Friday, January 24, 2014

படியும் வெயிலின் நெடி


Photo Courtesy - Ashok Saravanan

*
நாளின் துவக்க நிகழ்வொன்றின் ஆழத்திற்கு
சாளரத்தின் விரல் பிடித்து
இறங்கிக் கொண்டிருகிறேன்.
சன்னமாய் பேசிக் கொண்டிருந்தோம்
வெயிலும் நிழலும், நீயும் நானும்...

வெயில் நீளும் தர்க்கத்தின்
இரு குரலற்று ஒர்குரலாய் மாறிப்போன தருணத்தில்
உயிர் பெற்று விட்டது வெயில்கீற்று..
*
முற்றுப்புள்ளியற்றதான ஒருகோண உரையாடலுக்கு
நிழலாய் தலை திருப்பிக் கொள்கிறேன்,
சாளரத்தின் வழி விழிகளை வெளிக்குச் செலுத்த..

நீ பின்னிருந்து விடுத்த வசைச்சொற்கள் மட்டும்
வெயில் கலந்து திட்டு திட்டாய் படிகிறது
சாளரக் கம்பிகளில்..

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=26035:2014-01-23-13-10-35&catid=2:poems&Itemid=265

Sunday, January 19, 2014

மீள்வருகையின் உணர்நிமிடம்



*

இரவின் கரங்களை மெல்ல ஒடித்து
வெப்பமேற்றிக் கொண்டிருந்தாள் நிலவதனி.
குளிரும் வெப்பமும் சமநிலையில் பரவியிருந்த அறையின் 
மூலையில் மெல்ல எட்டிப் பார்த்தன
ஒரு சர்ப்பமும் ஒரு அரத்திப்பழமும்...
பழத்தை விரும்பி சுவைக்க
யத்தனித்தவளை இழுத்து அணைத்தது
சர்ப்பம்..
மெல்ல சர்ப்பத்தை விழுங்கி
சிறகுகள் படபடக்க அறை முழுதும் பறந்து
தவித்தது அரத்திப்பழம்..
விழிகள் திறந்து பார்த்திருந்தவளை
நெருங்கி
அங்கங்களில் சிரிப்புத்தூரிகையில்
வயதின் உபாதையென ஒரு கோட்டோவியத்தை
வரைய துவங்கியது..
வண்ணமற்ற கோடுகளின் இறுதியில்
ஒரு சர்ப்பத்தையும் அரத்தி மரத்தையும்
இட்டு அவளுக்குள் புதைந்து மறைந்தது..
புழுவென நெளிந்து கொண்டிருந்தவள்
நீர்த்திவளைகளுக்கு மத்தியில்
உறங்கிப்போனாள்,
பூவிடியலில் நீர்ச்சிறகுகள் முளைத்து
வண்ணத்து இளம்பெண்ணாய் மாறி இருந்தாள் நிலவதனி..

 - தேனு

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23611:2013-04-16-06-18-46&catid=2:poems&Itemid=265