Friday, July 29, 2011

உயிர்ப்பூக்களின் மெல்லிய இதழ்கள்


வெயில் முளைத்திடும்
அடிவானத்தின் விளிம்பினில்
விளக்கொளியைத் தேடி மரிக்கின்றன
விட்டில் பூச்சிகள் சில..

மரித்திட்ட பூச்சிகளின்
சாம்பல் துளிகளில்
உயிர்ப்புகளைப் பூசினாற்போல்
உயிர்த்தெழுகிறது விடியல் பூவிதழொன்று..

மணக்கும் அப்பூவிதழில்
மௌனித்திருந்தது,
இருப்பிற்கும் இறப்பிற்கும்
இடையில்
மெல்லியதோர்  ஊடல்மொழி...

காலங்களறியாது
நீர்க்குமிழ்களின்  வண்ணத்தில்
தன்னைத்தானே வரைந்து
நிதர்சனமாய் நகைத்து நிற்கிறாள்
வெப்பச் சிறகுகளுடன் சிறுமி யாழினி...



 - தேனு 

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4503

Monday, July 4, 2011

ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..



வானெங்கும் கருந்திரள்கள்
நிறைத்திடும்
இரவொன்றின் நேர்க்கோட்டில்
அசையும் வளைவுகளென
நெளிகின்றன இதயத்துடிப்புகள்..

நெற்றி வகிடின் இறுக்கத்தினில்
செவ்வானம் ஒன்றை
எழுதிடச் சொல்லி நிற்கையிலே
அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில்
சிறகு விரிக்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள் சில..

வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க
ஆயிரம் இருப்பினும்
ஒற்றை வெட்கம்
சூடும் உன்னழகினை
யாதென்று எழுதி வார்க்க?

ஒவ்வொரு வார்த்தையையும்
கோர்த்தெடுத்து உறக்கத்திற்கு
பதில் உரைக்கிறேன் நான்..
நிலாக்களைச் சிதறடித்து
விளக்குகளைத்
தனிமையின் இருப்பில் விட்டு
அருகருகே அமர்ந்திருக்கிறோம்,
இரு இணை விழிகளில்
ஒற்றைக்காதலுடன்..

- தேனு

நன்றி திண்ணை
http://puthu.thinnai.com/?p=1701

நன்றி கீற்று,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15322:2011-06-26-10-25-02&catid=2:poems&Itemid=265