Tuesday, March 29, 2011

இருளும் தருணங்களில்..

 
 
உராய்வுகளும் மோகங்களும் மேலோங்கி
காதல் தொலைந்திருந்து
நானும் என்னவளும் துழாவிய நாட்கள்..
எண்ணிக்கை சற்று அதீதம்..

என் விரல் இடுக்குகளில்
இடைவெளியிட்டு கோர்த்து
வீணை மீட்டும் அவள் விரல்கள்...

விழிகளுக்கருகில் கோலமிட்டு
அவள் மயிர்கீற்றுகளில்
சுருள்படும் குறும்புத்தனம் மிக்க
சுழற்சிகள்..

அவள் ஒற்றை விரலும் என் நெற்றியும்
ஒன்றிப்போக
அவளிடும் திருநீறு..

காதோரம் குறுகுறுக்க
இதழ் குவித்து
மெலிதான மூச்சுக்காற்றோடு
அவளுதிர்க்கும்
எனக்கென்று அவளிட்ட செல்லப் பெயர்..

மீண்டெழுந்து மீட்டு வர
எத்தனப்பட்டு அவள் செய்யும் சில...
மனதோரம் ரம்மிய ரீங்காரமிட்டு
துளிர்விடும் காதல் மடுக்கள்..
அம்மடுக்கள் மீது
ஏறுக்கான கம்பீரத்துடன்
நானும் என் காதலும்.. 
 
 - தேனு

நன்றி நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/03281106.asp

Monday, March 28, 2011

அவள் நிறையும் கிறுக்கல்கள்


வந்து நிற்கும்
நினைவுகளுக்கெல்லாம்
விடையெனவும் தடமெனவும்
ஆங்காங்கே கிறுக்கப்படும் எழுத்துக்களில்
அவ்வளவுமாய்
அவள்தான் நிறைந்திருக்கிறாள்..
.
நாளுக்கொன்றாய்
நாளைக்குமொன்றாய்
விடுபடும் வார்த்தைக்கோர்வைகள்
பலருக்கு கவிதையாகவே
புலப்படுவது
செயப்பாட்டு விந்தையே..
.
அவைகள் வளுக்கான
என் கிறுக்கல்கள்தான்
என்பதில் ஆணித்தரமென
நிற்பதிலிருக்கும்
உணர்வுப் போராட்டம்
சொல்லி மாளாது..
.
வெண்ணிற தாளினமே,
தூது போ!
தனிமையில் சந்தித்து
என் மனதை
விட்டுவா என்னவளிடம்.....
.
அவளால் மட்டும்
வெறுக்கப்படும்
என் வெற்றுக்கிறுக்கல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து
மரித்துக் கொண்டிருக்கின்றன,
ஆறாம் விரலிலிருந்து விடுபட்டுக்
கரையும்
கண்ணீர் புகையென...
 
 - தேனு


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103276&format=html

Friday, March 25, 2011

விழிநீர் நனைக்கும் புன்னகை

Skethcing by my friend Vaishnavi...
Thanks Vaishnavi..


தாள்கள் ஒவ்வொன்றாய்
நிரப்பப்படுகையில்
அழும் வார்த்தைகளின் விசும்பல்கள்
இரவுகளில் மட்டுமே
சில சுற்றுகள் பெருகக்கூடும்..
.
நனையும் கையேடிற்கான
ஆறுதல் மொழி
மௌனம்தான்
என்பதில் மிச்சப்பட்டு
மெலிதாய் இழைகிறது
எனது எழுதுகோல் சாயம்...
.
பிரிவின் வீச்சத்தில்
தெறித்து விழும் புன்னகை,
ஓர் நூற்றாண்டு சோகத்தை
 உள்ளடக்கிய வரிகள்,
கண்ட நொடியில் விளங்கிடாது
அவற்றின் வீரியம்..
.
விளங்கும் வேளையில்
தனிமை குளவிகள்
கொட்ட கொட்ட
ஏற்றுகிறேன் உணர்வுகளை
அதற்கென அலங்கரிக்கப்பட்டதோர்
தற்கொலை விளிம்பினில்...


