Showing posts with label நிலாச்சாரல். Show all posts
Showing posts with label நிலாச்சாரல். Show all posts

Tuesday, March 29, 2011

இருளும் தருணங்களில்..

 
 
உராய்வுகளும் மோகங்களும் மேலோங்கி
காதல் தொலைந்திருந்து
நானும் என்னவளும் துழாவிய நாட்கள்..
எண்ணிக்கை சற்று அதீதம்..

என் விரல் இடுக்குகளில்
இடைவெளியிட்டு கோர்த்து
வீணை மீட்டும் அவள் விரல்கள்...

விழிகளுக்கருகில் கோலமிட்டு
அவள் மயிர்கீற்றுகளில்
சுருள்படும் குறும்புத்தனம் மிக்க
சுழற்சிகள்..

அவள் ஒற்றை விரலும் என் நெற்றியும்
ஒன்றிப்போக
அவளிடும் திருநீறு..

காதோரம் குறுகுறுக்க
இதழ் குவித்து
மெலிதான மூச்சுக்காற்றோடு
அவளுதிர்க்கும்
எனக்கென்று அவளிட்ட செல்லப் பெயர்..

மீண்டெழுந்து மீட்டு வர
எத்தனப்பட்டு அவள் செய்யும் சில...
மனதோரம் ரம்மிய ரீங்காரமிட்டு
துளிர்விடும் காதல் மடுக்கள்..
அம்மடுக்கள் மீது
ஏறுக்கான கம்பீரத்துடன்
நானும் என் காதலும்.. 
 
 - தேனு

நன்றி நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/03281106.asp

Tuesday, February 1, 2011

மழை ரசித்த நாணம்


மாலை மங்கி
இருள் சூழத் தொடங்கியிருந்தது!!
.
சாலையோர மலர்களை
ரசித்த வண்ணம்
பேச்சைத் தொடர்ந்தாள்!
எதையெதையோ பற்றி
தொடர்ச்சியே இன்றி!

மழைக்கு அதீத காதல்
நிலமடந்தை மீதா?
எங்கள் மீதா?
.
பொழியத் தொடங்கினான்
மூச்சு விடவும் தாமதிக்காமல்...

துழாவல் என்னோடு அவளும்
முழுதாய் நனைந்தும்
ஒதுங்க இடமொன்று
தஞ்சமோ ஓர் மரத்தின் கீழ்!

அவள் மூச்சுக்காற்று
ஊடலாய்
என் காது மடலோடு..
.
ஆயிரம் ஆயிரம்
மின்னல் கீற்றுகள்,
என் மனதோடு...

சற்று தைரியமாய்
சேர்த்து அணைத்தேன்
உயிரோடு மெய்யையும்
இதழோடு இதழையும்!!
.
சட்டென்று உணர்ந்தவளாய்
விலக்கி விட்டோடினாள்.
சிறிதளவும்
வெட்கம் விலகாமல்!!!


நன்றி நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/01311107.asp

Saturday, January 29, 2011

நிதர்சனம்




இரவைக் கிழித்து
எழுகையிலே
கிழிபடத் தொடங்கிற்று
நாளேடு!!!

இன்றென்ன புதியது?
வேறென்ன புகுவது?
வகை வகையாய் எண்ணம்
அசை போட்டபடி நெஞ்சம்!

ஆள் பாதி
ஆடையும் பாதியாய்
பார்த்துச் சிரித்தது,
பிரதிபிம்பம்!!

ஆயிரம் ஆயிரம்
கனாக்களும் ஏக்கங்களும்
தோள் பற்றி
நாள் முழுதும்!!

எந்திரமாய் ஓடித்திரும்புகையில்
இருள் சூழ்ந்திருந்தது!!
கதை, கவிதை, புத்தகம்
மூவிரண்டு அலசல்கள்
எதிலும் வாய்த்திடாது
அயர்ந்துறங்கிப் போயின
விழிகள் அன்றும்!!

மீண்டெழுந்தால்
நாளையும் கிழிபடும்
நாளேடில் ஓர் தாள்!!!
...

நன்றி கூடல்