Friday, May 25, 2012

மெலிதாய் வீழும் வெயிலின் பயணச்சிறகு..


வெம்மையின் நகர்வை
உள்வாங்கியபடி
வார்த்தைகளுடன் பயணிக்கிறேன்.

முகமற்ற இருள் வழியும்
மெல்லியதோர் கைகுலுக்கலில்
வெம்மையின் உதிர்கோடுகள்
வியூகம் புரிந்தனவாய் நீள்கின்றன..

சமத்துவ நிழல் குழைத்து
வண்ணமிடும் பிரிவுத் தோரணையின்
விரிவுடன்
ஒருவண்ண பட்டாம்பூச்சி வனத்தில்
மிகத் துல்லியமாய் மறைகிறாய்..

மௌனப்பூக்கள் வீழ்கின்ற சாலையில்
இருப்பின் வலிகளைச் சுமந்து
சொல்லின் இல்லாமுகவரி நோக்கி
ஊர்ந்து கொண்டிருக்கின்றன,
இணக்கம் களையப்பட்ட சுவடுகள்..

இருளை நோக்கி நகரும் வெம்மையின் பயணம்
ஒரு நத்தையின் நகர்வை
ஒத்திருக்கின்றது..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5300

Monday, February 27, 2012

வார்த்தைகளின் கோர்வை விட்டுச் செல்லும் இணக்கம்






தனிமை நீளும் எனக்கான உலகில்
வார்த்தைகளின் இருப்பைக் கொண்டு என் பக்கம் வந்தமர்கிறாய்..
மௌனம் நிரம்பி வழியும் அறையின்
ஓர் மூலையில்
மெலிதான சலனத்துடன் பயணிக்கிறது
காற்றில் நிரம்பும் சொற்களின் எழுத்துப் படிமம்..

சாளரக் கம்பிகளின் நீளத்தில்
எழுதப்படவிருக்கும் வாக்கியச்சாரல்கள்
காத்திருப்பு வண்ணங்களைத் தீட்டி
உறவின் இணக்கம் பற்றிய குறிப்புகளை
சுவர்முழுதும் வரைகின்றன..

மெலிதாய் உரசிச் சென்ற தென்றல்
நெடுநாட்களுக்குப் பிறகான பார்வைகளை
உணர்வின் மைகொண்டு கண்களில்
நீர்கோர்த்துக் கொள்கிறது..

தனிமையின் உலகில்
இருப்பின் வர்ணனையை அணிந்திருக்கும்
வார்த்தைகளைக் கொண்டு என் பக்கம் வந்தமர்கிறாய்..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5271