 - தேனு

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13772:2011-03-25-08-36-44&catid=2:poems&Itemid=265


Tuesday, March 22, 2011

கருநிற பிரதிவாதிகள்


ஒவ்வொருவரின் கீழும்
ஊர்ந்து வருகிறது
ஓர் கரிய உருவம்..
.

செய்வதையே மீண்டும்,
மீண்டும் வந்து செய்தும்
மெலிதாகக் கசிந்து
நடப்புகளுக்கு ஏற்றாற்போல்
அடலாய் விரிவடையும்...
.
நடந்தேறும் எந்தவொரு
பிழையினிற்கும் அதற்கும்
இருப்பில் உள்ள உறுதிப்பத்திரம்
சில நேரங்களில் இயலாமை
காரணமாகவும்
இறுகச் செய்யப்படலாம்...
.
காலங்கள் நகர நகர
அவைகளின் விரிவாக்கம்
சற்றே அச்சுறுத்தும்...
.
அவற்றுக்கான
இரகசியங்கள் ஓர் வேற்றுலகில்
காக்கப்பட்டு
ஆர்ப்பரிப்புகள் ஓங்கியெழும்
கணத்தினில்
ஒவ்வொன்றாக கைகோர்த்து
இருள் கப்பி வானளாவும்
பிம்பமென உருவெடுக்கக் கூடும்...
.
அதற்குக் கீழேயும்
ஊசலாடியவாறு நிற்கும்
கரியதாய் ஓர் பிரதி..

 - தேனு

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13715:2011-03-21-14-18-19&catid=2:poems&Itemid=265

Monday, March 21, 2011

அந்தவொரு மழை நாள்



முன்மொழிக்குப் பிறகான நாளொன்றில்
துளி துளியாய் எதிர்பார்ப்புகள்
சொட்டிக் கொண்டு
சூடேற்ற,
இருவண்ண வானவில் சாரலுடன்
மெய் சிலிர்த்திருந்தோம்..
.
அவளுக்கான என் மௌனமும்
எனக்கான அவள் மௌனமும்
சிலாகித்துக் கொண்டிருந்தன
மழையின்
மெல்லியதோர் இசையோடு..
.
சிலாகிப்புகளின் நெருக்கம்
மென்மேலும் இறுகிக் கொண்டே
இரண்டு இணை அதரங்களுக்கான
இடைவெளியாம்
ஓர் புள்ளிக்குள் ஒடுங்கி விடும்...
.
பின்னணியில்
காதல் மின்மினிகளின்
வியூகமென
மின்வளையங்கள் மீட்டும்
அழகானதோர் வண்ண இசை...

- தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311032013&format=html

முன்மொழி means Proposal (Translation on few requests)

Tuesday, March 15, 2011

எஞ்சிய மௌனத் துளிகள்



முட்டுச்சந்தின்
அந்தவொரு தேநீர்க்கடையில்
கிடத்தப்பட்டிருந்தன
எச்சில் கோப்பைகள்..
.

கோப்பைகள் வழியே
மிளிரும் ஒளிப்பிரிகைகளுக்கும்
தயக்கத்துடன்
மிச்சப்பட்டிருந்த தேநீர்த்துளிகளுக்குமான
இடையில் நீளும் மௌனங்கள்..
.
பார்வைகள் குறுக்கப்பட்டு
மீண்டும் விரிக்கப்படுவதேனோ
சிற்சில விழிகளுக்கு
மட்டுமிட்ட விதியென
நிற்கிறது யூகம்..
.
மிளிர்ந்திடா துளிகள்
ஒவ்வொன்றாய் பிரிக்கப்பட்டு
ஒரே கோப்பையினுள்
சேமிக்கப்பட,
ஒரு கணத்தில்
நிரம்பி வழிந்தது..
.
துடிப்புமில்லை, துள்ளலுமில்லை!!
நிரம்பி வழியும்
அதுவுமொரு எச்சில் கோப்பை...

