Wednesday, May 22, 2013

வனப்பூவிதழ் சுவையின் திடம்


Photo Courtesy: Madhu


அப்பிக்கொள்ளும் இருளில்
சுற்றிப் பறக்கும் மின்மினியின் பாதையை
உள்வாங்கியபடி நிற்கிறாள் யாழினி..
வட்டங்களாகவும் நீள்கோடுகளாகவும்
ஓர் உரையாடலை மின்மினி வரைய
படித்துத் தொடரத் துவங்குகிறாள்..
நெடுந்தூர வனத்தின் மையத்தில்
ஒரு செண்பகப்பூ விரிகிறது.
பூவின் இதழில் மெல்ல தேன்சிட்டுகள்
ஒவ்வொன்றாய் பிறக்கத் துவங்குகின்றன.
நீண்டிருக்கும் சிட்டுகளின் அலகுகள்
நிறம் மாறிக் கொண்டே இருக்கின்றன.
கருநீலம், செம்பவளம்,
இளம்பச்சை, வெளிர்சாம்பல்
என இறுதியில் பூவின் நிறத்தையே  தாமும்
அடைகின்றன.
தேன்சிட்டு ராணி மெல்ல சென்பகப்பூவிற்குள்
பூநிற அலகைக் கொண்டு நுழைகிறாள்,
தித்திப்பு குறைவதாய் உணர்ந்து
மெல்ல பூவின் வெளி நோக்கித்
திரும்பிப் பறக்கிறாள்
தொலைவை மறந்து..
தித்திப்பின் முகவரி தான் மட்டும் அறிவேனென
உறக்க நினைவில் சிரிக்கும்
யாழினியைப் பின்தொடரத் துவங்குகிறது
மின்மினி...

 - தேனு

நன்றி கீற்று,

Tuesday, May 14, 2013

இராப்பேய்க்கதைகளின் இளவரசி



Photo Courtesy - Madhu
அதனை மட்டும் சொல்லாதீர்கள்!
அடரிருள் வீட்டின் ஒரு மூலைப் பகுதியில்
வெண்ணிற சேலையணிந்து
மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறாள்
நிலவதனி..
கொலுசுமல்லாது வளையுமல்லாது
சுவாசச்சத்தம் மட்டும் முழுதாய் நிறைத்திருக்கிறது
இந்த இரவின் நிமிடங்களை...
தாழம்பூ மணக்க ஒவ்வொரு அடியிலும்
கூந்தல் தவழும் இடையில்
செருகி வைத்திருக்கும் சிரிப்புகளை
திடீரென வெளியிடுகிறாள்..
எதிரொலியின் வீரியத்தில் சிரிப்புத்துகள்கள்
சிதறி அச்சமெனும் சிறகுகளணிந்து
படபடத்துப் பறக்கின்றன அறை முழுதும்...
அவள் நடை என்றோ இறந்த உங்கள்
தோழியோருத்தியையோ
உறவினளையோ
நினைவூட்டக்கூடும்...
உங்களை நினைவுலகில் மிதக்கவிட்டு,
முகத்தினை மட்டும் மறைத்தே வைத்திருக்கும்
நிலவதனியைப் பேயென்று சொல்வதுண்டு
சிலர்..
இப்படியான நிலவதனிக்கு
இராப்பேய்கதைகள் எப்படியிருக்கும்?
அதை மட்டும் எவரிடத்தும்
உரக்கச் சொல்லாதீர்கள்!!
- தேனு

