Friday, May 20, 2011

வரையப்படும் ஊடக சிறகுகள்




இலகுவாய் தன்னிலை மறந்து
ஓர் சிட்டுக்குருவி
தன் வண்ண சிறகுகள்
விரித்துப் பறந்து கொண்டிருந்தது,
மேசை மீதான புத்தகத்தின்
அட்டைப்படத்தில்...



தலை சாய்த்து விழிக்குமென்
பார்வை செவிகளுக்கு மட்டுமென
சிறகுகள் படபடக்கும்
மெல்லியதோர் சங்கீத நாதம்
நிறைகிறது...




மின்னல் பிம்பங்கள் என்னுள்
நெளியும் தருணம்
மெலிதான முறையில் ஒரு ஊடகம்
அரவமின்றி வகுக்கப்பட,
அறையில் ஆராவாரமற்று
என்னை வெறித்தபடி நிற்கிறது
ஒற்றை மரம்...



மேசை மீதான
புத்தகத்தின் அட்டைப்படத்தில்
வண்ணச் சிறகுகளுடன் நான்...



 -  தேனு


நன்றி கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14662:2011-05-16-17-00-51&catid=2:poems&Itemid=265

Tuesday, May 17, 2011

ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்


வார்த்தைக்கூடை நிரம்ப
பலவண்ண பொய்களுடன்
வெளியேறுகிறேன்
காலைவெயில் நுகரும்
வியர்வையுடன்...
.
ஒவ்வொரு பொய்
துழாவியெடுத்து
சூடிக் கொள்ளும் வேளையிலும்
கண்ணீர்த்துளிகளுடன்
என் கற்பனை தோட்டத்தில்
ஒரு மலர் உதிர்கிறது...
.
நிலவு நீண்டிடும்
இருளினை அள்ளிப் பருகி
நாளின் இறுதியில் நுழைகிறேன்,
நிர்வாணமாய் நிற்கிறது
அருமை தோட்டம்..
.
மறுநாள் வியர்வை நுகர
நான் வெளியேறுகையில்
தோட்டம் நிரம்ப
வண்ண மலர்கள் பூத்துச்
சிரித்திருக்கின்றன..

- தேனு

நன்றி திண்ணை,

Tuesday, May 10, 2011

இரட்டை ரோஜா இரவு


சத்தமாக
ஒரு உரையாடல்
மௌனித்திருந்த வேளையில்,
இரு உடல்களுடன் தனிமை நாற்றமும்
அறை முழுக்க
கட்டவிழ்க்கப்பட்டிருந்தது..
.
மௌனித்திருந்த உரையாடலின்
முன்குறிப்பு
ஒற்றை இரவிலோ,
ஒற்றை கவிதையிலோ
நிச்சயமாக நிறையாது எனக்கு..
.
பார்வைகளில் பரிமாறப்படும் ஒரு மன்னிப்பில்
நான் நானாகவும்
அவள் நானாகவும் ஒன்றிணைய
அறையின் விளக்குகள்
வெள்ளை நிறத்தில் மழை பொழிவதைப்
விரிவாகச் சொல்வதற்கில்லை...
காதல் என்னும் ஒற்றை சொல்
போதுமானது..
.
பிறகான மிச்ச இரவில்
எங்களுக்குள்ளான இடைவெளியை
நிரப்பிடுகின்றன,
ஒன்றோடொன்று புணரத்துவங்கிய
விழிகளும் விரல்களும்..

 - தேனு

நன்றி திண்ணை ,

Thursday, May 5, 2011

மீனின தேவதை


அழகிய நீர்த்தேக்கமொன்றில்
தங்க மீன்கள் சில
அலைகளென சிலாகித்துக் கிடந்தன..
ஒவ்வொன்றாய் வெளியெடுத்து
இதழ் பதித்து தனக்கான நீர் ஜாடியில்
விட்டுக்கொண்டிருந்தாள் சிறுமியொருத்தி..
மௌனம் பேசிய
தேவதை  நிற மீனை
இறுதியாக விடுத்ததும்
தன்னை மறந்து
ரசனைகளின் இளவரசியாய்
நின்றிருந்தாள்..


அடுத்த சில நிமிடங்களில்
நீர்த்திவளைகளுக்கு மத்தியில்
ஆச்சர்ய விழிகளுடன்
தங்க நிற நுகர்வுச்செதில்கள்
அவளுக்கு வெளிவர
துவங்கியிருந்தன..


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4268
 

Monday, May 2, 2011

இருப்பினைப் பருகும் மொழி


நான் நானாக இருப்பதில்லை..
உணர்வுச் செதில்களில்
உதிரத்தின் சுவை
நிரம்பிடும் வேளைகளில்
நான் மறக்கப்படுகிறேன்..

மிச்சம் வைத்திருக்கும்
சுவை நரம்புகள்
பசியின் எச்சிலை
திரட்டி விழுங்கத்
துவங்கி விட்டன..

எண்ணச் சாளரங்கள் வழி
உட்புகுத்த சதைபடிந்த
கூரிய நகங்கள்
மட்டுமே இருக்க என்னை மீறிய
ஒரு தாகத்தில் தத்தளிக்கிறேன்..

பின்னிருந்து என் கழுத்து
இழுக்கப்படுவதாய்
சந்தேகித்து உணர்வதற்குள்
கொல்லப்படுகிறேன் நான்..
என் சடலம் முன்னமர்ந்து கோடரியுடன்
விம்மி அழுபவளை
ஒன்றும் செய்யாதீர்கள்...
அவள் பெயர் தமிழ்..
சில சமயங்களில் நான்
நானாக இருப்பதில்லை..

 - தேனு

நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31104302&format=html