Friday, January 9, 2015

கனவுகளின் கிழிந்த ஒற்றை சிறகுPhoto Courtesy - Ashok Saravanan

*
இரவின் நீட்டலில் ஒரு வன்புன்னகையுடன்
குவிந்த அவ்வீட்டிற்குள் நுழைகிறான்,
கனவுகளை முட்கள் கொண்டு கிழிப்பவன்..
ஒவ்வொரு கனவுக்குள்ளும் மிக எளிதாக நுழைந்து
செந்நிற சிறகுகளாலான நகங்களை
கனவின் நடுக்கம் கொண்டு கூராக்குகிறான்..
மென்மையான பூவிதழ்களைப் பிய்த்தெடுத்து
போர்த்திக் கொள்ளும் வாகு
அவனுக்கு மிகவும் பிடித்திருக்கலாம்..
வண்ணங்களைக் கீறி சதை உதறும்
முத்தங்களைச் சூறையாடுதல்
அவனுக்கு மிகவும் பிடித்திருக்கலாம்..
வீட்டின் காற்று புகமுடியா அறையில்
வெளிர்கூந்தலை விரித்து
சிக்காக்கிக் கொண்டிருக்கிறாள் நிலவதனி..
அவளைக் கண்டதும் தன்னிலை விளக்கிச்
சிறகுகள் அடர்ந்த கனவின் வனத்தில்
அவளுடன் சுற்றித் திரிய துவங்குகிறான்..
வன்மத்தின் ஆதி வினா கனவுகளா? உறக்கங்களா? என
குளிர் மரங்களின் கிளைகளில்
அமர்ந்து குரூர புன்னகை இழைந்தோட
விவாதிக்கிறார்கள்..
வருடங்களில் வயதுகள் குறைந்து
விவாதத்தின் இரட்டை நாக்கைப் பற்றி
காலம் தாண்டி பயணிக்கிறார்கள்..
காலங்கள் கடந்து வனத்தின்
எல்லைகளைக் கடந்ததும்,
பற்கள் பதித்து கிழித்தெறியும் வெறியுடன்
சிதறுண்டு தள்ளாடும் அவனுள் விடம் ஏற்றி
நகைத்து நிற்கிறாள் நிலவதனி..

 - தேனு

நன்றி கீற்று,
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27659-2015-01-08-06-33-01

பயணிக்கும் காற்புள்ளிகளின் உருவமற்ற கூட்டுச்சொல்


Photo Courtesy - Ashok Saravanan

*
இருளில் நீளும் மின்வரியின் இறுதியில் விழுந்து சொல்லாகிறது
ஒரு காற்புள்ளி..

சொற்கள் அர்த்தமற்றுப் போகும் என்றபடி
வீசும் கோர்வையின் விரல் பிடித்து நடக்கிறது,
உருவத்தின் நிலையை மறந்தபடியும்,
உருவத்தின் தேவையை மறுத்தபடியும்..

துகள்களின் கூட்டு எண்ணிக்கை
மீண்டும் தூணாகாது என்பதில் துவங்குகின்றன,
பிரசுரிக்கச் சேர்த்து வைத்திருந்து
சொற்களாய் உருமாறி கொண்டிருக்கும் காற்புள்ளிகளிலிருந்து
வெடித்து நீர்க்கும் அர்த்தங்கள்...

அர்த்தங்களின் இடைவெளி ஒன்றி அச்சில் வார்க்கும்
ஓர் நீண்ட சொல் உருவாவதை
மெலிதாய் கூட சொல்வதற்கான தேவை இருப்பில் இல்லை..

உருவான சொல்லின் முற்று நிலைக்குத் தேவையென,
காற்று விடுத்துப் போகும் ஒற்றை முற்றுப்புள்ளியை நோக்கி ஓடுகிறது விழ மறந்த சொல்லீர்ப்பு..