நன்றி கீற்று,

Sunday, April 28, 2013

தப்பி விட்ட தருணம் ஒன்றின் கனம்


Photo Courtesy: Karthik Alagesan

மஞ்சள் நிற மழையை
சிக்கனமின்றி கக்கிக் கொண்டிருந்தது
ஒரு மின்கம்பவிளக்கு..
கம்பத்தை ஒட்டி ஒருபுறம்
மூன்றடுக்கு மாடி குடியிருப்பு,
மறுபுறம் வைக்கோலும் சாணமும் நிறைந்த
மண் மேடு..
அடுக்கு மாடியின் முதல் தள வீட்டின்
சாளரத்தின் வழி
மேட்டில் இரு பசுக்கள் கட்டி இருப்பதை
நிதமும் காணலாம்.
ஒன்று மட்டும் பல மாதங்களாய்
இரவு முழுதும் ஓயாமல்
கத்திக் கொண்டிருக்கும்,
சத்தம் தவறாத நாளுமில்லை, 
சுற்றத்தில் திட்டாத மனிதரும் இல்லை..
ஓர் பின்னிரவின் இடையில்
சத்தம் நின்ற தருணத்தில்
உறக்கம் தொலைத்த விழிகள்
அதன் பிறகான இரவில் அடங்க மறுத்தன..
மறுநாள் வெளிக் கிளம்பி
மேட்டிற்குக் கண்களை ஓட விட, 
ஒரு மூலையில் கோணிப்பை
ஆளுயர எடையை மறைத்து இருந்தது,
கனத்த மௌனத்துடன்
கடந்தேன் சற்று தொலைவை..
சில நிமிடங்களில்
மனமெங்கும் ஒலித்துக்  கொண்டிருந்தது
அம்மா என்ற சத்தம் மட்டும்
மீண்டும் மீண்டும்..

 - தேனு

நன்றி கீற்று,

Monday, April 8, 2013

பிரியத்தின் யதார்த்தமும் எதிர்பார்ப்பும்

Photo Courtesy: Karthik Alagesan

மழைச்சாரல் துவங்கிய நாளொன்றில்
நெஞ்சோடு அணைத்து வந்திருந்தாள் யாழினி,
பெயரும் சூட்டியாகிவிட்டதென
இறுமாப்பாய் சிரித்து
இதழ் குவித்து கலைநேசன் என்றாள்.
அன்றிலிருந்து வீட்டில் ஒருவனாய்
வளரத் துவங்கினான்,
இணை பிரியா தோழர்களாகிப்
போயினர் இருவரும்..
முகத்தோடு முகம் வைத்து
புரிதலாய் அவள் மொழியில்
கொஞ்சிக் கொண்டே இருப்பாள்,
உணவு வேளைகளில் எல்லாம்
அவனுக்கும் வைத்துத்
தானும் அருகமர்ந்து உட்கொள்வாள்.
அவன் குளிப்பதற்காகத் தனியாய்
ஒரு தொட்டி வாங்கி
தினம் இரு மணி நேரம் குளிக்க வைத்துச்
சிரிக்க யாழினிக்கு மட்டுமே வந்தது..
கட்டிக் கொண்டே தூங்குவதும்
அவர்கட்கு வழக்கமாகிப் போனது..
இயந்திரமாய் கல்வி ஏற்றும்
பன்னிரெண்டாம் வகுப்பும் வந்தது,
பிரியா விடை கொடுத்து
அழுதழுது அவனுக்கு முத்தம் முத்தமாய் கொடுத்து
விடுதிக்குச் சென்று விட்டாள் யாழினி..
இரு நாட்களாய் இம்மியும் நகராமல்
வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறான்
கலைநேசன்..

 - தேனு

நன்றி நவீன விருட்சம்,

Saturday, April 6, 2013

பிரிவின் வண்ணம் பூசும் ஒரு சித்திரச்சுவர்


ஒரு வருத்தத்தின் சாயலைப் பூசிக்கொண்ட
என்னறையின் சுவர்களில்
நாங்கள் நானாக மாறியதோர்
பிரிவின் கதையை வரையத் தெரியவில்லை,
வளையத் தெரியவுமில்லை எனக்கு..
தனிமையின் விரல் கோர்த்து
தத்தி தத்தி நடை பயில்கிறேன்,
வண்ணச்சுவர்களை அடையும் ஒரு நூலிழையில்
தனிமையின் விரல்விடுத்து
மௌனத்தின் விரல் தேடி நிற்கிறேன்..
வட்டத்தின் ஒரு புள்ளிக்குள்
சொல்ல மறுத்த மறதியின்
விழுக்காட்டில் மொத்தமாய் தொக்கியபடி
என்னை வரைந்து கொண்டிருக்கிறது
பிரிவின் நிறத்தில் குழைத்தெடுத்த தூரிகை..
தேனு
- நன்றி கீற்று,

Thursday, March 14, 2013

காற்றில் அசைந்தாடும் இசைசிறகுகள்




குளிரூட்டும் காற்று வேகத்தில்
மிதந்து தாளமிடுகின்றன
சாளரக் கதவுகள்..

