இருண்டு விழும் கால அறைக்குள்
இரவின் ஒவ்வொரு அடுக்காய் களைந்து
முத்தப்பிரதிகளை உயிர்வாயுவின் தீண்டலால்
சேகரிக்கிறாள் நிலவதனி..
அவளின் போதையுற்றவன் மெல்ல
தன்னிலை இழக்கும் தருணத்துள்
முத்தங்களை அவிழ்ப்பதில் அவளிடம் என்றுமே ஓர் துல்லியம்.
அவனுக்குள் கனவுகள் அரங்கேறும் நொடியில்
உடலெங்கும் கீறல்களால் நிரம்பி வழிய விடுகிறது
அவளின் முதல் முத்தம்.
ரோமங்கள் பற்றி எரிந்து
சாம்பல் சில்லுகளாய் சிதறுகின்றன..
நினைவுகளின் கூடங்களை ஆட்டுவிக்க
உச்சி முதல் பாதம் வரை ஊடுருவி
இரண்டாம் முத்தம்
தன்னிலையை நிரூபித்து விட்டு நகர்கிறது உயிர்வழி..
மூளையின் ஓரிடத்தில் வலியின் தெறிப்பு,
திண்ணமாய் நிலைக்க தவறும்
நினைவின் கால்கள் தத்தளிக்கின்றன..
உயிரைக் குழைத்து வீறிடும்
மூன்றாம் முத்தம்
உணரணுக்களை தின்று விடும் சப்தம்
இரை தேடிச் சிறகடிக்கும் பருந்துகளின் அலறலாய்
மிக சன்னமாய் கேட்கும் அறையின் மூலைகளில்..
நான்காம் முத்தத்தின் இறுதியில்
உலர்ந்து விழும் உடலை எரித்து முடிந்தபின்
நகங்களையும் இதழ்களையும்
கூராக்க யத்தனிக்கிறாள் நிலவதனி
நாளைக்கான நான்கு முத்தங்களுக்கு..
- தேனு
No comments:
Post a Comment