Friday, January 24, 2014

படியும் வெயிலின் நெடி


Photo Courtesy - Ashok Saravanan

*
நாளின் துவக்க நிகழ்வொன்றின் ஆழத்திற்கு
சாளரத்தின் விரல் பிடித்து
இறங்கிக் கொண்டிருகிறேன்.
சன்னமாய் பேசிக் கொண்டிருந்தோம்
வெயிலும் நிழலும், நீயும் நானும்...

வெயில் நீளும் தர்க்கத்தின்
இரு குரலற்று ஒர்குரலாய் மாறிப்போன தருணத்தில்
உயிர் பெற்று விட்டது வெயில்கீற்று..
*
முற்றுப்புள்ளியற்றதான ஒருகோண உரையாடலுக்கு
நிழலாய் தலை திருப்பிக் கொள்கிறேன்,
சாளரத்தின் வழி விழிகளை வெளிக்குச் செலுத்த..

நீ பின்னிருந்து விடுத்த வசைச்சொற்கள் மட்டும்
வெயில் கலந்து திட்டு திட்டாய் படிகிறது
சாளரக் கம்பிகளில்..

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=26035:2014-01-23-13-10-35&catid=2:poems&Itemid=265

Sunday, January 19, 2014

மீள்வருகையின் உணர்நிமிடம்



*

இரவின் கரங்களை மெல்ல ஒடித்து
வெப்பமேற்றிக் கொண்டிருந்தாள் நிலவதனி.
குளிரும் வெப்பமும் சமநிலையில் பரவியிருந்த அறையின் 
மூலையில் மெல்ல எட்டிப் பார்த்தன
ஒரு சர்ப்பமும் ஒரு அரத்திப்பழமும்...
பழத்தை விரும்பி சுவைக்க
யத்தனித்தவளை இழுத்து அணைத்தது
சர்ப்பம்..
மெல்ல சர்ப்பத்தை விழுங்கி
சிறகுகள் படபடக்க அறை முழுதும் பறந்து
தவித்தது அரத்திப்பழம்..
விழிகள் திறந்து பார்த்திருந்தவளை
நெருங்கி
அங்கங்களில் சிரிப்புத்தூரிகையில்
வயதின் உபாதையென ஒரு கோட்டோவியத்தை
வரைய துவங்கியது..
வண்ணமற்ற கோடுகளின் இறுதியில்
ஒரு சர்ப்பத்தையும் அரத்தி மரத்தையும்
இட்டு அவளுக்குள் புதைந்து மறைந்தது..
புழுவென நெளிந்து கொண்டிருந்தவள்
நீர்த்திவளைகளுக்கு மத்தியில்
உறங்கிப்போனாள்,
பூவிடியலில் நீர்ச்சிறகுகள் முளைத்து
வண்ணத்து இளம்பெண்ணாய் மாறி இருந்தாள் நிலவதனி..

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23611:2013-04-16-06-18-46&catid=2:poems&Itemid=265

செம்பவளவனமும் கந்தர்வ ம(ர)ணமும்


*

அடர்ந்த செம்பவள வனத்தை
வெண்சிறகுகளையும் வண்ணப்புன்னகையையும் கொண்டு
அரசாள்கிறாள் நிலவதனி..
அரண் மறைந்த ஓர் நாள்,
வனத்தின் மையத்தில்
கருஞ்சிறகுகளுடனும் வெண்புன்னகையுடனும்
கந்தர்வனொருவனை
அவள் காண நேர்கிறது.
அவனும் அவளும் விழிகளாலேயே
சில தினங்களுக்கும் 
மொழியினாலே சில தினங்களும்
பேசிக் கொள்கின்றனர்..
தங்களை மறந்த ஓர் காலத்திற்குப் பிறகு
உடல் மூலமாகவும் பேசிக்கொள்ள
தீப்பொறிகள் மெலிதாய் கிளம்பி
சிறகுகள் அழிந்ததையும் மறந்து
துயில் கொள்கின்றனர் தினமும்..
எண்ணி 30 வாரங்களுக்குப் பிறகு
வனமே கொண்டாடும் விதம்
இளவரசியின் வருகை நாள் குறிக்கப் பெறுகிறது.
இன்னும் கூடுதலாக 90 நாட்கள் கழித்து
அரசியும் இளவரசியும் 
அரியணையில் அரசாண்டபடி சிரித்துக் கொண்டிருந்தனர்.
எழுதப்படாத ஓர் சரித்திரத்தை
மௌனத்தால் கதைத்துக் கொண்டிருந்தன,
சாம்பல் துகள்களுக்கிடையில் கருஞ்சிறகுகளும்
வெண்புன்னகையும்...

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23611:2013-04-16-06-18-46&catid=2:poems&Itemid=265

கிறுக்கலின் நீரொளி

*

இரவுக்கும் வெளிக்குமான
ஒரு மெல்லிய இடைவெளியில்
நிரம்பி விடுகிறது இட ஒதுக்கீட்டிற்கான விகிதம்..

மீள்கனவினுக்கு இழுத்துச் செல்லும்
ஒற்றையடி ப் பாதையில் நான்,
நாங்களாகவே நிறைத்திருக்க,
ஓர் ஒளியாண்டின் தொலைவை
சுலபமாய் கடந்தடைய
சுடர் அரங்கேற்றத்தின் வழிகாட்டுதலில்
நகர்கிறோம் வெகுவேகமாய்..
பெண்ணொளியோ ஆணொளியோ
ஏதும் வேற்றுமையறியாதோர்
உலகத்தின் விளிம்பில்
விதைகளுடன் சுடர்கிறோம்
அழகான தீபங்களின் ஒளியாய்
ஒளி ஒளியாய்...
வெளிச்சமாய் நிரம்பி வழிகிறது,
காகிதத்தின் மையிருள் பிரதிபலிக்கும்
ஓர் ஒளி விளக்கின் கிறுக்கலில்..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6134