தெருவோர நாய்குட்டியின் அருகில்
சன்னமான மண்தரையில் தன்னந்தனியாய்
உருள்கிறது காற்றை குடிக்கும்
ஒரு புல்லாங்குழல்..

வாய் திறந்திருக்கும் ஊதுதுளை நுனியில்
உட்புகும் கோட்டோவியங்கள்
வண்ண வண்ண இசைக்குறியீடுகளென
வெளியாகி விண்ணுக்கு சிறகடிக்கின்றன..

குளிர்ந்தாடும் இரவின் மேனியில் மெள்ள பயணமாகி 
இசைச் சிறகுகளுடன் வட்டமிட்டு
மின்னலென வெளிவருகிறாய்..

உன் அடர்மௌனத்தின் நீளத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில்லுடுகின்றன
இன்னமும் இசைக்கப்பெறாத மெட்டுப்பூச்சிகள்..

 - தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6158

Thursday, February 28, 2013

கதையல்லாத கயிறுகளின் நெடி


சாணத்தின் மணம் நீளும்
ஒரு விடியா விடியலின் வாசலில்
மா நிறைந்த கைகளுடன் நிற்கிறேன்...


மூடுபனியின் இறுக்கத்தில் நனையும் மௌனத்தை
இலகுவாய் உரசிச் செல்கிறது,
இடைவிடாது ஒலித்த
பால்காரச் சிறுமியின் வளையோசை.. 


 மீள்மூச்சுடன் தட்டிக் கொண்டிருந்த
சிறுமிக்கு எள்ளளவும் செவிசாய்த்ததாய்
தெரியவில்லை,
இருள் மூகமூடியணியாத எதிர்வீட்டு மரக்கதவு..
  

நிமிடத்தின் தொடர்ச்சியிலும்
திறவாத கதவுகளின்
பெருங்கோப்பை அளவிலான அகாலத்தை
நொசிவிழைக் கயிற்றின் நெடி
அரவமற்று கதைத்துக் கொண்டிருக்கிறது..
  

விடியும் விடியலின் ஓரத்தில்
ஒரிரு புள்ளிகளுக்குள் அடங்கி விடுகிறது
இழுக்க நினைத்த மாக்கோடுகள்.. 

- தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=22440&Itemid=139

Saturday, January 5, 2013

நாகதாளி பூமணம்



பெருமணல் வீசும் காற்றில்
பாலைத்தீ அமிழ்த்திய பெயரால் விரிகிறது
நாகதாளி வனக்கூடு..
வனவெதுப்பினும் மிஞ்சி
உயிர்த்தெழுந்த கோடுகளாய்,
கிளையிடத் துவங்கும் முறையே
மீள்கணம் நீள்வதைக் குறிப்பெடுக்க
என்றுதான் இயல்கிறது?
வெளியோடு உழன்றாடும்
சிற்றிலை ஊன்றி
மெல்ல மெல்ல வார்த்து
வண்ணமாய் நிறைகிறது
நிறம்சூடுகனி..
மணலோடும் காற்றோடும் கிளர்ந்து
வெளிக்கொணர்ந்த நிறங்களில்
உச்சிமீது வானிடியும்
காலநேரங்கள் நிழல்
துளியும் இருக்கிறதில்லை..
நிறம் மாறிய நெருப்புக்கனியின் நுனியில்
பூவாளியின் துளைகளாய் இன்னமும்
தூவிக் கொண்டிருக்கிறது முள்மழை..
- தேனு
நன்றி சொல்வனம்,
http://solvanam.com/?p=23071