Friday, August 10, 2012

தனித்து விழும் ஒற்றை செம்பருத்தி


காற்றில் எழுதும் மொழியை
கற்கும் சேலைத் தலைப்பில்
பதிந்துபோன பாசத் துகள்களை
வெறித்தபடி திரிவாள் செம்பருத்தி..
எப்பொழுதாவது வந்துசெல்லும் மழையிடமும்
தனிமையின் விவாதங்களை
முன்வைக்கும் எண்ணமன்றி
தெறித்துவிழும் சாரல்களோடு
கூடிக்கூடி மௌனம் பேசுவாள்..
சென்ற மாதத்தின் நேற்றைய முன்தினம்
கிடத்தி வைத்திருந்த கணவனை
கண்ணீரிலும் அலறலிலும்
எழுப்பத் தெரியாதவளாய்தான்
கொல்லைப்புற மலர்களுக்கும் அவள் அறிமுகம்...
நடுக்கூடத்தின் சுவர்களில்
வழிந்துகொண்டிருந்த பால்யத்தை
எட்டிப் பிடிக்க தாவித்தாவிக் குதித்து
கீழ் விழுந்தவளைச் சுற்றி
எறும்புகள் இன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன...
நாளையோ மறுநாளோ
அவளாய் எழக்கூடும்...
இவ்வளவுக்கும்
அரவமின்றி அறைந்து கொண்டிருக்கின்றன,
பெயரற்ற
முற்றத்துப் பாதச்சுவடுகள்..
 - தேனு 
நன்றி கீற்று,

நீண்ட புதின கோப்பையின் மீளாத்துளிகள்

அதீத வண்ணத்தில் நிறைந்த முயல்குட்டி
என் மடியில் மீதிருந்த புதினத்தின்
முதல் பக்கத்தில் வந்தமர்கிறது...
பக்கங்கள் மோதும் விளிம்புகள்
ஒவ்வொன்றிலும் தனக்கான இரகசியங்கள்
நிறைந்திருப்பதாய் மெல்ல என்னிடம் சொல்கிறது..
எனையும் பக்கங்களுக்குள் உடனிழுத்து
புதினத்தினுலகில் இருவருமாய் துள்ளித்துள்ளி
பயணிக்கத் துவங்குகிறோம்..
முதலில் ஒரு மாளிகையினுள்ளே
போதிமரமும் திரிசூலமும்
போட்டியிட்டு சிலரை வதைப்பதைக் காண்கிறோம்..
அடுத்து வந்த பக்கங்களில் சங்கும் சக்கரமும்
நந்தவனத்து மலர்களை
நரம்புகளில் தொடுத்துக் கொண்டிருக்கின்றன..
மேலும் செல்கையில் வெள்ளிச்சிலுவை
சதைகளைச் சுமந்தபடி ஆணிகளை நோக்கிப்
பயணிப்பதைக் கண்டு ஓடுகிறேன்...
இப்படியாக இரத்தம்படிந்த எழுநூற்றி எண்பத்தியாறாம்
பக்கத்தின் விளிம்பில் நான்
தனியாக இவ்வுலகிற்கு மீண்டு வருகிறேன்..
நிதமும் புதினத்தைத்
திறந்துவைத்துக் காத்திருந்தும்
இப்பொழுதெல்லாம்
முயல்குட்டி வருவதேயில்லை...

 - தேனு 

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=20405&Itemid=139