Photo Courtesy: Karthik Alagesan
மஞ்சள் நிற மழையை
சிக்கனமின்றி கக்கிக் கொண்டிருந்தது
ஒரு மின்கம்பவிளக்கு..
கம்பத்தை ஒட்டி ஒருபுறம்
மூன்றடுக்கு மாடி குடியிருப்பு,
மறுபுறம் வைக்கோலும் சாணமும் நிறைந்த
மண் மேடு..
அடுக்கு மாடியின் முதல் தள வீட்டின்
சாளரத்தின் வழி
மேட்டில் இரு பசுக்கள் கட்டி இருப்பதை
நிதமும் காணலாம்.
ஒன்று மட்டும் பல மாதங்களாய்
இரவு முழுதும் ஓயாமல்
கத்திக் கொண்டிருக்கும்,
சத்தம் தவறாத நாளுமில்லை,
சுற்றத்தில் திட்டாத மனிதரும் இல்லை..
ஓர் பின்னிரவின் இடையில்
சத்தம் நின்ற தருணத்தில்
உறக்கம் தொலைத்த விழிகள்
அதன் பிறகான இரவில் அடங்க மறுத்தன..
மறுநாள் வெளிக் கிளம்பி
மேட்டிற்குக் கண்களை ஓட விட,
ஒரு மூலையில் கோணிப்பை
ஆளுயர எடையை மறைத்து இருந்தது,
கனத்த மௌனத்துடன்
கடந்தேன் சற்று தொலைவை..
சில நிமிடங்களில்
மனமெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது
அம்மா என்ற சத்தம் மட்டும்
மீண்டும் மீண்டும்..
- தேனு
நன்றி கீற்று,
No comments:
Post a Comment