Sunday, November 25, 2012

மெள்ள மீள்வடிவம் பெறும் மௌனம்

கனவுகளின் நீர்மம் கெட்டிபடத் துவங்கும் நிகழ்வுகளில்
வண்ணமற்றச் சிறகுகளுடன் 
சில எழுத்துக்கள்
மொய்த்துக் கொண்டிருக்கின்றன..
.
மௌனமென்ற ஒற்றை இடத்தைப்
பூரணமாக்கும் எந்தவொரு எழுத்தையும்
இக்கணம் வரைக் கண்டதாய்
துளியும் நினைவில்லை..

ஒரு முறை வீழ்ந்தால் மறுமுறை என்ற
முயற்சி திருவினையாதலும்
தோற்றுப் போகிறது
வெற்றிரவின் ஓர் ஓரத்தில் வீழும் இச்சிறகுகளுக்கு...

வீரியத்துடன் வெளிவரும் புன்னகையில்
புறந்தள்ளுதல்
அவ்வளவு எளிதாயில்லை
என்கிறது வள்ளுவன் எழுதிச் சென்ற இன்சொல்..

ஈடிணையற்ற மௌனத்தை
நொசிவிழைக்கயிறால் தொடுக்க முயல்கின்ற
எழுத்துக்கள்
ஒரு மெல்லிய ஒளியின் விளிம்பில்
துவண்டு நிற்க,
வண்ணங்களற்ற சிறகுகளை
கனவுகளின் நீர்மத்தைத் துடைத்தெடுத்து
நீர்வண்ண இறகுகளால்
மெள்ள நிறைகிறது எழுத்துக்களாலான சிறகுவனம்..


 - தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5918

No comments:

Post a Comment