Friday, April 29, 2011

கூண்டிற்கருகில் கிளிகள்



விடியல் அழகில்
என்னிடம்
செய்தித்தாளினை
விழிவிரித்து கதைக்க
சுதர்சன் தாத்தா அங்கில்லை..


சில தேக்கரண்டி அன்பைக்
கலந்து
அதிசுத்தமான அய்யங்கார் காபியை
ஆற்றிக் கொடுக்க
மங்களம் பாட்டியும்தான்..


மௌனம் பேசும்
அக்குறுகிய அடுக்களையையும்
கம்பீர நாற்காலியையும்
வெறித்தபடி
அமர்ந்திருக்கிறேன் நான்..


காலையில் இருந்து
வெற்று சுவருடன்
கதைத்துக் கொண்டிருக்கிறது
வானவில் அலைவரிசை...
நேற்று மாலை
செய்தித்தாள்களின்
குண்டுவெடிப்பு
தலைப்புச் செய்தியை..


- தேனு

நன்றி உயிரோசை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4244

Wednesday, April 27, 2011

காய்த்துப் போன பிஞ்சு விரல்கள்



வீடு விட்டு வீடு
விட்டுப் போன உறவுகள்
வனப்புடன் நிலைத்திருக்கின்றன
அவளது நினைவுகளில் மட்டும்..
அக்கரை விட்டு இக்கரை..

நீளும் நாட்களின் அசுத்தங்கள்
மத்தியில்
மெல்லியதோர் ஓலத்துடன்
பம்பரமாய் சுழல்வது
அவளுக்கே உரித்தான சங்கதி
என்பதில்
ஐயமேதும் இருப்பதில்லை..


இக்கரை..
காய்த்துப் போய் தேய்ந்தொழுகும்
ரேகைகளின் ஊடே
வெள்ளைநோட்டுக்களின் வாசம்..
விழிநீரில் கரைந்திட்ட
நிம்மதி முடிச்சுகள்
அனிச்சையாக கிளறப்படுதல்
அவள் குற்றமல்லவே..

அக்கரை...
அஞ்சலில் வந்துசேரும்
அந்நோட்டுக்களில்
துளி துளியாகச் சொட்டிக் கொண்டிருந்தது
சிறிதும் நெடியற்ற
அவளது வியர்வை..

 - தேனு

நன்றி இளமை விகடன்,