Friday, August 10, 2012

இருமொழிப் பறவைகள் நிறைந்த அறை..


**

வெயில் துளிகளைப் பருகிக் கொண்டிருந்த
இரு பறவைகளை
கூண்டுடன் சிலாகிப்பவளுக்காக
வீட்டிற்கு அழைத்து வந்திருந்தேன்...
தன் சிறகுக் கதைகளை முழுதும்
கேட்டுக் கொண்டிருந்த கூண்டைவிற்று
பறவைகளுடன் மௌனங்களை
உச்சரிக்கத் துவங்கினாள்..
*
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியென
அறையெங்கும் மௌனங்களை மட்டுமே
பறவைகளுக்குப் பருகக் கொடுத்தாள்..
காற்றை புறக்கணிக்கும் குடுவைக்குள்
படுத்தவளைக் கண்ட
இரு பறவைகளும் காலத்தைக் கடந்து
சிறகடிக்கத் துவங்கின...
அவைகளுக்கான அவள் மௌன வனமெங்கும்
வண்ணமிசைச் சிறகுகளை நிரப்பி
ஒன்று ஒளிவண்ணத்திலும்
மற்றுமொன்று ஒலிவண்ணத்திலும்
சிறகடித்துப் பறந்திருந்தன...
**

- தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5727

ஒரு சொல்லில் உறைந்திடும் நிமிடம்



அப்படியான ஒரு சொல்லில்
தனித்திருக்கிறேன்...

மிகத் துல்லியமான இழையில் தாழ பறக்கும்
ஓர் எழுத்துத்தும்பியின் 
மிச்ச உயிர்
கோர்வையென்னும் நொசிவிழை கயிறால்
பிணைக்கப்பட்டிருக்கிறது..

ஒவ்வோர் எழுத்துத்தும்பியின் பின்புறமும்
மெல்ல பறக்கும்
வெள்ளைச்சுவரின் மௌனத்துளிகளைக்
கொள்வதற்கான
இருப்பிலில்லை அறை..

கொள்ளாத் துளிகளின்
ஓர் எல்லையில் எழுத்தும்
மற்றுமோர் எல்லையில் மௌனமுமாய்
ஒரு நகைப்பிலோ,
ஒரு வரைதலிலோ,
ஒரு கோட்டோவியத்திலோ,
அடங்கா அர்த்தங்களால் ஆகிறது
சொல், ஒரு சொல்..

அப்படியான ஒரு சொல்
முழுதாய் வியாபித்திருக்கிறது
எனதிந்த இரவினை...


 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5727