Friday, August 10, 2012

தனித்து விழும் ஒற்றை செம்பருத்தி


காற்றில் எழுதும் மொழியை
கற்கும் சேலைத் தலைப்பில்
பதிந்துபோன பாசத் துகள்களை
வெறித்தபடி திரிவாள் செம்பருத்தி..
எப்பொழுதாவது வந்துசெல்லும் மழையிடமும்
தனிமையின் விவாதங்களை
முன்வைக்கும் எண்ணமன்றி
தெறித்துவிழும் சாரல்களோடு
கூடிக்கூடி மௌனம் பேசுவாள்..
சென்ற மாதத்தின் நேற்றைய முன்தினம்
கிடத்தி வைத்திருந்த கணவனை
கண்ணீரிலும் அலறலிலும்
எழுப்பத் தெரியாதவளாய்தான்
கொல்லைப்புற மலர்களுக்கும் அவள் அறிமுகம்...
நடுக்கூடத்தின் சுவர்களில்
வழிந்துகொண்டிருந்த பால்யத்தை
எட்டிப் பிடிக்க தாவித்தாவிக் குதித்து
கீழ் விழுந்தவளைச் சுற்றி
எறும்புகள் இன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன...
நாளையோ மறுநாளோ
அவளாய் எழக்கூடும்...
இவ்வளவுக்கும்
அரவமின்றி அறைந்து கொண்டிருக்கின்றன,
பெயரற்ற
முற்றத்துப் பாதச்சுவடுகள்..
 - தேனு 
நன்றி கீற்று,

நீண்ட புதின கோப்பையின் மீளாத்துளிகள்

அதீத வண்ணத்தில் நிறைந்த முயல்குட்டி
என் மடியில் மீதிருந்த புதினத்தின்
முதல் பக்கத்தில் வந்தமர்கிறது...
பக்கங்கள் மோதும் விளிம்புகள்
ஒவ்வொன்றிலும் தனக்கான இரகசியங்கள்
நிறைந்திருப்பதாய் மெல்ல என்னிடம் சொல்கிறது..
எனையும் பக்கங்களுக்குள் உடனிழுத்து
புதினத்தினுலகில் இருவருமாய் துள்ளித்துள்ளி
பயணிக்கத் துவங்குகிறோம்..
முதலில் ஒரு மாளிகையினுள்ளே
போதிமரமும் திரிசூலமும்
போட்டியிட்டு சிலரை வதைப்பதைக் காண்கிறோம்..
அடுத்து வந்த பக்கங்களில் சங்கும் சக்கரமும்
நந்தவனத்து மலர்களை
நரம்புகளில் தொடுத்துக் கொண்டிருக்கின்றன..
மேலும் செல்கையில் வெள்ளிச்சிலுவை
சதைகளைச் சுமந்தபடி ஆணிகளை நோக்கிப்
பயணிப்பதைக் கண்டு ஓடுகிறேன்...
இப்படியாக இரத்தம்படிந்த எழுநூற்றி எண்பத்தியாறாம்
பக்கத்தின் விளிம்பில் நான்
தனியாக இவ்வுலகிற்கு மீண்டு வருகிறேன்..
நிதமும் புதினத்தைத்
திறந்துவைத்துக் காத்திருந்தும்
இப்பொழுதெல்லாம்
முயல்குட்டி வருவதேயில்லை...

 - தேனு 

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=20405&Itemid=139

வதையின மொழி

மழையால் உருபெற்ற சாலையை
வண்ணச்சிறகுகளால்
அளந்து கொண்டிருக்கிறது சாம்பல் பறவை..
ஒவ்வொரு துளியையும்
அது தன் சிறகுகளின் தனித்த அறையில்
ரசனையுடன் சேமிக்க தவறுவதேயில்லை...
சிறகுகளின் நரம்புகளில் வேற்றுலகிற்குச்
செல்லும் வழியை இரகசியமாய்
காக்கிறது..
சிறகுகளைப் பிய்த்தெரியும்
விரல்களுடன் ஊர்ந்து வருகிறது
சர்ப்பமொன்று..
பறவையுடன் நட்பு கலந்து
உலகங்களுக்குள் வண்ணமாய் பயணிக்கவும்
கற்கிறது..
உச்சியில் சுவையேறிய
அடுத்த நிமிடம்
துடிதுடிக்க பறவையைச் சுவைக்கிறது..
இரத்தத்தில் நனைந்து சுகந்த சர்ப்பம்
மெள்ள மெள்ள
மற்றுமோர் உலகை நோக்கி
பயணித்தபடி
மனிதனாய் உருமாறத் துவங்கியிருக்கிறது...

 - தேனு 

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=20312&Itemid=139

மௌனத்தின்கீழ் வீழும் மீளாச்சிறகுகள்


மின்கம்பி மட்டையின் மௌன அசைவுகளில்
மின்னித் தெறிக்கும்
பட் பட் ஒலிக்கீற்றுகள்...
**
இரவின் ஓர் ஓரத்தில்
ஒன்றாய் கூடிக்கொண்டிருந்தன
உயிரற்ற சிறகுகள்..

- தேனு

நன்றி உயிரோசை ,

இருமொழிப் பறவைகள் நிறைந்த அறை..


**

வெயில் துளிகளைப் பருகிக் கொண்டிருந்த
இரு பறவைகளை
கூண்டுடன் சிலாகிப்பவளுக்காக
வீட்டிற்கு அழைத்து வந்திருந்தேன்...
தன் சிறகுக் கதைகளை முழுதும்
கேட்டுக் கொண்டிருந்த கூண்டைவிற்று
பறவைகளுடன் மௌனங்களை
உச்சரிக்கத் துவங்கினாள்..
*
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியென
அறையெங்கும் மௌனங்களை மட்டுமே
பறவைகளுக்குப் பருகக் கொடுத்தாள்..
காற்றை புறக்கணிக்கும் குடுவைக்குள்
படுத்தவளைக் கண்ட
இரு பறவைகளும் காலத்தைக் கடந்து
சிறகடிக்கத் துவங்கின...
அவைகளுக்கான அவள் மௌன வனமெங்கும்
வண்ணமிசைச் சிறகுகளை நிரப்பி
ஒன்று ஒளிவண்ணத்திலும்
மற்றுமொன்று ஒலிவண்ணத்திலும்
சிறகடித்துப் பறந்திருந்தன...
**

- தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5727

ஒரு சொல்லில் உறைந்திடும் நிமிடம்



அப்படியான ஒரு சொல்லில்
தனித்திருக்கிறேன்...

மிகத் துல்லியமான இழையில் தாழ பறக்கும்
ஓர் எழுத்துத்தும்பியின் 
மிச்ச உயிர்
கோர்வையென்னும் நொசிவிழை கயிறால்
பிணைக்கப்பட்டிருக்கிறது..

ஒவ்வோர் எழுத்துத்தும்பியின் பின்புறமும்
மெல்ல பறக்கும்
வெள்ளைச்சுவரின் மௌனத்துளிகளைக்
கொள்வதற்கான
இருப்பிலில்லை அறை..

கொள்ளாத் துளிகளின்
ஓர் எல்லையில் எழுத்தும்
மற்றுமோர் எல்லையில் மௌனமுமாய்
ஒரு நகைப்பிலோ,
ஒரு வரைதலிலோ,
ஒரு கோட்டோவியத்திலோ,
அடங்கா அர்த்தங்களால் ஆகிறது
சொல், ஒரு சொல்..

அப்படியான ஒரு சொல்
முழுதாய் வியாபித்திருக்கிறது
எனதிந்த இரவினை...


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5727