்றன
பளிங்குச்சுவரின் வண்ணத்துப்பூச்சிகள்..
- தேனு
 
நன்றி கீற்று,

Tuesday, November 15, 2011

நரகத்தின் உத்தமம்



இரவின் விளிம்பினில்
தொடர்ந்து வரும்
வாலறுந்த கனவுகள் மூன்று
என்னை மீறி
வெவ்வேறு திசை நோக்கி நகர்கின்றன..

முதல் திசையில்
வெண்ணிறத்தில்
ஒற்றை மலருடன் பெண்ணொருத்தியும்,
இரண்டாம் திசையில்
பழுப்பு நிற கண்களுடன்
கூன் விழுந்த மிருகமொன்றும்,
மூன்றாம் திசையில்
உடல் முழுதும் வரிகளுடன்
சர்ப்பமொன்றும்
விரைகின்றன..
நான்காம் திசையின்
கரு நிற பெருவெளியில்
வியர்த்தெழுந்து
விழிக்கிறேன்..
என்னை நோக்கி நகர்கிறது
மரண வாயில்...

 - தேனு

நன்றி வல்லினம்
http://www.vallinam.com.my/issue34/poem8.html