Friday, January 9, 2015

சின்ட்ரெல்லாவின் ஒற்றை தவறது எதிர்விசை

**
மூன்று இறப்பைக் கடந்து
விழித்திருக்கிறாள் சின்ட்ரெல்லா..
உயிர்சிறகுகளுடன் கந்தர்வ வனத்தை
அடைய தவமிருக்கும் அவள்,
கந்தர்வ அரங்கு தயாராகிறதை அறிந்து
சிறகுகளற்ற தன்னிலையில் விம்மிச் சரிகிறாள்..
கண்ணீரின் விளிம்பில் பிறக்கும் மாய யட்சி
சூதாடத் துவங்கியதும்,
யட்சிக்கும் சின்ட்ரெல்லாவிற்கும் மத்தியில்
உணர்சிறகுகளுக்கு இன்பக்கனவுகளென ஒற்றை தவறுக்கான
உத்திரவாதம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றது..
வண்ணச் சிறகுகள் கொண்டு அரங்கை அடைகிறாள்
சின்ட்ரெல்லா,
எதிர்ப்படும் கந்தர்வனை இறுகப் பற்றிக் கொள்கிறாள்..
ஆடிக் களைத்து இதழ் தேடி
முத்தச்சிறகைப் பதிக்க,
இதழில் ஒரு வித பரிச்சய மணத்தை
உணர்கிறாள் உள்ளெங்கும்..
வெளியேறும் நோக்கில் பரிச்சய நொடிகள் கரைந்து விடுகின்றன..
மறுநாள் மீண்டும் செல்கிறாள்..
கலந்தாடுகிறாள்..
இதழ் தீண்டுகிறாள்..
உயிர் உணர்கிறாள்..
கந்தர்வனின் குருதி தோய்ந்த விழிகளும் குரூரச் சிரிப்பும்
வரவேற்க நிலையற்று நிற்கிறாள்..
மறுநிமிடம் மூச்சின் இறுதி வளைவை இறுகப் பற்றி கொண்டு ஓடுகிறாள்..
விடுத்து வந்த அரணத்தின் நினைவால்
அறையின் ஒரு மூலையில் அமர்ந்து
காலை அறுத்துக் கொண்டிருக்கிறாள் சின்ட்ரெல்லா..

 - தேனு

No comments:

Post a Comment