Tuesday, June 28, 2011

மிட்டாய் இரவுகள்


மிட்டாய்கோப்பையைத்
தொக்கிக் கொண்டு நிற்கிறது
அந்தவொரு கரடி
என் படுக்கையறை மேசை மீது...

 
மிட்டாய்களை நிரப்பிடும் கோப்பையில்
துகள் துகளாய் பிரித்தெடுத்து
என்னையும் நிரப்பி நகைக்கிறது
மௌனம் கதைக்கும் இதழ்கள்..


காத்திருப்புகள் அதீதமாகும் பட்சத்தில்
மிட்டாய்கோப்பையை
இறுக மூடிக் கொண்டு
பாராமுகமாய் திரும்பிக் கொள்கிறது..


புறக்கணிப்பிற்குப் பிறகான
இரவுகள் முழுதும்
மிட்டாய்கரடி கனவுகளுடனே
நிரம்புகிறது எனக்கு...

என் கையோடு
பிசுபிசுத்து விடுகின்றன
கோப்பை நிறைக்கா
மிட்டாய்கள் சில..


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4286

பிரதிபிம்ப பயணங்கள்



விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் 
என்னை விலக்கி 
அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. 
. 
அவன் யார்? 
என்னைக் காணும் வேளைகளில்
பிறக்கும் குறுநகைப்பிற்கான
தகிக்கும் அர்த்தங்கள் யாது?
எனக்கும் அவனுக்குமான
இடைவெளியின் அலைவரிசை ஒப்பந்தங்கள்
உண்மையில் உரைப்பது என்ன? 
அவன் என்னைத் தீண்டுகையில் 
பிரதிகள் இடம்மாற்றப்படுவதை 
இதழ்களும் செவிகளும் 
உணர மறுப்பதேன்? 
. 
இவ்வாறான எனக்காய் உதிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 
அவனிடம் இருப்பில் இருப்பது 
வெளிப்படையான மௌனம் மட்டுமே..

அவன் மௌனத்தின் உச்சரிப்பினில் 
சகலமும் லயித்திருக்க… 
அவனுக்கான சிறகுகள் எனக்கும் 
எனக்கான எண்ணங்கள் அவனுக்கும் 
இடம் மாறியிருந்ததன…

தற்சமயம் மௌன சிறகுகளுடன் 
பயணித்துக் கொண்டிருக்கிறேன் நான், 
எனக்கு 
கருமையாகத் தெரிகிறதில்லை 
சிறகுகளின் நிறம்…
  
– தேனு 

நன்றி திண்ணை,
http://puthu.thinnai.com/?p=384