Monday, January 31, 2011

புளித்துப் போகிறது நாற்றம்




சவக்கிடங்கில் மெல்லியதோர்
புகைச்சல்
எட்டிப் பார்க்க ஏனோ
துருதுருக்கும் நெஞ்சம்
யாதாய் இருக்கும்
புது உருப்படி?

தூண்டிலிட கிட்டியது
விடை..
ஒன்றல்ல இரண்டாம்!!!

வெந்த புண்
கருகிய உடல்
தலைவனுக்காக தீக்குளிப்பு
தொண்டனது ஒன்று!!!

தோல்வி கண்ட காதல்
வெற்றி கண்ட மரணம்
உண்மைக்காதலனது ஒன்று!!!

அருமை அறியா
கிறுக்கர்கள்!!

துளியும் நெருடலில்லை
நாசிதனில்,
ஆமாம்!!
ஆணித்தரமான செதுக்கல்
சவமணமும் மனப்பழக்கம்!!!

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311013028&format=html

Saturday, January 29, 2011

நிதர்சனம்




இரவைக் கிழித்து
எழுகையிலே
கிழிபடத் தொடங்கிற்று
நாளேடு!!!

இன்றென்ன புதியது?
வேறென்ன புகுவது?
வகை வகையாய் எண்ணம்
அசை போட்டபடி நெஞ்சம்!

ஆள் பாதி
ஆடையும் பாதியாய்
பார்த்துச் சிரித்தது,
பிரதிபிம்பம்!!

ஆயிரம் ஆயிரம்
கனாக்களும் ஏக்கங்களும்
தோள் பற்றி
நாள் முழுதும்!!

எந்திரமாய் ஓடித்திரும்புகையில்
இருள் சூழ்ந்திருந்தது!!
கதை, கவிதை, புத்தகம்
மூவிரண்டு அலசல்கள்
எதிலும் வாய்த்திடாது
அயர்ந்துறங்கிப் போயின
விழிகள் அன்றும்!!

மீண்டெழுந்தால்
நாளையும் கிழிபடும்
நாளேடில் ஓர் தாள்!!!
...

நன்றி கூடல்

Sunday, January 23, 2011

நெருஞ்சி முள் தைக்கிறது


இருள் கிழிபடுமா?

குளிர் நிலவோடு
தொடர்கிறது அவள் பயணம்!
நெருடல் மனதினுள்!!
.
அழகுற்றதா? அழகற்றதா?
அவன்களுக்கு அவளிட்ட
காந்தக் கூற்று!
அவனது கட்டாயத்தின் கீழ்!
.
வேறுபாடு வேறுளதோ?
கருத்து யுத்தமா?
துளியும் இடமில்லை இங்கே!!!
.
அழகாக நடந்தேறியது
அனிச்சையாய் கலப்படம்
எதனோடு எது?

கூடல் பின் கூடலாக
குற்றத்தின் அடிகோல்!
எங்கோ ஒரு குட்டைக்குள்
குழப்பம் தேடி!!!

அந்தோ பரிதாபம்!!
சற்றும் அரவமின்றி
நகைத்துக் கொண்டிருந்தது
அவளது நிழல்!!!

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31101172&format=html

உயிர் கழி(த்)தல்



இருட்சி சூழ
மலர்கள் வாடி இருந்ததன!
சுவாசிக்க ஆட்சேபிப்பு
காற்று நச்சுப் பட்டிருந்தது!!

உச்சகட்டத்தில் ஒரு ஓலம்
எங்கேயோ ஒரு மூலையில்!!
இடையே வகையாய்
பற்பல விசும்பல்கள்!!

அன்று சிநேகங்கூடல்
உணர்த்தி இருக்கவேண்டும்!!
இப்படியொன்று நிகழுமென!!!

இன்றோ
உருகம் மா(ற்)றி விட்டிருந்தது
மரணிப்பு கருக்கூட்டிலேயே!!!
உறுத்துமா இனியாவது?

தென்றல் புயலாக
வீசக் காத்திருப்பு!
ஊடே நிலவியிருந்தது
ஒரு நிசப்தம்!!!

நன்றி கீற்று

Thursday, January 13, 2011

வில்லாளிகள்



கணைகள் ஏராளம்
துளைகள் மனமெங்கும்
.
நொடிப்பொழுதில்
வன்மையும் மென்மையும்
கலந்து தொடுக்க கூடுமோ!!
.
நிச்சயமாகக் கூடும்
நிரூபிக்க அடுக்கடுக்காய்
தொடுத்துக் கொண்டே!!
.
துடிதுடிக்கிறதடி,
தயவு செய்து அடக்கி வை
உனது கூரிய விழிகளை!!!

