Monday, February 27, 2012

வார்த்தைகளின் கோர்வை விட்டுச் செல்லும் இணக்கம்






தனிமை நீளும் எனக்கான உலகில்
வார்த்தைகளின் இருப்பைக் கொண்டு என் பக்கம் வந்தமர்கிறாய்..
மௌனம் நிரம்பி வழியும் அறையின்
ஓர் மூலையில்
மெலிதான சலனத்துடன் பயணிக்கிறது
காற்றில் நிரம்பும் சொற்களின் எழுத்துப் படிமம்..

சாளரக் கம்பிகளின் நீளத்தில்
எழுதப்படவிருக்கும் வாக்கியச்சாரல்கள்
காத்திருப்பு வண்ணங்களைத் தீட்டி
உறவின் இணக்கம் பற்றிய குறிப்புகளை
சுவர்முழுதும் வரைகின்றன..

மெலிதாய் உரசிச் சென்ற தென்றல்
நெடுநாட்களுக்குப் பிறகான பார்வைகளை
உணர்வின் மைகொண்டு கண்களில்
நீர்கோர்த்துக் கொள்கிறது..

தனிமையின் உலகில்
இருப்பின் வர்ணனையை அணிந்திருக்கும்
வார்த்தைகளைக் கொண்டு என் பக்கம் வந்தமர்கிறாய்..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5271

நீரில் விரியும் கோலத்தின் கிளைபிம்பம்

 



ஒற்றைத் துளையிட்ட புள்ளியை நோக்கி
பாதையை விழுங்கியபடி
நீள்கிறது பளிங்குக் கற்களில்
வழுக்கி நீந்தும் வெள்ளைநீர்..
 
இருபுறமும் கரையிட்டுக் கிளையிட்ட
யாழினியை வெறித்தபடி
புள்ளியை நோக்கி வளர்கிறது
விருட்சமாய் நீர்க்கோலம்..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5260

Monday, February 20, 2012

காகிதங்களில் சொற்பமாய் குறிக்கப்பட்ட பிரிவு


*
யாருமற்று தனிமையில் காற்று
பெருமழையென பொழிந்து கொண்டிருந்தது..

நுண்ணிய இசை நிறைந்த அறையில்
பருகிய நெடி மீதமான
நான்கைந்து தேநீர்க் கோப்பைகள்
மேசை மீது கிடத்தப்பட்டிருந்தன..

ஒரு உறவின் இணக்கம் பதிவுற்ற
காகிதங்களில்
பதிந்திருந்த எழுத்துக்களை அழித்து
பிணைப்பெனும் நிறமற்ற நீர்
வெறுமையாய் வழிந்து கொண்டிருந்தது..

தனிமையின் விளிம்பில் கிடக்கும்
வெற்றுக்காகிதங்களைக் கிழித்தெறியும்
காற்றைப் பெருமழையென
பொழிந்து கொண்டிருந்தது மின்விசிறி...
*

- தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18344&Itemid=139

Monday, February 13, 2012

மௌனமாய் கடத்தப்படும் ரகசியத்தின் கால்கள்



*
வெயில் நீளும் முற்பகல் ஒன்றில்
யாரிடமும் சொல்ல வேண்டாமென ஒரு
நிகழ்வை என்னுள் பதிகிறாய்..
 
ஒரு வெளியேற்றத்திற்கான கையொப்பம்
இடப்பட்ட தாள்களின் எழுத்துக்கள்
மகிழ்வானதென்று மதுவின் போதையேற்றி நீ செல்ல
பிடரிமயிர் துள்ளலுடன் கூடிய நடையை
வியந்த வண்ணம் நிற்கிறேன்..

அடர்ந்த தனிமையின் சுவர்களில்
நீ விடுத்துச் சென்ற ஒற்றை வரி
வெளியேற்ற செய்தியை
அனுமதிக்கவோ நிராகரிக்கவோ
யாரும் முன்வரவில்லை..

இருப்பை உணர்த்த அமர்கின்ற இருக்கையிடம்
விடைபெறுதல் குறித்து
உரக்க நீ சொல்ல உருண்டோடுகிறது
சக்கரம் பொருத்தப்பட்ட இருக்கை..

யாரிடமும் சொல்லாத ரகசியமென
மௌனமாய் நடந்தேறிய
அந்நிகழ்வை என்னுள் பதிகிறாய்..
*

 - தேனு

நன்றி உயிரோசை,

Friday, February 10, 2012

காற்றோடு கலக்க மறுக்கும் புகைமணம்


காற்றில் பிசுபிசுக்கும்
பாசத்தின் கலவையை
முகம்முழுதும் அப்பியவாறு
புகைந்துகொண்டிருந்தவற்றை
விழிகளுக்கு நேராய் காணமுடிவதில்லை...
 
மெய்வண்ண முகங்களை
வருத்தத்தின் திரைகொண்டு மறைத்தோர்
அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளை நோக்கி
புகையை உடல் முழுதும்
பூசிச் செல்கின்றனர்...
 
பெய்யாமல் போன மழைக்கென
புகையை மட்டுமாவது
விட்டு வைக்கும் விருப்பத்தில்
மெல்ல சிரித்துக் கொண்டிருந்தேன் நான்,
சிரிப்பின் நிறமற்ற எதிரொலியில்
எரிந்து கொண்டிருந்தது என்னுடல்..

 - தேனு

நன்றி உயிரோசை,

Wednesday, February 8, 2012

இருள்சிறகுகளுடன் நடனமாடும் அதிர்வலைகள்..


இரவைக் குழைத்து நிறைக்கும்
மொட்டை மாடியின்
ஒரு முனைக்கும் மறு முனைக்குமான இடைவெளியில்
நிழலாடிக் கொண்டிருக்கிறது
ஒரு உருவம்..

மனச்சாளரங்கள் தாழிட்டிருக்கும் பட்சத்தில்
அவனோ அவளோ நிகழ்த்திக்கொண்டிருக்கும்
மௌனப் பரிமாற்றம்
ஆறாம்விரல் கைபேசிக்கு மட்டுமென
மிச்சப்படுகின்றது வெளிச்சம்..

இருளின் கிளையில் அமர்ந்து
வார்த்தைகள் தேடுமெனக்கு
படர்ந்திருக்கும் இருளில்
நிலவு மட்டுமன்றி அதிர்வலைகளும்
பொழிந்து கொண்டுதானிருக்கின்றன..
   - தேனு
 
நன்றி உயிரோசை,

Thursday, February 2, 2012

வண்ணமிசைக்கும் விழிச்சிறகுகள்



*
மழை வண்ணங்களை இழைத்து
தன்னுடல் முழுக்கத் தீட்டிக் கொள்ளும்
இரு மீன்குஞ்சுகள்
மௌனமாக நீந்திக் கொண்டிருக்கின்றன,
நீர்த்தழும்பும் கானல் ஒலியில்
இரவுநதி உறங்குவதாய் சொல்வதை
நம்புவதற்கில்லை...
**
வாவென்று என்னையும் உடனிழுக்க
இரவுநதி முழுதும்
நாங்கள் நாங்களாகவே
இழைந்து நிறைந்திருக்கிறோம்...

நீந்தும் மீன்குஞ்சுகளை அள்ளி
தன்னுள் படரவிட்டு
சூரியக் கூண்டின் தேடலிற்காக
கனவுச்சிறகுகளை விரல்பிடித்து
அழைத்துச் செல்கிறாள் யாழினி..
*

 - தேனு

 நன்றி உயிரோசை,