Thursday, December 27, 2012

குளத்துப் பூனையும் காலப் பறவையும்





வெண்ணிலா இல்லாத ஓரிரவில்
என்னை வந்தடைகிறது சாம்பல் நிறப் பூனை...
காலங்களூடே பயணிக்கும்
மந்திரக் குளத்தைக் காண்பிக்கிறேன்,
என்னோடு வா என்கிறது..
வெகுநாட்களான பயணத்திற்குப் பிறகு
நானும் பூனையும்
வெண்ணிற குளத்தைக் கண்டறிகிறோம்..
ஒவ்வொரு நாளும் இரவில்
பூனை மட்டும் குளத்திற்குள் செல்கிறது.
மறுநாள் நிறம் மாறி
செந்நிறப் பறவையுடன் கழித்த காலங்களை
தன் ரோமங்களின் நிறங்களில் கதைக்கிறது.
எதிர்காலத்தின் நிகழ்வுகளைக்
காண்பிக்கும் பறவையைக் காணும்
நொடிகளை எதிர்பார்க்கத் துவங்குகிறேன்.
பூனை உறங்கிய நாளொன்றில்
பறவையைத் தேடி குளத்திற்குள் சென்று
காலச்சுழலில் சிக்கிக் கொள்கிறேன்...
வற்றிய குளத்தின் கரையில்
பெருத்த வயிறுடன் அமர்ந்திருக்கிறது
தன்னந்தனியாய்
சாம்பல் நிறப் பூனை...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6134

Saturday, December 22, 2012

பூவண்ண மழையின் ஓர் இதழ்





சாரல் தீண்டும் மௌனஇரவின்
மழைத்துளி ஒவ்வொன்றையும் விரல்களில் ஏந்தி
தன்னுயிர் சுவாசத்தால்
வண்ணத்துப்பூச்சியென மாற்றி
நட்சத்திரப் பூவனத்தில்
விடுத்துக் கொண்டிருந்தாள் யாழினி..

சிறகடித்துப் பறக்கும் ஒவ்வோர் துளிக்கும்
ஒரு வண்ணக்கவிதை கணக்கென
வண்ணத்துப்பூச்சி உடலெங்கும்
தன் கன்னங்களின் நிறம் குழைத்து
வரைந்து கொண்டிருந்தாள்..

அவளை வண்ண வண்ணமாய் ரசித்துக்
கண்சிமிட்டியபடி சிலிர்த்திட்டு பறந்திருந்தது
பூவண்ண மழையிரவு...


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5271

Monday, December 17, 2012

உலர்த்தப்படும் பழுப்புகளின் நிறம்


ஒரு வகையான உரையாடலுக்குப் பிறகு
உடைகள் முழுதும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நிரம்பியிருகின்றன,
பழுப்பு நிற திட்டுகள்..

காலநீர்மை உடைகளின் மையத்தில் 
ஒரு அன்பின் இயற்பியலையோ 
ஒரு இறுக்கத்தின்  வேதியலையோ
வலிந்தளிக்கும் பட்சத்தில்
திட்டுகள் இலகுவாய்
நிறம் மாறத் துவங்கியிருந்தன..

சொற்களின் உணர்வு வீரியத்தில்
பழுப்புகளை இழுத்துப் பிழிந்து
யதார்த்தக்கம்பங்களின்
ஒரு பிடிக்கும்
மறு பிடிக்குமான
தொலைவில் பிழியப்பட்டு உலர்கின்றன..

உலர்த்திய உடையின் நுனிகளில்
சொட்டு சொட்டாய் வழிந்து கொண்டிருந்தது
நிறமற்று வெறுப்பு நீர்..

- தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6123

Tuesday, December 11, 2012

நிலவதனி என்றொரு அரசி






உடலெங்கும் உயிர்ப்புகளை
செருகிக் கொண்டு நடக்கிறாள் நிலவதனி,
அவளது விழிகளின் ஓரத்தில் அமர்ந்திருக்கும்
மின்மினிகள் அரவமற்று சிரிக்க,
காற்றலைகளின் போக்கில்
ஒரு செவ்வண்ண வனத்தை
அடைகிறாள்..
வனத்தைக் கிழித்து பாயும் நிறமற்ற நதியை
ஒரு மீன்குடுவையில் நிரப்பி
திருப்தியுடன் திரும்புமவள்
வழியில் ஈர்க்கும் விட்டில்களையும்
ரீங்காரமிடும் சில்வண்டுகளையும் அணைத்து
வேகமாகத் தன் வனத்தை அடைந்து மரிக்கிறாள்.
மரித்தவள் கைகளில் இருந்து
மெல்ல குடுவை நழுவி
நதி உருளகரைகளில்
மெள்ள மெள்ள
நிலவதனி மலர்கள் பூக்கத் துவங்குகின்றன..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6123

Thursday, December 6, 2012

இனிக்கும் விரல்களின் சுவை



நகங்களின் விளிம்பில்
உயிர்க்கும் நீர்வண்ணங்களையும்,
உள்ளங்கையின் மையத்தில்
வான்நிறைக்கும் மீள்சிறகுகளையும்
கைவீசி கைவீசி பறக்கவிட்டு,
முகம் முழுக்க பிசுபிசுத்தபடி
இனிப்பு நிலா
மீண்டும் வேண்டுமென்கிறாள்
விரல்கள் முழுதும்
ஏக்கவண்ணங்களுடன் யாழினி...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6110

Monday, December 3, 2012

வெளியாகும் விடத்தின் ஒரு துளி




விடத்தினை ஒத்திருக்கும் பானத்தின் ஒரு துளி
நீண்டதொரு சுவாசக் கோப்பையில்
மெள்ள பயணிக்கிறது..
.
பயணத்தின் ஒவ்வொரு அடியிலும்
உயிர்ப்பின் மீள்சிறகுகளை
யதார்த்தமாய் பொசுக்கிக் கொண்டு
வெறுப்பின் உமிழ்நீரால்
இலகுவாய் வாசல் திறந்து கீழிறங்குகிறது...
.
வேதிவினை விளைவுகளால்
மாற்றத்தை உருவாக்கி
வீழ்அணுக்களை உயிர்ப்பிக்க எண்ணி
ஏமாற்றநீர்மையில் நழுவுகின்றன
துளிரன்பின் தீத்துகள்கள்..
.
உயிர்ப்பின் மையத்துளியை
நோக்கிப் பயணித்த
வார்த்தைபாணத்தின் விடத்தால்
மெள்ள மெள்ள 
நிறைகிறது சுவாசப்பை...

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6110