Tuesday, January 11, 2011

அர்ப்பணிப்பு

அவளுக்குப் பெறவு
மூத்தாள் பெத்ததே
மூணு இருக்கே!
கொஞ்சமாச்சு நெனைக்கிறாளா?
கரிச்சுக் கொட்டினா சித்தி!
.
எங்க போய் முட்டிக்க?
தலையாட்டியாவே மாறிட்ட
தகப்பன்!

அக்காவுக்கு என்னன்னு
புரியாம முழிக்குதுக,
கூடப் பொறந்ததுக!

நாதியத்து போய்ட்டா
வக்கத்தபய மவ!
தாயா ஆனா
தங்கமா வளத்தா
.
வழி இல்லாம ஒத்துக்கிட்டா
தங்கசிகளுக்காக!
வாக்கப்பட்டா
கெழத்துக்கு ரெண்டாந்தாரமா!!!


நன்றி வார்ப்பு
http://www.vaarppu.com/padam_varikal.php?id=64

அன்புடன் சிநேகிதிக்கு




சந்தித்தோம்
என்று? எங்கு? எப்படி?
சரிவர நினைவிலில்லை எனக்கு!!!
 .
ஓரிரு வார்த்தைகள்
நாட்கள் நகர
மணிகணக்கு உரையாடல்களாயின
 .
தடம்தேடி நிற்கையிலே
தோள் தந்தாய் நீ
இளைப்பாறினேன் நான்
கைகோர்த்து பயணித்தோம்!!!
 .
காதலியா?
பலரது அர்த்தமற்ற வினாக்களுக்கு
விடையுரைக்க
பேசாதிருந்த சில வருடம்
அனல்கக்கிய போர்க்காலம்!!!
என்றும் நெஞ்சமதில் வடுவாய்!!!!
 .
என் கவிதைகளைப் பற்றி
எவரிடமும் சிலாகிக்க
சற்று தயக்கம் எனக்கு,
 .
உன்னிடம் மட்டும் சிலாகிப்பதேன்?
யோசிக்க வைக்கும் கேள்விதான்!
இன்றும் விடை தேடி நான்..
 .
எனக்கு வாய்ப்பவள்
எப்படி எடுத்துக் கொள்வாள்?
.
உனக்கு வாய்ப்பவன்
உணர்ந்து அனுமதிப்பானா?
.
இரு கேள்விகளுடன்
தொடர்கிறது வார்த்தைகளுடனான
நமது மௌனப் போராட்டம்!
.
வாய்ப்பவர்கள் எப்படி இருப்பினும்
தொடரவே விழைகிறது
நெடுந்தூர நட்பு பயணம்
ஆழமான நினைவுகளுடன்!!!!
நன்றி இளமைவிகடன்
http://new.vikatan.com/article.php?aid=2572&sid=78&mid=10

Saturday, January 8, 2011

தரையிறங்கிய நிலவு


அகிலமே இருண்டிருந்த
அந்திமாலை வேளையது
விட்டத்தைக் கண்டவாறே
விழுந்திருந்தேன் கட்டிலிலே
ஒளிவிளக்கு கைகளில்
ஏந்திவந்த பெண்ணழகு
உடன்வியந்து எழுந்தேனே
இளமஞ்சள் ஒளியினாலே
அழகுபொன் முகமது
அந்திநேர ஆதவனோ!!
தீண்டிடவே முற்பட
தலைகவிழ்ந்தொரு குறுநகை
வெண்ணிற ஆடையில்
வெட்கித்தான் சிவந்தாளோ
உரையாதோ!! நீளாதோ!!
உணர்த்திட்ட மின்னணைப்பு...

இருள்சூழ் அழகு

அந்தி வேளை அண்டமெலாம் அமைதி
எங்கோ இரு குட்டை வால் குருவி
எங்கே என்துணையென இரைய
அங்கொரு அருவி வீழ்ந்தெழும்
அடங்கா ஓசை
இங்கே கருங்குழல் விரித்து
செந்தூரம் நெற்றியிலே
மூன்றாம் பிறையாய் அழிந்து
மல்லிகை மணமோ எங்கெங்கும் பரவி
என்னவள் என் மார்பில்
முகம் புதைத்து உறங்கும் இவ்வேளை
நீளச் சொல்லி வேண்டுது
நித்தம் வேண்டுமென்று ஏங்குது
உணர்ந்தெழுந்த பேராசை மனமெனது!!!

