Friday, April 29, 2011

கூண்டிற்கருகில் கிளிகள்



விடியல் அழகில்
என்னிடம்
செய்தித்தாளினை
விழிவிரித்து கதைக்க
சுதர்சன் தாத்தா அங்கில்லை..


சில தேக்கரண்டி அன்பைக்
கலந்து
அதிசுத்தமான அய்யங்கார் காபியை
ஆற்றிக் கொடுக்க
மங்களம் பாட்டியும்தான்..


மௌனம் பேசும்
அக்குறுகிய அடுக்களையையும்
கம்பீர நாற்காலியையும்
வெறித்தபடி
அமர்ந்திருக்கிறேன் நான்..


காலையில் இருந்து
வெற்று சுவருடன்
கதைத்துக் கொண்டிருக்கிறது
வானவில் அலைவரிசை...
நேற்று மாலை
செய்தித்தாள்களின்
குண்டுவெடிப்பு
தலைப்புச் செய்தியை..


- தேனு

நன்றி உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4244

Wednesday, April 27, 2011

காய்த்துப் போன பிஞ்சு விரல்கள்



வீடு விட்டு வீடு
விட்டுப் போன உறவுகள்
வனப்புடன் நிலைத்திருக்கின்றன
அவளது நினைவுகளில் மட்டும்..
அக்கரை விட்டு இக்கரை..

நீளும் நாட்களின் அசுத்தங்கள்
மத்தியில்
மெல்லியதோர் ஓலத்துடன்
பம்பரமாய் சுழல்வது
அவளுக்கே உரித்தான சங்கதி
என்பதில்
ஐயமேதும் இருப்பதில்லை..


இக்கரை..
காய்த்துப் போய் தேய்ந்தொழுகும்
ரேகைகளின் ஊடே
வெள்ளைநோட்டுக்களின் வாசம்..
விழிநீரில் கரைந்திட்ட
நிம்மதி முடிச்சுகள்
அனிச்சையாக கிளறப்படுதல்
அவள் குற்றமல்லவே..

அக்கரை...
அஞ்சலில் வந்துசேரும்
அந்நோட்டுக்களில்
துளி துளியாகச் சொட்டிக் கொண்டிருந்தது
சிறிதும் நெடியற்ற
அவளது வியர்வை..

 - தேனு

நன்றி இளமை விகடன்,

Monday, April 25, 2011

கதைக்கும் சுவர்ப்பூச்சுகள்


அழகொழுகும் குட்டி தேவதை,
நீ நிறைத்திருக்கும்
சுண்ணாம்புச் சுவரின்
சித்திரக் கிளிகள்
இசைத்துக் கொண்டிருக்கின்றன..
.
காவலுக்கென
மின்னல் தோரணங்களை
இதய கிளைகளில்
கட்டிவிடும் யதார்த்தம்
உன்னால் மட்டுமே வாய்க்கும்..
.
மௌனமாய்
அக்கிளிகளுக்குள் நடந்தேறும்
கதை மொழிதலும்
கவிதை மொழிதலும்
இரகசியம் என்று
விரல் வைத்து இதழ் குவித்தாய்,
நினைவிருக்கிறது..
.
இரகசியங்களை அவிழ்க்காமல்
நீ தலையாட்டிப் போகையில்
மெல்லியதோர் நகைப்புடன்
இனிக்கிறது
உன் முகத்தில்
பச்சை சிறகுகள் படபடக்கும்
ஒற்றை செவ்வந்தி...


- தேனு

 நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311042414&format=html

Monday, April 18, 2011

பின்னிரவின் ஊடலில்...


இருளோடு சல்லாபிக்க
என்னிடம்
விடை பெற்றுக் கொண்டது,
அந்தவொரு விட்டில் பூச்சி
முறையான முன்னிரவில்..
.
எனக்கேற்ற மௌனத்துடன்
வருகை பதிவேடு இன்னமும்
காலியாக கிடந்தது,
அவன் வரும் நிமிடம்
எதிர்நோக்கி..
.
மல்லிகை மணத்துடன்
என் தனிமைக்குள் நுழையும்
ஒருசில எழுத்துக்கள்
ஆசை தீர உதிர்த்திடும்
எங்களுக்குள்ளான
சின்னச் சின்ன ஊடல்களின்
சிங்காரங்களை...
.
சீண்டிவிட்டு மறைந்திட்டான்
மீண்டும் ஒளியைத்
தன்வசம் இழுத்துக் கொண்டு
அவ்விருளுக்குள்...
கண்ணாமூச்சி ஆட்டம்,
எனக்கும் பிடித்தம்தான்
அவனுடன் விளையாட..
.
விளையாடிய களைப்பில்
தணல் தூண்ட நிலவை
அழைக்கிறேன்,
அணைப்புகளற்று இன்று
குளிர்கிறதாம்,
பின்னிரவின் சிலிர்ப்புகளுடன்
நடுங்குகிறது என் தேகம்..


- தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31104176&format=html

Thursday, April 14, 2011

இழப்பின் உள்தோற்றம்


நிர்வாண மழை நிற்கும்
தெருவினில்
ஏக்கத்துடன் மறைகிறாள்
அவ்வப்போது
பரிச்சயமான சிறுமியொருத்தி..

