ஒவ்வொரு உலகமாகச் சென்று
தனக்கான மௌனக்கதையைச்
சொல்லிச் செல்கிறது பொம்மை..
.
முதல் உலகில் குழந்தை ஒன்று
நகைத்தபடி
பொம்மையை அணைத்து ரசிக்கிறது..
.
இரண்டாமதில் இருவண்ண பட்டாம்பூச்சிகளை
விழிமுழுதும் நிறைத்த சிறுமி
பொம்மையிடம் சிறகுகளைக்
கதைத்து பறக்கிறாள்...
.
மூன்றாமதில் கைப்புத்தகங்களை
அறைமுழுதும் நிரப்பிய பெண்
ரகசியங்களை
பொம்மையிடம் அரங்கேற்றுகிறாள்..
.
நான்காம் உலகில் வசித்துவந்த
உதிரம் சுவைக்கும் கழுகிடம்
சிலாகித்துத் நிகழுலகிற்கு
உணர்வற்றுத் திரும்பும்
கைகால் முறிபட்ட பொம்மை,
ஐந்தாம் உலகின் சுவர்களில்
வண்ணங்கள் இழந்து கிழிக்கப்பட்ட
ஒரு புகைப்படத்தில் சென்று
அமர்ந்து கொள்கிறது...
- தேனு
நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5918
No comments:
Post a Comment