கைம்பெண்

உடலெங்கும் மோகத்தீ
உச்சிவரை சூடேற்ற
பாழாய் போன உயிர்
சுகந்தேடி அலைகிறது
.
மனமெல்லாம் ரணமாய்
கொல்லைக்கு விரைந்தேன்
கிணற்றடியில் கிடக்கும்
இருகுடம் தண்ணீர்
முழுதாய் முடியாவிடினும்
சற்றாவது தணிக்கட்டும்
.
உற்றவனை இழந்ததால்
உணர்வற்ற ஜடமாகவே
மாறிடச் சொல்லிச்
சாடுகிறது சுற்றம்

சுகமான நினைவலைகள்

மழை சாரலினூடே
மிதமான சூட்டோடு
தேனீர் பருகி
தோழரோடு அடித்ததோர் அரட்டை!!!

பள்ளி பேருந்தினில்
தள்ளி நின்றாலும்
பார்க்கும் போதெல்லாம்
விழிகளில் குறும்புடனே அவளுதிர்த்த குறுநகை!!!!

நீண்ட தொடர்பாதையில்
நண்பன் தோள்பற்றி
காதல் கதைகளின்
கிசுகிசுக்களை அலசியொரு ஆராய்ச்சி!!!

தென்றல் தீண்டுமோர்
தெளிந்த மாலைபொழுதினில்
நெருங்கி வந்து
நேரம் கேட்ட அப்பெண்ணின் அழகு!!!

நான்காமாண்டு கல்லூரியிலே
நல்லதோர் வேலைகிட்ட
நம்பா வண்ணம்
நண்பர்களைத் தழுவிக் கொண்ட ஆட்டம்!!!

மென்பொருள் பொறியாளனுக்கு
பழையதுகளை அசைபோடுவதுதான்
எத்தனை சுகம்!!!

கவிதையுரை

பிரசுரிக்கப்பட்ட
காதல் கவிதைகள்
.
நேற்று முதல் எட்டு திக்கிலுமிருந்து
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
.
காதல் தோல்வியா? காதலிக்கிறாயா?
காதல் செய்ய ஆயத்தமா?
.
எடுத்துரைக்க வகையான
பதில் இருப்பில் இல்லை!!
.
கவிதையாய் உதிர்த்தால்
சற்று மனமாவது இளைக்குமே,
எடுத்தேன்
என்னையும் தாண்டி
என் மனதை வருடும்
மையிட்ட தூரிகையை!!!
.
கற்பனை களம்
எங்கோ நீண்டது
ஆமாம்!! நூற்றுக்கு நூறு மெய்!!!
காதல் வயப்படவில்லை
சற்று கவிதைவயப்பட்டு விட்டேன்!!!!


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311011720&format=html

ஈனஸ்வரம்

கடக்கும் பாதையில்
நித்தம் ஒரு நெருடல்...

பக்கத்து இருக்கையில்
நடுத்தரவயது பெண்மணி
.
ஈரமான விழிகளுடன்!!

பேருந்து நிறுத்தத்தில்
ஒவ்வொருவராய் கைபிடித்து உலுக்கும்
.
காசுக்காக பச்சிளம்பிஞ்சு!

குரைத்துக் கொண்டே பின்வந்து
வாரியெடுக்கவா கோரிக்கை?
.
தெருவோர நாய்க்குட்டி!

சொகுசான மாடி வீட்டினுள்ளும்
எட்டி பார்க்கத்தான் செய்கிறது!!
.
மெல்லியதொரு விசும்பல்!

வீசி எறியப்பட்ட
மல்லிகை மலர்கள் அனைத்தும்
காய்ந்து உலர்ந்தவை தானா??


நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12291:2011-01-08-07-15-49&catid=2:poems&Itemid=265

Friday, January 7, 2011

போதுமடா சாமி


தாரிலே வெந்த கால்களையும் மீறி
தவிக்கும் சிசுவின் பசி
மனதினில்
.
ஒரு கவளம் களியாவது
உண்டெழுந்தால் போதுமே,
பால் வார்த்து பசி தீர்ப்பேனே!!
.
கார்மேகம் கூட ஒரு மணித்துளி யோசிக்கும்
கரைந்தோடும் எண்ணமிருந்தால்!

நிழலில் கூட ஒதுங்க இயலா
நெஞ்சை உருக்கும் இவ்வாழ்க்கை
போதுமடா சாமி!!!

நன்றி வார்ப்பு
http://www.vaarppu.com/padam_varikal.php?id=53