Monday, January 23, 2012

பெருநகர இரவின் ஓர் காகிதம்



வெறித்து நிற்கும் சாலையின்
இருபுறமும் சோடியம் விளக்குகள்
உதிர்க்கும் இளமஞ்சள் மழை....
அவை நனைக்கும்
மின்கம்பிகளின் இடையில் ஊர்ந்தேறுகின்றது
சொற்பமாய் தொக்கி நிற்கும்
கருநிற இருள்வலை..

எழுத்து சாளரங்கள் வழியே
சாலையின் தனிமையை
அலசியுதிர்த்து உட்கொள்ள இயலாமல்
உயிர்ப்பையும் இறப்பையும்
பின்னியெடுக்க ஆரம்பித்திருந்தன
கனவுகளில் அயன்றிருந்த விழிகளும் செவிகளும்..

இப்பெருநகர மௌனத்தைக்
கலைக்க மெலிந்துணரப்படும்
ஆலையின் இரைச்சல் மொழியோடு
இறப்பினை மீறிய அணுக்களின்
மௌனக்காகிதத்தில் நிறைவுற்றிருந்தது
துயிலா இரவென்று ஒன்று..

 - தேனு

நன்றி உயிரோசை,

Thursday, January 12, 2012

குறிப்பற்ற காகிதங்களின் மௌனம்




நகரத்தின் நறுமணத்தை உருக்கிப்
புதிராய் விழித்திருக்கும்
மூன்று உயிர்ப்புகளின் நகர்வை
உரசிச் செல்கிறது ஒற்றை நிற நள்ளிரவு..

இரவுத்துரு படியாதிருக்க
விண்மீன்திரை இடப்பட்டிருக்கும்
ஓர் இருளடைந்த அறையின் கூர்ம மூலையில்
நடந்தேறிக் கொண்டிருக்கின்றது ஓர் களவு..

சாளரங்களினூடே மெலிதாய் இறங்கும்
தனிமைக்கரங்களில் தவழும்
என் ஆழ்மனதின் வார்த்தைத்தவம்
கலைக்கப்படுவதாய் இல்லை...

இன்னும் விழித்திருக்கிறோம்
நான், காகித மௌனம் மற்றும்
வார்த்தைக்களவின் ஓர் கைப்பிடி கருஞ்சாயம்...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5078

Tuesday, January 3, 2012

மௌனக் கழுகு வட்டமிடும் வார்த்தைகள்

 



வார்த்தைகளுக்குச் பாதகமான
மௌனக்கழுகுகள்
உயர வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன..

பிரியங்களால் தம்மைப்
போர்த்திக்கொள்ளும் செயலிகளின்
எதிர்வார்த்தைகள் யாவும் நீர்த்துளிகளாலான
செந்நிற குடுவையில்
சேகரித்து வைக்கப்படுகின்றன..

மௌனம் வீறுகொண்டு அலறுவதை
பொறுத்தாளத் தெரியாத மிருகங்கள்
உப்புக் கரிக்கும் அவ்வொவ்வொரு வார்த்தையையும்
நக்கிய பின் அடுத்தடுத்து
காதுகளைப் பொத்தி நிற்கின்றன...

மௌனக்கழுகுகள்
உடைந்துருளும் தருவாயில் நிற்கும்
குடுவைக்கொன்றாக
உயர வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5037