Tuesday, June 28, 2011

பிரதிபிம்ப பயணங்கள்



விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் 
என்னை விலக்கி 
அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. 
. 
அவன் யார்? 
என்னைக் காணும் வேளைகளில்
பிறக்கும் குறுநகைப்பிற்கான
தகிக்கும் அர்த்தங்கள் யாது?
எனக்கும் அவனுக்குமான
இடைவெளியின் அலைவரிசை ஒப்பந்தங்கள்
உண்மையில் உரைப்பது என்ன? 
அவன் என்னைத் தீண்டுகையில் 
பிரதிகள் இடம்மாற்றப்படுவதை 
இதழ்களும் செவிகளும் 
உணர மறுப்பதேன்? 
. 
இவ்வாறான எனக்காய் உதிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 
அவனிடம் இருப்பில் இருப்பது 
வெளிப்படையான மௌனம் மட்டுமே..

அவன் மௌனத்தின் உச்சரிப்பினில் 
சகலமும் லயித்திருக்க… 
அவனுக்கான சிறகுகள் எனக்கும் 
எனக்கான எண்ணங்கள் அவனுக்கும் 
இடம் மாறியிருந்ததன…

தற்சமயம் மௌன சிறகுகளுடன் 
பயணித்துக் கொண்டிருக்கிறேன் நான், 
எனக்கு 
கருமையாகத் தெரிகிறதில்லை 
சிறகுகளின் நிறம்…
  
– தேனு 

நன்றி திண்ணை,
http://puthu.thinnai.com/?p=384

No comments:

Post a Comment