Showing posts with label 361 டிகிரி. Show all posts
Showing posts with label 361 டிகிரி. Show all posts

Monday, February 20, 2012

காகிதங்களில் சொற்பமாய் குறிக்கப்பட்ட பிரிவு


*
யாருமற்று தனிமையில் காற்று
பெருமழையென பொழிந்து கொண்டிருந்தது..

நுண்ணிய இசை நிறைந்த அறையில்
பருகிய நெடி மீதமான
நான்கைந்து தேநீர்க் கோப்பைகள்
மேசை மீது கிடத்தப்பட்டிருந்தன..

ஒரு உறவின் இணக்கம் பதிவுற்ற
காகிதங்களில்
பதிந்திருந்த எழுத்துக்களை அழித்து
பிணைப்பெனும் நிறமற்ற நீர்
வெறுமையாய் வழிந்து கொண்டிருந்தது..

தனிமையின் விளிம்பில் கிடக்கும்
வெற்றுக்காகிதங்களைக் கிழித்தெறியும்
காற்றைப் பெருமழையென
பொழிந்து கொண்டிருந்தது மின்விசிறி...
*

- தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18344&Itemid=139

Monday, February 13, 2012

மௌனமாய் கடத்தப்படும் ரகசியத்தின் கால்கள்



*
வெயில் நீளும் முற்பகல் ஒன்றில்
யாரிடமும் சொல்ல வேண்டாமென ஒரு
நிகழ்வை என்னுள் பதிகிறாய்..
 
ஒரு வெளியேற்றத்திற்கான கையொப்பம்
இடப்பட்ட தாள்களின் எழுத்துக்கள்
மகிழ்வானதென்று மதுவின் போதையேற்றி நீ செல்ல
பிடரிமயிர் துள்ளலுடன் கூடிய நடையை
வியந்த வண்ணம் நிற்கிறேன்..

அடர்ந்த தனிமையின் சுவர்களில்
நீ விடுத்துச் சென்ற ஒற்றை வரி
வெளியேற்ற செய்தியை
அனுமதிக்கவோ நிராகரிக்கவோ
யாரும் முன்வரவில்லை..

இருப்பை உணர்த்த அமர்கின்ற இருக்கையிடம்
விடைபெறுதல் குறித்து
உரக்க நீ சொல்ல உருண்டோடுகிறது
சக்கரம் பொருத்தப்பட்ட இருக்கை..

யாரிடமும் சொல்லாத ரகசியமென
மௌனமாய் நடந்தேறிய
அந்நிகழ்வை என்னுள் பதிகிறாய்..
*

 - தேனு

நன்றி உயிரோசை,