Sunday, January 19, 2014

மீள்வருகையின் உணர்நிமிடம்



*

இரவின் கரங்களை மெல்ல ஒடித்து
வெப்பமேற்றிக் கொண்டிருந்தாள் நிலவதனி.
குளிரும் வெப்பமும் சமநிலையில் பரவியிருந்த அறையின் 
மூலையில் மெல்ல எட்டிப் பார்த்தன
ஒரு சர்ப்பமும் ஒரு அரத்திப்பழமும்...
பழத்தை விரும்பி சுவைக்க
யத்தனித்தவளை இழுத்து அணைத்தது
சர்ப்பம்..
மெல்ல சர்ப்பத்தை விழுங்கி
சிறகுகள் படபடக்க அறை முழுதும் பறந்து
தவித்தது அரத்திப்பழம்..
விழிகள் திறந்து பார்த்திருந்தவளை
நெருங்கி
அங்கங்களில் சிரிப்புத்தூரிகையில்
வயதின் உபாதையென ஒரு கோட்டோவியத்தை
வரைய துவங்கியது..
வண்ணமற்ற கோடுகளின் இறுதியில்
ஒரு சர்ப்பத்தையும் அரத்தி மரத்தையும்
இட்டு அவளுக்குள் புதைந்து மறைந்தது..
புழுவென நெளிந்து கொண்டிருந்தவள்
நீர்த்திவளைகளுக்கு மத்தியில்
உறங்கிப்போனாள்,
பூவிடியலில் நீர்ச்சிறகுகள் முளைத்து
வண்ணத்து இளம்பெண்ணாய் மாறி இருந்தாள் நிலவதனி..

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23611:2013-04-16-06-18-46&catid=2:poems&Itemid=265

No comments:

Post a Comment