Tuesday, January 3, 2012

மௌனக் கழுகு வட்டமிடும் வார்த்தைகள்

 



வார்த்தைகளுக்குச் பாதகமான
மௌனக்கழுகுகள்
உயர வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன..

பிரியங்களால் தம்மைப்
போர்த்திக்கொள்ளும் செயலிகளின்
எதிர்வார்த்தைகள் யாவும் நீர்த்துளிகளாலான
செந்நிற குடுவையில்
சேகரித்து வைக்கப்படுகின்றன..

மௌனம் வீறுகொண்டு அலறுவதை
பொறுத்தாளத் தெரியாத மிருகங்கள்
உப்புக் கரிக்கும் அவ்வொவ்வொரு வார்த்தையையும்
நக்கிய பின் அடுத்தடுத்து
காதுகளைப் பொத்தி நிற்கின்றன...

மௌனக்கழுகுகள்
உடைந்துருளும் தருவாயில் நிற்கும்
குடுவைக்கொன்றாக
உயர வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5037

Monday, December 5, 2011

ஒரு பிஞ்சு கைப்பிடி இரவின் வண்ணச் சாயம்



அடர்தூறலுடன் நின்றுபோன
மழை இரவின் பிம்பம்
இருள் தூரிகையினால்
வெளிர்நிறங்கொண்டு தீட்டப்படுகிறது
என்கிறாள் தேவதை யாழினி..
.
இரவிற்கும் மழைக்குமான
ஒரு குறுகிய கைக்குலுக்கல் மூலம்
அபகரிக்கப்படும் நிலவுகள்
அவள் உறக்கங்கள் பற்றிய குறிப்பொன்றை
தங்களகத்தே மறைக்கின்றன..
.
அது பொய்யாகவோ மெய்யாகவோ
கட்டவிழ்க்கப்படும் வேளை
அவை லயிக்கும் கனவுகளில்
நிரந்தரமாய்
இளமஞ்சள் நிறத்தைக் கக்கி நிற்கிறது
படுக்கையறை மின்நிலவு..

 - தேனு

நன்றி உயிரோசை,
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5013