Wednesday, February 8, 2012

இருள்சிறகுகளுடன் நடனமாடும் அதிர்வலைகள்..


இரவைக் குழைத்து நிறைக்கும்
மொட்டை மாடியின்
ஒரு முனைக்கும் மறு முனைக்குமான இடைவெளியில்
நிழலாடிக் கொண்டிருக்கிறது
ஒரு உருவம்..

மனச்சாளரங்கள் தாழிட்டிருக்கும் பட்சத்தில்
அவனோ அவளோ நிகழ்த்திக்கொண்டிருக்கும்
மௌனப் பரிமாற்றம்
ஆறாம்விரல் கைபேசிக்கு மட்டுமென
மிச்சப்படுகின்றது வெளிச்சம்..

இருளின் கிளையில் அமர்ந்து
வார்த்தைகள் தேடுமெனக்கு
படர்ந்திருக்கும் இருளில்
நிலவு மட்டுமன்றி அதிர்வலைகளும்
பொழிந்து கொண்டுதானிருக்கின்றன..
   - தேனு
 
நன்றி உயிரோசை,

Thursday, February 2, 2012

வண்ணமிசைக்கும் விழிச்சிறகுகள்



*
மழை வண்ணங்களை இழைத்து
தன்னுடல் முழுக்கத் தீட்டிக் கொள்ளும்
இரு மீன்குஞ்சுகள்
மௌனமாக நீந்திக் கொண்டிருக்கின்றன,
நீர்த்தழும்பும் கானல் ஒலியில்
இரவுநதி உறங்குவதாய் சொல்வதை
நம்புவதற்கில்லை...
**
வாவென்று என்னையும் உடனிழுக்க
இரவுநதி முழுதும்
நாங்கள் நாங்களாகவே
இழைந்து நிறைந்திருக்கிறோம்...

நீந்தும் மீன்குஞ்சுகளை அள்ளி
தன்னுள் படரவிட்டு
சூரியக் கூண்டின் தேடலிற்காக
கனவுச்சிறகுகளை விரல்பிடித்து
அழைத்துச் செல்கிறாள் யாழினி..
*

 - தேனு

 நன்றி உயிரோசை,