Wednesday, August 31, 2011

நான் எனும் முடிவு


ரத்த மணம், எச்சில் வீரியம்
பின்னிப் பிணைந்து
கிளர்ந்தெழுப்ப
மரணத்தைச் செலுத்தியபடி
கணக்கிடுகிறேன்
மிச்சமான உயிர்களின்
நாடிகள் அனைத்தையும்..

மயான விதிகள்
காக்கப்படும் ஓரிடத்தில்
என்னுள் தெறித்து விழும்
புன்னகையை
எப்படி முயன்றும்
மறைக்க முடியவில்லை..

கண்ணாடி சில்லுகளுக்குள்
உறைந்திருந்த செந்நீரை
அகால தாகம் தீர
தின்றுத் தீர்த்தும்
அடுத்து நிகழ்வதற்கு இழைகிறது
சலனமற்று விரியும்
மரணப் புன்னகை..
.
கவனம்...
பாதையில் நிசப்தத்துடன்
மிச்சப்பட்ட உயிர்களின் ஓலம்..

 - தேனு

நன்றி அதீதம்

Sunday, August 28, 2011

ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்


மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக
அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில்
ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது
வெயில் நுகருமொரு
சொற்ப மரநிழல்..

நிழல் துப்பிய குளிருணர்வில்
புத்தகங்கள் ஒன்றொன்றும்
காந்தப்பிணைப்புடன் இறுக்கமடைய,
கிழிசல்கள் வழி
எழுத்துக்கள் சில
வெப்பமொழியில் ஏதேதோ
பிதற்றத் துவங்கின..

என் விரல் நீவிய புத்தகமொன்று
தான் தானாகவும்
தானே மீதமாகவும் இருக்க,
அட்டைப்படத்தில் நிறைந்திருந்தனர்
சிறுமிகள் சிலர்…
அழுக்குச் சீருடையுடனும்
நாணயச் சிரிப்புடனும்..

– தேனு

நன்றி திண்ணை,
http://puthu.thinnai.com/?p=2064