Saturday, January 6, 2018

யாருமற்ற க்ரீச் க்ரீச் ஒலியின் அடர்த்தி

யாருமற்ற அறையின் அடுத்திருக்கும் உள்வாசல் காற்றின் மண்துகள்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறது..
*
மத்தியில் கோடுகளாய் நீண்ட இரும்புக்கம்பிகள் வாசல் முழுதும் துணை கரங்களை நீட்டி ஒன்றோடொன்று உரசாமல் பேசிக் கொண்டிருக்கின்றன..
*
ஒரு மூலையில் பச்சை நிற நெகிழி நீர்க்குழாய் தனிமை காற்றை உள்வாங்கியபடி மெலிதான இரைச்சலோடு சொட்டும் மழையை விரிவாய் சொல்வதற்கில்லை..
*
இடை கனத்திருந்த சாம்பல் நிற அணில் கம்பிகளின் நீளத்தில் ஒரு எல்லைக்கும் மற்றதுக்குமாய் தாவித் திரிந்து ஊர்ந்தும் ஓடியும் விளையாடிக் கொண்டிருக்கிறது....
*
மின்னல் மறையும் நொடிப்பொழுதில் "சத்" என்ற ஓசையுடன் இடைகனம் தரையைக் கண்டதை உணர்ந்து சாம்பல் நிறம் க்ரீச் ஒலியை எதிரொலிக்கிறது எங்கெங்கிலும்..
*
நெகிழி நீர்க்குழாய் சொட்டும் மழையில் இடை கனத்தின் க்ரீச் க்ரீச் ஒலி சிறிது சிறிதாய் தேய்வதை உள்வாங்கிப் பெருத்துக் கொண்டிருக்கிறது வாசல்..
*
தன்னலம் கலந்த வெயில் மழை ஓட்டின் வழி மண்துகளோடு துளி துளியாய் இன்னமும் வழிந்து கொண்டுதான் இருக்கிறது... - தேனு

நன்றி கீற்று,
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/27750-2015-01-26-08-01-27?code=1&state=tt