என்னென்று உற்று நோக்க
முறைப்புகள் மட்டுமே பதிலாய்...
நனைகிறாயா என்றவுடன்
நகைத்து விட்டு
மழையோடு கதைக்கிறேன் என்கிறாள்..

உறுத்தும் விழிகளினூடே
உட்புகுந்த மறுகணம்
தனிமை அடைத்த
நாற்சுவர்களுக்குள் நான்,
யூகிக்க விட்டு வைக்கவில்லை
மணித்துளிகள்..

செவிகளைக் கூராக்க
ஒரே குரல்தான்..
விசும்பலாகவும், ஏளன நகைப்பாகவும்
அக்குரல்
மிச்சப்பட்டிருந்த அச்சத்துடன் துரத்துகையில்,
"க்ரீச்" ஒலியுடன்
கதவுகள் திறக்கப்பட
ஓடுகிறேன் நான்..

"என்னப்பா செய்யுது?"
என் வியர்வையைத்
துடைத்து விட்டு கேட்கிறாள்
சிவந்த விழிகளுடன்
என் 6 வயது மகள்..

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14127:2011-04-14-07-48-09&catid=2:poems&Itemid=265

Monday, April 11, 2011

சாரல்களின் மெல்லிசை



மழை பயிற்றுவிக்கும்
பேச்சுத்துளிகள்
சில யுகங்களை
கடந்திருக்கும் யதார்த்தம்
நமக்கு மட்டுமே உட்பட்டது..
.
சாரலில் மயங்கியிருந்த
உன் மடிமீது
துயில் கொள்கின்றன
சொடுக்கப்படும்
என் விரல்கள்..
.
நிலவுகளை அள்ளித் தெளிக்கும்
உன் கரங்களில்
என்னை முழுதாய்
ஏந்திக் கொள்ளும்
அழகினையும் கற்றுத்தான் வைத்திருக்கிறாய்..
.
நிதம் நமக்கான
குறிப்புகளின் வெற்றிடத்தை
நிரப்பி விடுகின்றன,
அள்ளியெடுத்துக் கதைக்கப்படும்
ஒன்றிரண்டு வண்ணக்கவிதைகள்...
.
வெட்கத்தோடு நூலிழையில்
பின்னப்படும் தென்றல்..
அது வீசும் உன் முகவரியில்
இப்படித்தான் ஒருசில சாரல்கள்
காதல் நுகர்கின்றன...

இசை மழைகிறது... மழை இசைகிறது...

- தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041010&format=html

Tuesday, April 5, 2011

பழியின் நுழைவாயில்



நிலவொழுகும் நள்ளிரவில்
கள்ளிச்செடி முட்களின்
குருதி வண்ணம்
மேனியெங்கும்
புள்ளிகளாய் வழிந்து கொண்டிருந்தன..

விவேகம் விலக்கப்பட்டு
வேகம் மட்டுமே உருவமாய்
தொடர்கிறது
கனத்துப் போன உயிரொன்றின் பயணம்..

அவ்வேகம்
இன்றுவரை துளியளவும்
எதிர்படாததாகவே
தெரிவதில்
வியப்பொன்றும் இருக்கவில்லை..

இதோ தென்பட்டு விட்டது
அதற்கான புற்று வளை..
பெருமூச்சுகள் தீர்ந்திட
சிறு துவாரம் வழி
நுழைந்தும் விட்டாகியது..

அடுத்த சில நொடிகளில்
கையில் கடப்பாரையுடன்
துரத்தியவன்
வெள்ளை நுரை
கக்கி கீழ் விழுந்தான்..

நீலம் பாய்ச்சி
நரகத்தின் விளிம்பில்
அவனை உட்புகுத்தி
அருகிருந்த புதருக்குள்
சற்றும் அரவமின்றி
மறைந்தது
மற்றுமொரு அரவம்..


- தேனு

நன்றி கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13976:2011-04-05-08-10-44&catid=2:poems&Itemid=265

Monday, April 4, 2011

நின்றாடும் மழை நாள்


மழை துவங்கும் நாளொன்றில்
இரகசியமாகச் சிலாகித்து
லயித்திருந்தேன்
தேநீர் கோப்பையுடன்..
.
சன்னல் கம்பிகளோடு
ஒத்திருக்கும் மழைத் துகள்கள்
ஒய்யாரமாய் விழுந்திடும்
என்னறையில்
அழையா விருந்தாளியென
தனிமையின் மீள்வருகை..
.
கோப்பை வெறுமையைக்
கவிழ்க்க மனமின்றி
தொலைத்த தருணங்களைப்
பிரசுரிக்க
இறுக்கம் தளர்த்தி வைக்கிறேன்
மூன்று கால் நாற்காலியில்..
.
மழை நிறங்களை
இரசிக்கும் பட்சத்தில்
துளி துளியாய் சாரலைத்
தேக்கி வைக்கும்
தேநீர் கோப்பையின் யுக்தி
உணர்ந்திட்டது போலும்
மெல்ல மூடிய சன்னல்...
.
மழையின் மிச்சத்தில்
கண்டுணரா பிரதிகளாக
நிகழ்வதை மறந்து
இறந்த காலத்தின் உச்சத்தில்
துயில் கொள்கிறோம்
நானும்,
நெற்றி பரப்பின் ஒரு துளி சாரலும்...
.
 - தேனு

நன்றி திண்ணை