நன்றி உயிரோசை
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4100

Monday, March 14, 2011

நீ, நான் மற்றும் அவன்


ஆழிகள் கண்டறியா
அமிழ்ந்திருக்கும் தெப்பமென
நனைகூந்தல்...
அந்தவொரு கணத்தில்
சுற்றம் அனைத்தையும் தவிர்த்து
முன்னிலையில் நிறுத்தப்பட்டிருந்தன
காதலும் காமமும்...
.
இன்னதென்று பிரித்தறியாதபடி
படர்ந்து விட்டிருந்த யாக்கைகள்
சீராய்ப் பாடும் தென்றலுக்கு
சற்றே ஊடுருவும் சலிப்பை
வாரி வாரி வழங்கி,
உராய்தலுக்கான வீரியத்தில்...

உச்சி நுகர்ந்திடும்
அந்த எச்சில் ஈரம்
காய்ந்திட்டதாய் துளியும்
விட்டுவைக்கவில்லை நினைவுகள்..
.
உயிரணுக்கள் உயிர்த்தெழும்
அந்நொடிப்பொழுதிலும்
இதிகாசங்கள் நவில்ந்திட்டு
செருக்குடன் தள்ளி நிற்கிறான்
கவிதையெனும் மூன்றாமவன்!!


 - தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103137&format=html

Thursday, March 10, 2011

நிரம்பி வழியும் பின்னிரவு


இருண்டவெளி நர்த்தனம்
நிதம் அரங்கேற்றும்
பின்னிரவினை அடக்க
வழிகள் அறியாதாம்
முன்னிரவு...
.
கடலும் கரையும்
சிலாகிக்கும் அச்சில நொடிகள்
நமக்குள்ளேயும்
நடந்தேறும் மர்ம முடிச்சுகள்
சற்று யதார்த்தத்திற்கு
மீறியவைதான்!!
.
மூன்றாம்பிறை நாற்காலியில்
அமர்ந்து
ஒவ்வொரு மணித்துளியிலும்
இருளின் அரங்கேற்றவேளையினைத்
துழாவித் துழாவித்
தோற்றெழுகிறோம்...
வா! வா!
புரிந்து வகுப்போம்
ஓர் மெல்லிய ஊடகம்...
.
கடல் - கரை - நிலவு
நீ - நான் - இரவு...
மத்தியில் நம்மோடு
இழைந்துருளும் காதல்...

 - தேனு


நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13486:2011-03-10-10-09-56&catid=2:poems&Itemid=265

Tuesday, March 8, 2011

இரையும் பறவைகள்

 
 
இறக்கும் தருணத்திலோர் பறவை..
வெட்டுண்ட சிறகுகள் ஆங்காங்கே
குருதி கலந்த குப்பைகளுள்...
ஒவ்வொன்றாக கண்டெடுத்து
ஒட்டுவிக்க முயற்சிப்பதை
என்னவென்று குறித்து வைக்க?
.
மீளாது அதற்கான பாசத்துடன்
இணைப்பறவையின் அல்லாடல்கள்...
யுத்தம் தெளிக்கும் அந்நிமிடங்கள்...
நிச்சயமாக வசப்படமாட்டா
ஓரிரு வரிகளின்
உணர்த்தப்படலில்!!
.
அடை காத்த முட்டைகள்
நச்சுப்படிகங்களாக மாறியதற்கான
காரணிகள் யாதாகும்?
அலசப்பட நேரமில்லை..
இறக்கும் தருணத்தில் பறவை இரண்டு...

