Friday, August 10, 2012

ஒரு சொல்லில் உறைந்திடும் நிமிடம்



அப்படியான ஒரு சொல்லில்
தனித்திருக்கிறேன்...

மிகத் துல்லியமான இழையில் தாழ பறக்கும்
ஓர் எழுத்துத்தும்பியின் 
மிச்ச உயிர்
கோர்வையென்னும் நொசிவிழை கயிறால்
பிணைக்கப்பட்டிருக்கிறது..

ஒவ்வோர் எழுத்துத்தும்பியின் பின்புறமும்
மெல்ல பறக்கும்
வெள்ளைச்சுவரின் மௌனத்துளிகளைக்
கொள்வதற்கான
இருப்பிலில்லை அறை..

கொள்ளாத் துளிகளின்
ஓர் எல்லையில் எழுத்தும்
மற்றுமோர் எல்லையில் மௌனமுமாய்
ஒரு நகைப்பிலோ,
ஒரு வரைதலிலோ,
ஒரு கோட்டோவியத்திலோ,
அடங்கா அர்த்தங்களால் ஆகிறது
சொல், ஒரு சொல்..

அப்படியான ஒரு சொல்
முழுதாய் வியாபித்திருக்கிறது
எனதிந்த இரவினை...


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5727

No comments:

Post a Comment