- தேனு

நன்றி கீற்று,
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27629-2015-01-05-06-49-55

சின்ட்ரெல்லாவின் ஒற்றை தவறது எதிர்விசை

**
மூன்று இறப்பைக் கடந்து
விழித்திருக்கிறாள் சின்ட்ரெல்லா..
உயிர்சிறகுகளுடன் கந்தர்வ வனத்தை
அடைய தவமிருக்கும் அவள்,
கந்தர்வ அரங்கு தயாராகிறதை அறிந்து
சிறகுகளற்ற தன்னிலையில் விம்மிச் சரிகிறாள்..
கண்ணீரின் விளிம்பில் பிறக்கும் மாய யட்சி
சூதாடத் துவங்கியதும்,
யட்சிக்கும் சின்ட்ரெல்லாவிற்கும் மத்தியில்
உணர்சிறகுகளுக்கு இன்பக்கனவுகளென ஒற்றை தவறுக்கான
உத்திரவாதம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றது..
வண்ணச் சிறகுகள் கொண்டு அரங்கை அடைகிறாள்
சின்ட்ரெல்லா,
எதிர்ப்படும் கந்தர்வனை இறுகப் பற்றிக் கொள்கிறாள்..
ஆடிக் களைத்து இதழ் தேடி
முத்தச்சிறகைப் பதிக்க,
இதழில் ஒரு வித பரிச்சய மணத்தை
உணர்கிறாள் உள்ளெங்கும்..
வெளியேறும் நோக்கில் பரிச்சய நொடிகள் கரைந்து விடுகின்றன..
மறுநாள் மீண்டும் செல்கிறாள்..
கலந்தாடுகிறாள்..
இதழ் தீண்டுகிறாள்..
உயிர் உணர்கிறாள்..
கந்தர்வனின் குருதி தோய்ந்த விழிகளும் குரூரச் சிரிப்பும்
வரவேற்க நிலையற்று நிற்கிறாள்..
மறுநிமிடம் மூச்சின் இறுதி வளைவை இறுகப் பற்றி கொண்டு ஓடுகிறாள்..
விடுத்து வந்த அரணத்தின் நினைவால்
அறையின் ஒரு மூலையில் அமர்ந்து
காலை அறுத்துக் கொண்டிருக்கிறாள் சின்ட்ரெல்லா..

 - தேனு

நினைவுகளின் கூர்மையில் பகிராது நீர்த்த வன்மம்


Photo Courtesy - Karthik Alagesan

*
இரவின் நீட்டலில் பகிரமுடியாது கசக்கிய கைக்குட்டை
எங்கோ நினைவுகூறுகளின் குவியலில் மறைந்திருக்கிறது!

பதியும் வார்த்தைகள் பதிந்தபடியே கரைகின்றன,
தெளியும் நிமிடங்கள் வெகுவாய் சாய்த்துப் பார்க்கும்
ஒரு பழுத்த இலையென சரசரத்துத் தேய்கிறேன்,
ஒரு ஆளுயுர அரவத்தின் இறுதியில்....

சுளீரென்ற சத்தம் விடுத்து 
சுற்றமனைத்தும் விக்கித்து நிற்கின்றன,
அணைந்தது காற்றா நெருப்பா?
நனைந்தது நீயா நானா? 
நீயெனில் பறக்கவும் , நானெனில் விலகவும்
செயல்பட துவங்க வேண்டும்!

ஒரு தணிந்த இரவு தேவை படுகிறது
செயல்படவும் மீண்டும் உயிர்க்கவும்,
இதே வளராத சுழலின் ஒற்றைப் புள்ளியில்
முடிவுகளற்று நிற்க மட்டுமே
கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்றளவும்..

நினைவுகளின் துவைக்காத கைக்குட்டை இன்னும்
கசக்கியபடி உள்ளேயே மறைந்திருக்கிறது,
அதனூடே மிஞ்சி இருந்த நீர்த்த வன்மமும்!!

 - தேனு

நன்றி கீற்று,
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27609-2014-12-31-00-51-07