 - தேனு
 
நன்றி உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4072

Monday, March 7, 2011

ஒப்பனை அறை பதிவுகள்




வட்ட வரையியாம் வாழ்க்கை..
அது இழைத்திடும் ஒப்பனைகள்
துவக்கத்துடன் இறுதியுறும்
இடமென்றும் ஒன்றுதான்..
.
அசல்களின் துணைக்கால்களென
மாதிரியின் பயன்பாடு
யூகிக்கப்படும் நுனிவரையில்
எனும் கணிப்பு
அவளுக்கு மட்டும் புதிதா என்ன?
.
மறதிகளின் கிழட்டுக்கூட்டம்
பொய் வண்ணமிழைத்து
ஆட்டுவிக்கும் பொம்மையென
வழிகின்றன துளிகள் சில..
.
விழிநீர் விலக்கிட
தன்னிலை மறைத்து
மூன்றாம் கரமொன்று
நீண்டிட..
கலையப்படத் துவங்கியிருந்தன
அவள் மறைபட்டிருந்த
நிலையற்ற ஒப்பனைகள்..

- தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103067&format=html

Saturday, March 5, 2011

வெள்ளை நிறத்தொரு வண்ணத்துப்பூச்சி


உனக்காகவென சேகரிக்கப்பட்ட
வண்ணத்துநிலவுகள்...
அவை லயித்திருக்கும்
அந்தவொரு மாலைப்பொழுதில்
வெள்ளை ரோஜாவாய் நீ...

நிர்வாணமாகின
வண்ணங்களைத் துறந்திட்டு
நிலவுகள் யாவும்...
.
சகிப்பதற்கில்லையாம்..
உன் ஒவ்வொரு அங்கமும்
வெள்ளை நிர்வாணப்படுதல்..

அங்கங்கள் ஒவ்வொன்றும்
வண்ணங்களால் அலங்கரிக்கப்படுவதற்கான
சுகம்..
ரசித்தபடி சிறகடிப்பதில்
கொள்ளை பிரியம்
அவ்வெள்ளை நிலவுகளுக்கு...
.
அவைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
வெள்ளை நிர்வாணத்தின்
மொத்த அழகினிற்கும்
ரசிகன் நானென்பது..

 - தேனு

நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13360&Itemid=139

Thursday, March 3, 2011

பின்னிரவு சாயங்கள்...



வெண்ணிறத் திரை
மெலிதாக ஊடுருவப்பட்டு
சாளர கட்டங்கள் வழி
இரவுக்கீற்றுகளிடும்
சலனமற்ற நர்த்தனம்..

.
நிதம் என் உறக்கங்கள்
என்னுடையதாக இருப்பதில்லை..
என்னைத் தழுவியும் இருக்கவில்லை..

.
பின்னிரவு மீதான
நிதர்சன சந்தேகங்கள்..
என்னை அயர்த்தி
என்னவளுக்கும் பின்னிரவுக்குமான
நடப்புகள் பற்றி..

.
தன்மான மயிர்
உந்தித் தள்ள
விழிகள் சிவந்தும்
தொடர்கிறது
என் யூகத்திற்கான கண்காணிப்பு..

.
இன்றும் நடந்தேறுகிறது
அவள் அதரங்களுடனான
அழகியதோர் பிணைப்பு..
நிம்மதி நாடிகள்
துளிர்த்திட..
அது பின்னிரவுடன் அல்ல!!


 - தேனு


நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13208:2011-02-24-08-55-01&catid=2:poems&Itemid=265

Tuesday, March 1, 2011

உரிமையின்மை தொடக்கம்


இருள்சூழ் வீடு
சுருண்டு கிடந்தன
அகமும் புறமும்!

அன்னையா?
வளர்க்கத் தெரியுமா?
வளர்த்தால் போதுமா?
வினாக்கள் வலுத்து
மருகி சீற்றம்..

வசையினது விசை
சற்று ஆழமாக...
கருகும் மலர்கள்
துடிப்பு தொடர்ந்தது!!

அன்று
பிடியாது கூட்டுடனே
பயணிக்க எத்தனித்தேன்
.
இன்றோ
அத்தொடர்பயணம்
தடங்களுடன் தயக்கம்..

சுரக்க மறுத்ததில்லை
அதரங்கள் துடிக்கின்றன
மெய்யுரைக்க,
சுரக்கவே இல்லை!!!

என்றுமன்றி இன்று
கால் சலங்கை
கனலாக உறுத்தியது

 - தேனு

நன்றி வார்ப்பு,
http://www.vaarppu.com/view/2392/